Sunday, 3 May 2020

கதவு திறந்தது வழியும் பிறந்தது ! - சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்"முருகா!..." என்று சொல்லிக் கொண்டே , 'மேக்-அப் அறை யிலிருந்து நான் வெளியே வந்தேன்.
இந்தப் படத்திலிருந்தாவது எனக்கு நல்ல வழி பிறக்க அருளும்படி என் மனம் முருகனை வேண்டிக் கொண்டது.

கோவையில் சாலிவாஹனன் படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம் அது. விக்கிரமாதித்தனுக்குத் துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள்.

'முருகா' என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில் ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம்; தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்; உள்ளத்தின் தெளிந்த நிலையையும் களங்கமற்ற தன்மையையும் காட்டும் முகம்: கருணை பொழியும் பார்வை கொண்ட ஒளி வீசும் கண்கள்!

நான் ஒரு வினாடி நின்று விட்டேன்.
என்னைப் பார்த்த அவரும், அப்படியே நின்று விட்டார்.
எங்கள் கண்கள் முதலில் பேசின. பின்னர் உதடுகள் மெள்ள அசைந்தன.
நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா?" - குரலில் வெண் கலத்தின் எதிரொலி! -
"ஆமாங்க!" - மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்து கொண்டு விட்டார்.
"நான் தான் இதிலே 'விக்கிரமாதித்தன்'. என் பெயர் எம். ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?"- என்றார், அடக்கத்துடன்.
"இதிலே என்னங்க? என் பெயர் சின்னப்பா தேவர் வகுப்பைச் சேர்ந்தவங்க..." என்னைப் பற்றிய விவரங்களை நான் சொல்லிக் கொண்டே போனேன்.
அப்போது நான் நல்ல திடக்காத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு. குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல் எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம் நான் செய்து வந்த தேகப் பயிற்சியும், கலந்து கொண்ட விளையாட்டுக்களுமே!
எனது தேகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். "உங்க 'பாடி'யை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா?" என்று கேட் டார்.
நான் தலையை மேலும் கீழுமாக ஆட்டி முறுவலித்தேன்!
எங்கள் அறிமுகம், எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை.
'வணக்கம்' என்ற வார்த்தையுடன் அன்றைய தினம் நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறு நாள் நாங்கள் மீண்டும் சந்தித்தோம்.
இப்போது என்னைப் பற்றிய சில விவரங்களையும் அவரைப் பற்றிய சில தகவல்களையும் நாங்கள் ஒருவருக்கொருவர் மேலும் பரிமாறிக் கொண்டோம்.
எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆல விருத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து, அதன் விழுதுகளைப் போலப் படர ஆரம்பித்தது.
ராமநாதபுரத்தில் 'வீரமாருதி தேகப் பயிற்சி சாலை' என ஒன்று இருக்கின்றது. அங்கே நான் அடிக்கடி போய் தேகப் பயிற்சி செய்வதுண்டு. வருஷா வருஷம் பொங்கலன்று ஆண்டு விழா அங்கு நடைபெறும். எங்கள் அறிமுகத்திற்குப் பின் நாங்கள் அங்கு சேர்ந்தே செல்லும் வழக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அடிக்கடி அங்கு வருவார்.
 பலவிதமான தேகப் பயிற்சிகளைச் செய்வார். பளு துக்குதல், பார் வேலைகள் செய்தல், மல் யுத்தம், குத்துச் சண்டை , கத்திச் சண்டை , சிலம்பம், கட்டாரி இப்படியாக உடல் வளர்ச்சிக்கான பல பயிற்சிகளைச் செய்வார்.
அவர் மட்டும் இப்பயிற்சிகளைச் செய்து விட்டுப் போகமாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக் கொடுப்பார். அவர் கற்றுக் கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக் கொடுத்து நான் பார்த்த தில்லை !
இதை யெல்லாம் நான் ஆவலோடு பார்ப்பேன். எனக்கு இம்மாதிரியான 'ஸ்டண்டு' வேலைகளில் விருப்பம் அதிக முண்டு என்பதைத் தெரிந்து கொண்ட அவர், என்னை அருகில் அழைத்து, 'சினிமாவிலே இப்படி இப்படித்தான் கத்திச் சண்டை இருக்க வேண்டும். கம்புக் சண்டைகளும், சிலம்ப ஆட்டமும் இந்த வகையில் தான் அமைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்.
சுருங்கச் சொல்லப் போனால் சினிமாவிலே ஸ்டண்ட் காட்சிகளை எப்படிப் புகுத்த வேண்டும், எந்த இடத்தில் புகுத்த வேண்டும், எப்படி, அமைக்க வேண்டும் என்றெல்லாம் எனக்குக் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்!
என் வீட்டிற்கும் அவர் வீட்டிற்கும் இரண்டு மூன்று பர்லாங்கு தூரம் தானிருக்கும். எனக்குப் பொழுது போகாத நேரத்தில் நான் அவர் வீட்டிற்குப் போவேன். அவரும் என் வீட்டிற்கு வருவார்.
இருவரும் சேர்ந்து உலாவப் போவோம். அப்போது எங்கள் உள்ளத்து வேதனைகளையும் இன்ப துன்பங்களையும் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து கொள்வோம்.
பல சமயங்களில், அருகிலுள்ள மருது மலைக்குச் சென்று முருகனைத் தரிசித்து விட்டு மனமார வேண்டி வருவோம்.
ஒருநாள் வழக்கம் போல் நான் அவரைக் காணச் சென்றேன்.
ஜூபிடரிலே முருகன் படம் முடிந்து, 'ராஜகுமாரி' படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
அதிலே அவரைக் கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது.

