Tuesday, 1 September 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 03

 
திரு.ராமு அவர்களின் திறமையை இன்று போற்றாதார் இல்லை ....
தமிழகத்தில் திறமை மிக்க ஒளிப்பதிவாளர் இருக்கிறார் என்று பெருமைப்படுகிறார்கள்.
எனக்கு ஒரு பெரும் குறை இருந்தது. நமக்கு மிக அருகாமையில் நம்மோடு சேர்ந்து வாழும் திறமை மிக்க பலரை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் அந்தக் குறை.
அப்படிக் கவனிக்கப்படும் நிலையில் ஏதாவது செயலாற்றி ஆனாலும் உடனடியாக அவருடைய திறமையையும் வெளிநாட்டு நிபுணர்களின் திறமையையும் ஒப்பிட்டுப் பார்த்து, எடை போட்டு நிறுத்திப் பார்ப்பது போல், "வெளிநாட்டு நிபுணர்களின் திறமை எங்கே ?
இவருடைய திறமை எங்கே !...
புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்கிறது என்று கேலி பேசுவார்களே தவிர ....... அவர்களுக்குள்ள வாய்ப்பும் வசதியும் இவருக்கு இல்லாதிருந்தும் எவ்வளவு சிறப்பாகக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார் என்று உண்மை நிலையை உணர்ந்து பாராட்டுவதே கிடையாது.
பாராட்டப் படவேண்டியவர் தான் என்று தெரிந்தாலும் பாராட்டமாட்டார்கள்.
அவரைப் பாராட்டினால், தான்,அவரைவிடத் திறமையில் குறைந்தவரென்றும், தனக்குத் தெரியாததை அந்த மனிதர் செய்து காண்பித்து விட்டதாகவும் ஏற்று கொண்டதாகிவிடுமே என்ற கீழ்ப்பட்ட எண்ணம் தான் அவர்களை இவ்வாறு இருக்கச் செய்கிறது.
ஆனால் திரு. இராமு அவர்கள் விஷயத்தில் மட்டும் எப்படியோ எல்லோரும் ஒரு மனதோடு பாராட்டினார்கள்; புகழ்ந்தார்கள். ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் இது நல்ல அறிகுறியாகும்... ஆனால் இதோடு நிறுத்தி விடக்கூடாது. நமது அரசியலார் இப்படிப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள ஒளிப்பதிவு முறைகளை நன்கு தெரிந்துகொண்டு வரவாய்ப்பு அளிக்க வேண்டும். கலைத்துறையில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களை அரசியலார் நாட்டின் கலைச்செல்வமாக எண்ணி அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இதைத் திரு. இராமு அவர்களுக்காக மட்டும் சொல்லவில்லை. இவரைப்போல் திறமை மிக்கவர்கள், ஆனால் வாய்ப்புப் பெறாதவர்கள் நமது தமிழகத்தில் பலருண்டு, அவர்களுடைய ஆர்வத்தையும் உழைப்பையும் திறமையையும், தமிழகத்தின் கலைப் பகுதிக்குப் பெருமை தேடித் தருவதற்காக அரசியலார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பட உரிமையாளர்களையோ, இயக்குநர்களையோ பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இவர்களைப் போன்ற மற்ற கலைஞர்களையும் பாராட்ட வேண்டும்; பரிசுகள் வழங்க வேண்டும்.
சில காட்சிகள் நான் விரும்பியபடி படமெடுக்கும் வசதிகள் இல்லாமலிருந்தன. ஆனால் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு அக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்து, பிறர் திகைக்கும் வகையில் நிறைவேற்றித் தந்தவர் திரு. இராமு.
ஒவ்வொரு காட்சியையும் இங்கு எடுத்துக் கூற நான் விரும்பவில்லை . ஏனெனில் படம் முழுவதும் திரு.இராமு இருக்கிறார் என்று சொன்னால் போதுமென்று நினைக்கிறேன்.
வண்ணக் காட்சிகளை இதற்கு முன் இவர் படமெடுத்தது கிடையாது. நான் வண்ணக் காட்சி எடுக்கப்போவதாகக் கூறிய போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால் பயம். தனக்கு முன்னோடியாக இருப்பவரிடம், அவர் வண்ணக் காட்சி படமெடுக்கும் போது தன்னிடம் கூறுமாறு பலமுறை தெரிவித்தும், அவர் எந்தத் தகவலும் திரு. இராமுவுக்குத் தரவில்லையாம்; ஆனால் அவரோ திரு. இராமுவுக்கு மதிப்புக்குரிய நண்பர்.
திரு. இராமு என்னிடம் சொன்னார்: "வண்ணக் காட்சியைப் படமெடுக்க வேறு யாரையாவது ஒளிப்பதிவாளராக ஏற்பாடு செய்யுங்கள்; நானும் சேர்ந்து பணியாற்றுகிறேன்" என்று....
"உங்களால் எடுக்கப்பட்டு நன்றாக இருந்தால் வண்ணக் காட்சி படத்தில் இருக்கட்டும். இல்லயாயின் வண்ணக் காட்சியே வேண்டாம். வண்ணக் காட்சியை எப்படிப் படமாக்குவது என்பதற்குப் பரிசோதனைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார்" என்றேன்.
பரிசோதனைக்காக ஒரு நாள் கால்ஷீட்போட்டு, எனது நாடக மன்ற நடிகை ஒருவரை வேடமிடச் செய்து படமெடுக்கப்பட்டது.
படமும் பம்பாய்க்குப் போய், பிரதி எடுத்து அங்கிருந்து திரும்பி வந்த குறிப்பில், மிக நன்றாக இருக்கிறது. இப்படியே எடுத்தால் போதும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தைப் பார்த்தோம்; மகிழ்ந்தோம்; திரு. இராமுவின் மகிழ்ச்சியை அளவிட்டுச் சொல்ல முடியாது.
அப்போது தான் அவர் சொன்னார்; தான் ஒரு நண்பரைக் கேட்டதாயும், அவர் ஏமாற்றிவிட்டதாயும், அதன் பிறகுதான் என்னிடம் வேறு ஒளிப்பதிவாளரை வண்ணக் காட்சியைப் படமாக்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் சொன்னார்...

இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்கள்...!

ஆனால் அந்த நண்பர்களே கண்டு பொறமை கொள்ளும் நிலைக்குத் திரு.இராமு தன்னுடைய உழைப்பால் உயர்ந்துவிட்டார்..... அப்படி அவர் பாராட்டப்படும் நிலைக்கு உயர்ந்துவிட்டார் நாடோடி மன்னன் என்பது அவருடைய ஒளிப்பதிவுத் திறமைக்கு ஒரு சான்று தானே.
ஒளியை எண்ணும்போதே ஒலியின் நினைவும் உடனே வந்து விடுகிறது. நாடோடி மன்னன் படத்தில், ஒலியமைப்புச் செய்த திரு.மேனன் வாகினி ஸ்டுடியோவில் நிரந்தரமாகப் பணியாற்றுகிற பல ஒலிப்பதிவாளர்களில் ஒருவர்.
ஒலிப் பதிவு செய்பவர்களில் பலர் நாடோடி மன்னன் படத்தின் துவக்கத்தில் பணியாற்றினார்கள்.
எல்லோரும் திறமை மிக்கவர்கள் தான். ஆனால் ஒரு நடிகனோ நடிகையோ உணர்ச்சியோடு நடிக்க வேண்டிய கட்டம் படமாக்கப்படும் போது அது சில நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டி வரும். முதல் நாள் வசனங்களை எப்படிப் பேசினார், எந்த பாவத்தோடு பேசினார், எவ்வளவு உரக்கப் பேசினார் என்பதை அறிந்தவர்தான் மறுநாளும் ஒழுங்காக அந்தக் கட்டத்தினுடைய உணர்ச்சி குன்றாமல் ஒலிப்பதிவு செய்ய முடியும். அதைவிட்டு முதல் நாள் பதிவு செய்தவர் வேறு, மறுநாள் பதிவு செய்பவர் வேறு என்றிருந்தால் மறுநாள் பதிவு செய்கிறவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அந்தக் கட்டத்தின் முழுத் தன்மையும் தோன்ற ஒலிப்பதிவு செய்ய முடியாது.
இதைப் போன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது. ஒரு காட்சியைப் பார்த்தபோது தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறவருடைய குரல் ஆரம்பத்தில் ஒரு மாதிரியும், இடையில் வேறுபட்டும், கடைசியில் இன்னொரு வகையிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் பிறகு படமுழுவதற்கும் ஒரே ஒலிப்பதிவாளர் வேண்டும் என்று வற்புறுத்தினேன். திரு.மேனன் அன்று முதல் படம் முக்கால் பங்கு வளர்ந்த பிறகு அவர் என்னிடம் "மறு பதிவு (ரீரிக்கார்டிங்) செய்யப்போவது யார்?" என்று கேட்டார்.
"நீங்கள் தான் செய்ய வேண்டும்" என்றேன்.
அவரால் நம்ப முடியவில்லை ! சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் கேட்டார், "யார் மறுபதிவு செய்யப்போவது? நானா? என்று.
"ஏன் சந்தேகம்?" என்று திருப்பிக் கேட்டேன்.
இதுவரை பலர் என்னிடம் இப்படிச் சொன்னதுண்டு. "ஆனால் இங்கு வேலை முடிந்ததும் அவ்வளவுதான். புகழ் படைத்த யாரையாவது வைத்து மறு ஒலிப்பதிவைச் செய்து கொள்வார்கள். என்று சொன்னார்கள்.
"வாகினியில் மறுபதிப்பு செய்வதாயின் நீங்கள்தான். என்று உறுதி கூறினேன். அப்பொழுதுதான் ஒரு படத்தில் வேலை செய்து, உறுதிமொழியும் கொடுக்கப்பட்டு, கடைசியில் வேறொருவரை வைத்து மறுபதிவு செய்து கொண்டார்களாம். இதனையும் சொல்லி, "அவர்கள் மூன்று நான்கு லட்சத்தில் படமெடுத்தவர்கள். அவர்களே என்னைக்கொண்டு பதிவு செய்யப்பயந்தார்கள் என்றால் பதினெட்டு லட்சம் செலவு செய்து படமெடுக்கும் தாங்கள் எப்படிப் பரிசோதனைக்குத் துணிய முடியும். என்ற சந்தேகத்தில் கேட்டதாகச் சொன்னார். மறு பதிவு செய்யும் வேலை நெருங்கியது.
நான் மேனன் தான் வேண்டுமென்றேன். என்னுடன் பணியாற்றியவர்களில் பெரும் பாலானவர்கள் என்னிடம் துக்கம் விசாரிப்பது போல், "மேனனிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்?' என் று கேட்டார்கள்.
ஒரு முக்கியமான நண்பரிடம் சொன்னேன்: "நான் நாடோடி மன்னன் படம் எடுப்பதே ஒரு பரிசோதனை. என் விருப்பப் படி எல்லாம் செய்து அதற்கு என்ன பதில் மக்களிடமிருந்து கிடைக்கிறது என்ற சோதனையில் இறங்கியிருக்கிறேன். முன் அனுபவமில்லாத என்னை நீங்கள் இயக்குநராக ஏற்றுக் கொண்டது மல்லாமல், பரவாயில்லை என்றும் சொல்ல முடிந்ததென்றால் ஒலிப்பதிவு செய்வதில் முன் அனுபவமுள்ள ஒருவருக்கு அதில் பெரிய பொறுப்பை ஒப்படைப்பது தவறல்ல'' என்று .
இந்த பதில் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றறிந்தேன்.
"எடுத்துப் பார்ப்போம். நன்றாக இல்லையென்றால் வேறு ஆளை மாற்றிக் கொள்ளலாம். என்று சொன்ன பிறகு கொஞ்சம்” ஆறுதலுடன் போனார்.
மறு ஒலிப்பதிவு (ரீரிகார்டிங்) என்பது படத்திற்கு வெற்றியையோ, தோல்வியையோ கொடுப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்வதாகும்.
உணர்ச்சியோடு பேசுகிற பேச்சின் உச்சரிப்புகளையம் கருத்துக்களையும் மக்களுக்குப் புரியாதபடி மறு ஒலிப்பதிவில் செய்துவிட முடியும் ! அது போலவே சாதாரணமாக இருக்கும் கட்டங்களையும் ஒலிகளைச் சரிவரப் பதிவு செய்வதின் வழியாக உணர்ச்சி பொருந்திய கட்டமாகத் தோற்றுவிக்கவும் முடியும். அதுவரை நேரடியாகத் தானே ஏற்றுச் செய்யாத பெரும் பொறுப்பை வெற்றிகரமாகவே நிறைவேற்றித் தந்து, படத்தின் எல்லாக் கட்டங்களையும் சுவையுள்ளதாகச் செய்தவர் திரு.மேனன்.
மறுபதிப்புச் சமயம் பல இரவுகள் தூக்கம் என்பதே இல்லாமல் நான் வேலை செய்து வந்த காலத்தில் என்னுடன் தானும் இருந்து," படம் பிரமாதம்" என்று யாராவது சொல்வார்களானால் அதற்கு உதவி செய்த, அதுவரை தன்னை ஒன்றும் தெரியாதவன் என்று மூலையில் உட்கார வைத்தவர்கள் திகைக்கும் வண்ணம் செயலாற்றிய திரு.மேனனுக்கு வாழ்வில் ஒரு திருப்பமென்றும் வெற்றியென்றும் சொல்லலாமா, கூடாதா?
                                                                                                                                தொடரும் ......

                                                                                                                          

                                                                                                                        

Wednesday, 26 August 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 02
கதையில் அமைக்கப்பட்டிருக்கும் கொள்கைக்கு வெற்றி..... என்று சொல்லலாமல்லவா?...
கதை சரிவர அமைக்கப்பட்டாலும் அதனுடைய உட்கருத்து எந்த அளவிற்கு ஒழுங்காகப் பாத்திரங்களின் தன்மையைக் கெடுக்காமல் சொல்லப்படுகிறதோ (பேச்சின் மூலம்) அதைப் பொறுத்துத்தான் கதைக்கு வெற்றி கிட்ட முடியும்.
சில கதைகளுக்கு ஏற்படும் விபத்து மேலே சொன்ன குறைகளால்தான்.
கதை ஆசிரியர் சில கருத்துக்களை வெளியிட எண்ணி அதற்கு ஏற்றாற் போலக் கதையை அமைப்பார்; பாத்திரங்களையும் தோற்றுவிப்பார்.
ஆனால் வசனம் எழுதும் ஆசிரியர் வேறு கொள்கை படைத்தவராயின் தனது கருத்தை வலியுறுத்துவார்.
அப்போது மூலக் கதைக்கும் அதிலே உள்ள பாத்திரங்களின் தன்மைக்கும், செயலுக்கும், மாறாக அவர்களின் (பாத்திரங்களின்) பேச்சு இருக்கும். இந்த வகையில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக ஒன்றுக்கொன்று இணைப்பற்ற, ஒருமைப்பாடற்ற முரணான முறையில் கதையும் பேச்சு அமைவதால் தான் படங்களுக்குத் தோல்வி பெரும்பாலும் ஏற்படுகிறது."நாடோடி மன்னனைப் பொறுத்த வரையில் வசன கர்த்தாவில் ஒருவரான திரு.கண்ணதாசன் அவர்களுக்கும் எனக்கும் கொள்கைப் பிடிப்பும் குறிக்கோளும் ஒன்றாகவே இருந்ததனால் மேலே சொன்ன குழப்பம் நேரவே இடமில்லாமற் போய்விட்டது. இன்னொரு வசன கர்த்தாவான திரு.ரவீந்திரன் என்னுடைய கொள்கையை நன்கு புரிந்து, தொடர்ந்து என்னுடன் பணியாற்றி வருபவராதலால் நான் அமைத்த பாத்திரங்களின் குணத்தையோ தரத்தையோ மாற்றக்கூடிய எதையும் அவர் செய்யவில்லை.
இந்த இரு வசனகர்த்தாக்களும், குறிப்பாகத் திரு.கண்ணதாசன் அவர்களும் தங்கள் ஆற்றலை நல்லவகையில், தெளிவான முறையில் செயற்படுத்தி நாடோடி மன்னன் வசனப் பகுதிக்கு வெற்றிகிட்டும்படி செய்தன்.
ஆக வசனத்திற்கும் வெற்றி என்று சொல்லலாமல்லவா? அடுத்து, பாடல்கள், மேலே கூறியுள்ளபடி எப்போதும் பாத்திரங்களின் உண்மையான உணர்ச்சிகளை வெளியிடுவனவாக இருக்க வேண்டும்.
சமீப காலமாகச் சில படங்களில் நான் அனுபவித்த அனுபவங்களை நினைவுகூறுவதும் அவற்றுள் ஒன்றையாவது இங்கு வெளியிடுவதும் தேவை என்றெண்ணு கிறேன்.
ஒரு நாள் - ஒரு பட உரிமையாளர் சொன்னார்...
"அடுத்த ஷூட்டிங்... காதல் காட்சி ஒன்று எடுக்கப்பட வேண்டும். கதாநாயகியும் தாங்களும் (என்னைக் குறிப்பிட்டது) சேர்ந்து நடிக்கும் கட்டம் படத்தில் உடனடியாக இருந்து தீர வேண்டியதாக இருக்கிறது.
ஆகையால் காதல் காட்சிக்குத்  தேவையான " ஐடியா - கொடுங்கள்' என்று சொன்னார்; இல்லை,வற் புறுத்தினார். " கதை இன்னமும் முடிவாகவில்லை .
எந்தக் காட்சிக்குப் பிறகு காதல் காட்சி வருகிறதென்று நிர்ணயிக்கப்படவில்லை ... மேலும் கதைப் போக்கில் காதலர்கள் சந்திக்கும் கட்டம் எந்த நிலையில் இருக்கும் என்று இப்போதே எப்படிச் சொல்லுவது?...... என்று கேட்டேன்....
"பரவாயில்லை ..... காதலனும் காதலியும் சந்திக்கும் போது அன்பாகத்தானே பேசுவார்கள். அப்படி ஒரு காட்சி எடுத்துவிட்டால் என்ன?" என்று கேட்டார். ஒருவேளை காதல் காட்சியில் பாடும் பாட்டின் கருத்துக்கள் கதையின் போக்குக்கு, காதல் காட்சிக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதாக இருந்தால் என்ன செய்வது?" என்று கேட்டேன். "தயவு செய்து ஷூட்டிங்குக்கு வாருங்கள். நான் பாட்டு போடச் சொல்லியிருக்கிறேன். பாட்டை "டேப் "பில் பதிவு செய்து அனுப்புகிறேன். மெட்டு நன்றாக இருக்கிறதா, எல்லாத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் இருக்கிறதா, என்று சொல்லுங்கள்'' என்று வேண்டினார்.
முடிவில் பாட்டும் வந்தது. "கண்ணே ... அழகே".... இப்படி எல்லாம் வழக்க மான வர்ணிப்பாகவே இருந்தது.
இப்படிப்பட்ட நிலைமை நாடோடி மன்னனில் ஏற்படவே இல்லை .
படத்தின் துவக்கத்தில் பாடப்படும் பாடல் எங்களது நாடக மன்றத்தின் அட்வகேட் அமரன்" நாடகத் துவக்கத்தில் பாடப்படும் பாடல். .மா. முத்துக்கூத்தன் இயற்றியது. நான் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியில் அவரும் ஒரு அங்கத்தினராக இருப்பதால் எனது கொள்கைக்கும் அவரது கொள்கைக்கும் வேறுபாடு தோன்றவே இடமில்லாமல் போய்விட்டது. அவர் இயற்றிய இன்னொரு பாடல் சம்மதமா'' என்பது. இதில் கூட வேடிக்கையாக, 'ஆனால் கருத்தாழத்தோடு, ஆணும் பெண்ணும் ஒருவர்க்கொருவர் இணைந்து சமமாக இருக்க வேண்டியவர்கள் என்பது மட்டுமல்லாமல், "மீறிப் பசி வந்தாலும் பறவை போலப் பகிர்ந்தே உண்ணலாம்" என்ற உன்னதப் பொதுக் கருத்தையும் எடுத்துக் கூறுகிறார். இது காலத்துக்கோ , மக்களினத்துக்கோ ஒவ்வாதது என்று சொல்ல முடியுமா?......
அடுத்ததாக நான்கு மொழியில் உள்ள பாடல்கள்.
 ஒவ்வொன்றும் அந்தந்த மொழியில் திறமை மிக்க கவிஞர்க ளைக் கொண்டு இயற்றப் பட்டது. எனது கருத்தை அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் மறுப்பு சொல்லாதது ஆதரவோடும் மகிழ்ச்சியோடும் இயற்றித் தந்தார்கள். சிலவார்த்தைகளை மட்டும் கதையின் காட்சிக் கேற்ப மாற்றச் சொன்னேன்.
 ஆனால் மலையாள மொழியில் திரு. பாஸ்கரன் அவர்கள் இயற்றிய போது என்னால் திருத்தப்பட வேண்டிய அவசியமே நேரவில்லை என்பது மட்டுமல்ல; நான் எதிர்பாராத அளவிற்கு நவ நவமான கருத்துக்களையும் அழகுபட வெளிப்படுத்தினார். கவிஞர் சுரதா அவர்களும் எனது அரசியல் கொள்கையைச் சேர்ந்தவர். அவருடைய கொள்கையை அவரது தாய் மொழியில் சொல்லுவதைவிட அவருக்கு இன்பம் தருவது வேறென்ன இருக்க முடியும்.
நான்கு மொழிகளில் தாய் மொழியான தமிழ் மொழிப்பாடலை நண்பர் கவிஞர் சுரதா அவர்கள் இயற்றினார்கள். இந்த பாடலைக் கேட்ட எவரும் பாடலையோ அதில் கையாளப் பட்டிருக்கும் கற்பனைத் திறனையோ போற்றாதவர் இல்லை. பாடலின் முடிவில் முத்தாய்ப்பு வைப்பது போல் “என்றும் இனிதான திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே நீ வருகவே” என்று அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் உள்ள கருத்துக்களையும் இதுவரை யாரும் குறை கூற வோ மறுத்துக் கூறவோ இல்லை என்பது ஒன்றே போதும் - அது சரியானபடி அமைக்கப்பட்டது என்பதற்கு. திராவிடத்தின் ஒற்றுமையும் மொழியின் இணைப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதற்கு அடையாளமாக இதையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா?
"என்றும் இனிதான திராவிடம்' - சொல்லச் சொல்லத் தெ விட்டாததும் பெருமை கொள்ளத்தக்கதும் தன்னையறியாது பூரித்துப் போகும் நிலையை ஏற்படுத்துவதுமான சக்தியாக அல்லவா அது அமைந்திருக்கிறது.
அவர் இயற்றிய இண்னொரு பாடல் "கண்ணில் வந்து" என்பது, இதிலும் சொல்லியிருக்கும் கருத்தும் கவி நயமும் பலரால் பாராட்டப்பட்டிருக்கின்றன. கண்ணே முத்தே... கரும்பே... என்று சொல்வதற்கு மாறாக... " இன்பக் காவியக் கலையே".... போன்ற வார்த்தைகளையும்,
"நீலவானம் இல்லாத ஊரே இல்லை,
உலகினில் மழையின்றி ஏதும் இல்லை "
என்பன போன்ற கருத்தச் செறிவு படைத்த சொற்களையும் இணைத்து இயற்றிய அவரது பாடல்களைப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்.
நகைச்சுவைக் காட்சிக்காக அமைக்கப்பட்ட பாடல் "தடுக்காதே'' என்ற பாடல்..... இதைத் திரு ஆத்மநாதன் அவர்கள் இயற்றினார். இவரும் நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நாட்டிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை ஏற்காதவர்; முற்போக்குக் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றுபவர்.
உழைக்காமல் வாழ விரும்புகிறவர்களுக்குச் சரியான சூடு கொடுத்திருக்கிறார் இந்தப் பாடலின் மூலமாக. "சோறு கண்ட இடம் சொர்க்கமா'' என்ற ஒரு வரியே போதுமே, இவருடைய கண்டனக்குரலின் வலிமையை விளக்க. இன்னொரு பாட்டு.
 "பாடு பட்டாத்தன்னாலே" -
சோம் பேறிகளுக்கும், விதிப்படி நடக்கும் என்று சொல்லி எந்த "முயற்சியும் செய்யாதிருக்கும் நெஞ்சுர மற்றவர்களுக்கும் சாட்டை அடிபோல் தாக்கும் நல்லுரையாகும் இந்தப் பாடல். நகைச்சுவைப் பாடலிலும் கூட நல்ல கருத்தைத் தந்த இதைப் போன்ற பாடல்களை யார் குறை கூறுவார்கள்?.
நண்பர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் நல்ல முற்போக்கு எண்ணங் கொண்டவர். எனது கொள்கைக்கும் அவருடைய கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
நான் உழைப்பாளிகளைப் பற்றியும் பாட்டாளிகளைப் பற்றியும் என்ன எண்ணம் கொண்டிருக்கிறேனோ அதையே தான் அவரும் கொண்டிருக்கிறார்.
அதனால்தான் நான் அமைத்த பாத்திர்த்தின் தரத்திற்கும் கொண்டவர்களில் பெருமையும் மகிழ்ச்சியும் அடையாதார் எவருமே இல்லை எனலாம். "தூங்காதே" என்ற பாடல் குழந்தைகளுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல.இன்றைய தினம் நாட்டின் நிலையை அறியாமலிருப்பவர்கள், அறிந்தும் அறியாதவர் போலிப்பவர்கள், யார் எப்படி இருந்தால் நமக்கென்ன என்றிருக்கும் சுயநலமிகள்... இத்தனை வகையினரையும் அறிவறுத்தி எச்சரிக்கும் பாடலாகும் அது.
"காடு வெளைஞ்சென்ன மச்சா"னைப்பற்றி விளக்கம் கூடவா வேண்டும்... அது முழுக்க முழுக்க தி.மு..வின் கொள்கை விளக்கப் பாடலாகும். அவர் தி.மு..வைச் சேராதவராக இருக்கலாம். ஆனால் இதைப் போன்ற கருத்துக்களில் அவருக்கும் எனக்கும் வேறுபாடே இல்லை ....."மானைத் தேடி மச்சான் வரப் போறான்" குறும்புக்காரப் பெண்கள் தங்களது தோழிகளைக் கேலி செய்வதற்கு (விரசமில்லாமல்) ஒரு எடுத்துக்காட்டு.
  "கண்ணோடு கண்ணு கலந்தாச்சு" என்ற பாடலில் "என் இன்பம் எங்கே" என்ற பகுதி கதையின் முக்கிய கட்டத்தில் தலைவி தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இடமாகும். கதை யோடும் பாத்திரத்தோடும் இணைந்து வெளிவரும் வார்த்தைகளாக அதில் சேர்க்க பட்டிருக்கிறது.... சிறந்த பாடல் என்பது நிகழ்ச்சியோடிணைந்தும் பாத்திரத்தின்
எண்ணத்தை வெளியிடுவதாகவும் அமைந்துள்ளதைப் . போலல்லாது வேறு எப்படியிருக்க முடியும்!
"உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா" என்ற பாடலை எழுதி முடிப்பதற்குள் பாடலாசிரியர் திரு. இலக்குமண தாஸ் அவர்கட்கும் எனக்கும் ஏற்பட்ட உழைப்பு அதிகமாகவே இருந்தது.... ஏனெனில் புதுமைக் கருத்துக்கும் அவருக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகம் - ஆனாலும் என் எண்ணத்தை அப்படியே பாடலில் கொண்டுவர மிக மிகக் கஷ்டப்பட்டார். ஆனாலும் சோர்வடையாது முயன்று எனது விருப்பப்படி பாடலை அமைத்துக் கொடுத்தார். இரப்போர்க்கு ஈதலிலும்" என்ற வரி... இது இலக்கிய உலகத்திலிருந்து வரும் ஒரு முடிவை மாற்றிச் சொல்லுவதாகும்......
மக்களுக்கு ஈந்து. அவர்கள் அதன் பயனை அடைந்து மகிழ்வதைக் காணவதே இன்பம். இது தான் இதுவரை சொல்லப்பட்ட நியதி.... ஆனால் இதில்... கொடுத்து மகிழ்வதில்கூட இன்பமில்லை  என்று சொல்லப்படுகிறது.
 கொடுப்பவன், வாங்குகிறவன் என்ற பேதமே இந்நாட்டில் இருக்கக் கூடாதென்ற கருத்தில் பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாதத்தை இலக்குமணதாஸ் ஏற்றரோ, இல்லையோ, அழகுபட எழுதிக்கொடுத்தார்.
"பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா" என்ற வரியின் கருத்து இன்றைய தின... அதிகார பீடத்திலிருப்பவர்களுக்கு (இருக்கப் போகிறவர்களுக்கும்) ஒரு அறை கூவலாகும். இது போன்ற நல்ல கருத்துக்களைச் சொல்வதைவிடக் கவிஞன் தனது மக்களுக்குச் செய்யும் சேவை வேறு எதுவாக இருக்க முடியும்?
பாடல்களை எவ்வளவு அழகாக எழுதிவிட்டாலும் கேட்பவர்கள் காதில் இனிமையாக இருக்கும்படியும் உள்ளக் கிளர்ச்சியும் உணர்ச்சிப் பெருக்கும் தோன்றும் வகையிலும் இசையை அமைத்துக் கொடுப்பது சாதாரணமானதல்ல.கதையில் எந்தப் பாத்திரம் அந்தப் பாடலைப் பாடுகிறது, அந்தப் பாத்திரத்தின் மனநிலை என்ன, என்பதையெல்லாம் அறிந்து, தான் அந்தப் பாத்திரமாகவே மாறிப் பாடலுக்கு இசை அமைப்பது மிகக் கடினமான வேலைகளில் ஒன்றாகும்.
அப்படிப்பட்ட பொறுப்பில் திரு.என்.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள் முதலில் ஈடுபட்டார்கள், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இசை அமைத்த மூன்று பாடல்கள்தான் படத்தில் இடம் பெற்றன. "செந்தமிழே வணக்கம்" ஒன்று; மற்றொன்று சம்மதமா; இன்னொன்று "பாடுபட்டாத் தன்னாலே". இம்மூன்றும் நல்ல முறையில் இசை அமைக்கப்பட்டிருக்கின்றன.அவருடைய அனுபவத்துக்கும் திறமைக்கும் இது சிறந்த ஒரு எடுத்தக் காட்டு என்றால் தவறாகாது.
மற்ற எல்லாப் பாடல்களுக்கும், பின்னணி இசைப் பதிவுக்கும் திரு.எஸ்.எம்.சுப்பையா அவர்கள் பொறுப் பேற்றார்கள். அவரும் சீர்திருத்த நோக்கமும் முற்போக்குத் தன்மையும் கொண்டுவராதலால் எங்களுக்கிடையில் அதிக அளவு ஒற்றுமை இருந்தது. அதனால் நான் எந்தக் காட்சியைப்பற்றியும் பாத்திரத்தின் நிலையைப்பற்றியும் விளக்கிக் கூறினாலும் உடனடியாக அதை உணர்ந்து தானே பாத்திரமாக மாறி இசையை அமைத்துக் கொடுப்பார்.
இதனால் தான் கதை, வசனம், நடிப்பு இவைகளின் சரியான அமைப்புக்குப் பாடலும் ஒத்துழைத்த நிலை உண்டாயிற்று.
இத்தகைய முறையில் அவர் இசையை அமைத்ததால் தான் ஒவ்வொரு காட்சியிலும், பேச்சு, பாடல் இல்லாத மௌனக் காட்சிகளிலும் கூடக் காட்சியை விட்டு அகல முடியாத நிலையில் மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளக் கதையால் முடிந்தது. இப்படிப்பட்ட உழைப்பை ஈந்து கதையோடும் பாத்திரங்களோடும் நிகழ்ச்சிகளோடும் ஒன்றுபட்டுப் பணியாற்றிய அவருடைய திறமையைப் பற்றிக் கேட்பவர்களுக்கு, நாடோடி மன்னன் படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும் பதில் சொல்லுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
கதையை எவ்வளவு அழகாக, சரியாக எழுதிவிட்டாலும் அதைப்படமாக்குகிறவர் திறமைமிக்கவராக இருந்து தீரவேண்டியது அவசியமாகும்.
திறமை மட்டும் போதாது, பொறுமையும் அடக்கமும், இயக்குநரின் விருப்பத்தை அறிந்து செயலாற்றும் கடமை உணர்ச்சியும் உள்ளவராக இருத்தல் வேண்டும். அதோடு படத்தின் வெற்றி, தோல்விகளில் தனக்கும் பங்குண்டு என்ற எண்னாம் இருக்க வேண்டும்.

                                                                                                                                       தொடரும்..... ...........

Saturday, 22 August 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 01


"நாடோடி மன்னன்" படத்தின் வெற்றியை ஒட்டி ஒரு மலரைக் கொணரவேண்டுமென்றும், அதில் நானும் என் மனத்தின் அடித்தளத்தில் வைத்துப் பாதுகாக்கும் உண்மைகளில் சிலவற்றை எழுதவேண்டு மென்றும் கூறப்பட்ட நேரத்தில், எழுதிவிட்டால் போகிறது என்று தான் எண்ணினேன் அலட்சியமாக.

ஆனால் எழுத வேண்டுமென்று முடிவு செய்து பேனாவையும் கையில் எடுத்த பிறகுதான் நான் ஏற்றுக்கொண்ட (எழுதும்) பொறுப்பு எனக்குத் தொல்லையைத்தான் தரும், வெற்றியைத்தராது என்று அறிந்தேன். ஏனெனில் எதை எழுதலாம், எதை மறைத்துவிடலாம், யார்யார் சம்பந்தப்பட்டதை வெளியிடலாம், நீக்கிவிடலாம், என்ற கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் குழப்பமடைந்த போது தான் மேலே சொன்ன உண்மை புரிந்தது. ஆயினும் பொறுப்பேற்ற பின் எப்படிப் பின்னிடுவது.....

யாருக்கும் மனச் சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன்.
தலைப்பு ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே?
பொங்கியெழும் அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன.
ஆம்!.... படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால் தொல்லை ஏற்பட்ட போது அவர்களிடம், "படம் முடியட்டும், உங்களைப்பற்றியெல்லாம் நான் படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன்" என்று வேடிக்கையாகச் சொன்னேன்.
அது நினைவிற்கு வந்தது. ஆகவே நான் படமெடுத்த கதை" என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது சரியாகப்படவில்லை .
வெற்றி மலருக்கு எழுதச் சொன்னால், "நடிகன் குரலில் வெளி வரவேண்டிய எனது கதையை (கதையென்றதும் கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள்!) இதில் வெளியிடுவது சரியல்ல என்று தோன்றிற்று.

வேறு தலைப்பு வேண்டுமே?

பலமான சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு தலைப்பு கிடைத்தது...
"யாருக்கு வெற்றிஎன்பதுதான் அது.
நாடோடி மன்னனுக்கு வெற்றி" என்கிறார்கள்.

"நாடோடி மன்னன் படத்திற்கு வெற்றி"

"கதை அமைப்பிற்கு வெற்றி"

“வசனகர்த்தாவுக்கு வெற்றி"

"பாடலாசிரியர்களுக்கு வெற்றி"

"இசை அமைப்பாளர்களுக்கு வெற்றி"

ஒளிப்பதிவாளர்களுக்கு -

ஒலிப்பதிவாளர்களுக்கு -

ஒப்பனையாளர்களுக்கு -

உடை அமைப்பாளர்களுக்கு

வெட்டி ஒட்டி இணைப்பவர்களுக்கு (எடிட்டிங்)

மற்ற தொழிலாளர்களுக்கு

நடிக நடிகைகளுக்கு...

இயக்குநர்க்கு...

அடிப்படைக் கொள்கைக்கு...

இப்படிப் பலரும் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இவைகளைப் பற்றி நான் என்ன சொல்லுவது என்று சிந்தித்த போதுதான் "யாருக்கு வெற்றி?" என்று தலைப்பில் எழுதுவது மிகவும் சரியானது என்ற முடிவிற்கு வந்தேன்.

சுவரிருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?.....ஒரு படம் நன்றாக இருக்க வேண்டுமாயின் அதனுடைய கதை நன்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 இல்லையாயின் நடிகர், ஒளி, ஒலி இயக்குநர்கள் முதலிய எல்லோரும் எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருப்பினும் தோல்வியே விளைவாக இருக்கும். வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் சிலர் தங்கள் திறமைக்கு "சபாஷ்" பெறலாம்; அவ்வளவு தான், சில படங்களுக்கு விமர்சனம் எழுதப்படுவது போல் முயற்சி போற்றத்தக்கது. ஆனால் பயனற்றது" - என்று ஆகிவிடும்...
நான் எப்போதுமே கதையில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் "நாடோடி மன்னன்" கதை அமைப்பிலும் நான் அதிக கவனம் வைத்தேன்.
"நாடோடி மன்னன்கதையிலே குறையே கிடையாது என்று நான் வாதிக்க தயாராயில்லை. அந்த அளவுக்கு உண்மையை மறைக்கும் ஆணவக் குருடனாக நான் ஆகிவிடவில்லை .
அதிக அளவில் குறைகள் அற்ற கதை அமைப்புக் கொண்டது "நாடோடி மன்னன்" என்று மட்டும் என்னால் துணிந்து கூற முடியும்.
எத்தனையோ பெரிய அறிவாளர்கள் எழுதும் கருத்துக்கே குற்றம் காணும் திறம் படைத்தவர்கள் உள்ள இந்நாட்டில், "நாடோடி மன்னன்" கதையில் குற்றம் காணுகிறவர்கள் இருக்க முடியாது இருக்கக் கூடாது என எண்ணுகிறவன் இருந்தானானால் அவன் பரிதாபத்திற்குரியவன் என்பதை யார் மறுக்க முடியும்? ஆனால் மீண்டும் சொல்லுவேன். "நாடோடி மன்னன்'' கதையில் குறைகள் அதிகமிருக்காது. அதுவும் மக்களைக் கீழ்த்தரச் செயலுக்கு இழுத்துச் செல்லும் எந்தக் கேடான கொள்கையும் அதிலே இல்லை என்று துணிந்து கூறுவேன்.
"சிலர் சொன்னார்கள் எழுதினார்கள்: "நாடோடி மன்னன்" கதை" ஜெண்டாவின் கைதி" என்ற படத்தின் மறு பதிப்பு என்று....
நாங்களே முதன் முதலாக வெளியிட்ட விளம்பரத்தில் "ஜெண்டாவின் கைதி" என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று அறிவித்தோம். ஆனால், படமாக்கிய சமயம் அதன் அடிப்படையே மாற்றப்பட்டு விட்டது என்பதைக் கவனிக்காமல் சிலர் இந்தக் கதையில் மாற்றமெதுவுமே இல்லை என்று எழுதினார்கள்; பேசினார்கள். "அந்த அன்பர்களுக்கு ஒரே ஒரு விளக்கத்தின் மூலம், எவ்வளவு பெரிய அளவில் நம் நாட்டுப் பண்புக்கு ஏற்றவாறு அந்தக் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
ஜெண்டாவின் கைதி என்ற கதையில் மன்னனுடைய மனைவி மன்னனைப் போன்று நடிப்பவனிடமும் நெருங்கிப் பழகுகிறாள்.
போலி மன்னன் கடைசியில் திரும்பிப் போகும் போது அவளிடம் விடை பெறுகிறான். அவள் அவனை யாரென்றறிந்த பின்னும் இணைந்து பழகி, "நான் உன்னை விரும்புகிறேன்; ஆனால் நான் அரசி" என்றவாறெல்லாம் எண்ணத்தைச் சொல்லுவது போல் அமைக்கப் பட்டிருக்கிறது ஆங்கிலக் கதையில்.
நாடோடி மன்னனில் நாடோடியைத் தன் கணவனாக எண்ணி முதன் முதலில் மலர் தூவுகிறார் இராணி. "நாடோடியோ, தான் இன்னெருவனுடைய மனைவியிடமிருந்து அவ்விதத் தொடர்பைப் பெறுவது தகாது... அவள் இடும் மலர் கூடத் தன்மேல்படக் கூடாது என்று எண்ணி விலகிப் போகிறான் ..... பிறகு, அவளோ, அவனை அன்னியன் என்று, ஆனால் நல்லவன் என்றறிந்ததும் "அண்ணா" என்று முறை கொண்டாடுகிறாள். அடிப்படைப் பண்பாட்டிலேயே ஜெண்டாவின்கைதிக்கும் நாடோடி மன்னனுக்கும் பெரிய மாறுபாடு இருக்கிறது.
மேலும் "ஜெண்டாவின் கைதி'யில் போலி மன்னன் உண்மையான மன்னனின் உறவினன். இங்கோ எந்த உறவுமில்லாதவர்கள் மட்டுமல்ல; நேர் எதிரான எண்ணம் கொண்டவர்கள்.,
ஒருவன் "மன்னன்' - இன்னொருவன் நாடோடி"; "மன்னன்" என்ற பதவியையே ஒழிக்க உழைப்பவன். "ஜெண்டாவின் கைதி'' கதையில் அரசை ஆட்டிப் படைக்கும் குருநாதர் கிடையாது. தீவு என்பதோ தீவின் தலைவன் என்பவனோ கிடையாது. கடைசியாக ஆங்கிலக் கதையின் அடிப்படையையே மாற்றி நாடோடி மன்னன்' முழுக்க முழுக்கச் சில கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு கதையை நான் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? நம் நாட்டில் சீர்திருத்தம், கற்பனைத் திறன் இவைகளெல்லாம் உள்ளவர்களில்லையா ? அவர்களைக் கொண்டு புதிய கதையை எழுதச் செய்து படம் எடுக்கக்கூடாதா?
இப்படிப்பட்ட கேள்வி நியாயமானதுதான்.
இந்தக் கதையை நான்தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.
1937-38ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா" படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.
ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப்பார்க்கப் போனேன்."If I were king” “இப் ஐ வெர் கிங்" என்ற படம் அது. "ரோனால்ட் கால்மன்'' என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது .... அதில் ஒரு காட்சியில் ‘நான் மன்னனானால்' என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது.
அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன்? "நான் மன்னனானால்"?.....  என்று.
இப்போதைய நடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தொன்றிவிட்டது.
அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். "சிந்தித்தவன்" என்பதை விட"அனுபவித்துக் கொண்டிருந்தவன்' என்பதே பொருந்தும்.
நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம், "அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்' என்பதே... ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை.
ஆகவே தான்,நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும்,நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர்.
என்பதை எடுத்துக் காட்ட "நாடோடி" யின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன். இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்; அவர்களும் நம்மோடிருப்பவர்கள் தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்...? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்... மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான்.
ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்து விடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்திரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல'' என்ற எண்ணத்தில் வாழ்ந்து தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில்
ஈடுபடவும் தயாராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட - அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன்.
இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்'. "மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன.... அவைகளை தமதாக்கிக் கொண்டால் நாடு நலம் பெறும்'' என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் "நாடோடி மன்னன்கதை.
என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி, அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்படுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே?
அதோடு புதிய, ஆனால் தேவையான, சில சட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடி மன்னன்" கதை.
இதிலேயும் சிலருக்குக் கருத்து வேறுபாடு உண்டு. "இது சினிமாவில் சொல்லலாம். நடைமுறைக்கு ஒத்துவருமா' என்பதே அந்த வேறுபாடு.
நான் சொல்லுவேன் : மக்களுக்குத் தேவையானதா - இல்லையா என்று விவாதிக்க வேண்டுமே தவிர, இப்போது முடியுமா, முடியாதா என்று வாதிப்பது சரியல்ல. கொள்கை சரியா இல்லையா என்று விவாதித்து முடிவிற்கு வர வேண்டுமே தவிர, சில நூறு அடிகளில் சொல்லப்படும் விஷயம் முழு விளக்கத்துடன் கூடியது என்று முடிவு கட்டுவதும் சரியல்ல....
என்னைப்பற்றிச் சில பட முதலாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூறும் குற்றச் சாட்டுகளில் "கடவுளைப்பற்றிப் பேசக் கூடாதென்றும் கடவுளைத் திட்ட வேண்டுமென்றும் வற்புறுத்துவதாகச் சொல்வதுண்டு.
இந்த நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கை உள்ளவர்கள்.
அதேபோல் இந்த நாட்டில் வசதியோடு நிம்மதியாக வாழ்பவர்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள்.
இவைகளை வைத்துக் கடவுள் நம்பிக்கையை விவாதித்தால் சரியான விளக்கம் பெற இயலாமற் போகும்.
ஆகவே மக்கள் வாழ வேண்டிய நேர்மையான முறைகளைப் பற்றியும் - ஏழ்மையைச் சட்டத்திற்குட்பட்டு எப்படிப் போக்குவது என்பதையும் - மக்கள் எல்லோருக்கும் எப்படிப் பண்பாட்டைத் தெரிவிப்பது என்ற வகையையும் கலைஞர்கள் செயற்படுத்த முயல வேண்டும் என்பதுதான் எண்ணம்.
ஒருவன திருடதவனாக இருந்தால் அவனால் மற்றவர்களுக்கேற்படும் தொல்லை குறைகிறது. அதுபோல் ஒருவன் கல்வியை சொல்லிக் கொடுத்தானாகில் பல் நல்லாசிரியர்கள் தோன்றுவார்கள்.
இவை போன்றவைகளின்  பலனால் மக்கள் உள்ளத்தூய்மை பெற, அன்பு வழியில் மக்கள் வாழ இறைவனைத் தொழுவதால் அடையும் பயனை மேலே சொன்ன செயல்களின் மூலம் பெறுவர். இதைத்தான் செய்ய நான் விரும்புகிறேன் எனது கலைத் தொழிலின் மூலமாக.
அதை ஓரளவிற்கு நிறைவேற்றுகிறது நாடோடி மன்னன் கதை.
ஆகவே நாடோடி மன்னன்'' படத்திற்கு வெற்றி என்றால் முதலில் கதைக்கு வெற்றி.

தொடரும் ......