அதிலே கதாநாயகியுடன் ஒரு முரடன் வேஷம்.

இதிலே நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும், அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர்.
எனக்கு உள்ளூர மகிழ்ச்சி தான்!
மறு நாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று என்னையே அந்த வேஷத்திற்குப் போடும்படிச் சிபாரிசு செய்தார்.
''உங்களை கதாநாயகனாகப் போட்டு படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும்" என்று தயாரிப்பாளர்கள் தரப்பில், எதிர்வாதம் செய்தார்கள்,
எம்.ஜி.ஆர். விடவில்லை !
"நம்மிடையே திறமை யுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப் பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்வோம். எந்த விதமான சந்தர்ப்பமும் தராமல் ஒரு ஆள் எடைப் போட்டு விடக்கூடாது. தேவரையே போடுங்கள்!'' என்று ஆணி அடித்தது போலச் சொல்லி விட்டார்.
தன் நிலையே ஆட்டங் கண்டிருக்கும் நேரத்தில், எதிராளிக்குச் சிபாரிசு செய்த நடிகரை நான் அப்போது தான் வாழ்க்கையிலேயே முதன் முறையாகக் கண்டேன்.
அந்த வேஷம் எனக்கே கிடைத்தது! - "அண்ணே ! இந்தப் 'பைட்டிங்'கைப் பிரமாதமாகச் செய்து விட வேண்டும்" என்றேன்.
முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம், அதே சமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம் - இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.
சண்டைக் காட்சியில் நாங்கள் எதையுமே பொருட்படுத்தவில்லை. உண்மையிலேயே சண்டை போட ஆரம்பித்து விட்டோம். ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. உடலெங்கும் சரியான அடி; வெட்டுக் காயம். ஆனால் "இது போன்ற சண்டைக் காட்சியைப் பார்த்ததில்லை. ரொம்பவும் நன்றாகச் செய்து விட்டீர்கள்" என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்த பாராட்டு மொழியில் எங்கள் காயங்களெல்லாமே குணமாகி விட்டன!

நாங்கள் ஒருவரை யொருவர் அப்படியே தழுவிக் கொண்டோம்.
ராஜகுமாரியை அடுத்து, இம்மாதிரி 'ஸ்டண்ட்' காட்சிகளில் கலந்து கொள்வதற்காக வென்றே ஒரு ஸ்டண்ட் கோஷ்டியை நான் தயாரித்தேன்.
நல்ல யோசனைஎன்று பாராட்டி, க்க மூட்டினார் எம். ஜி.ஆர்.
ராஜகுமாரிக்குப் பின்னர் 'மோகினி'யில் ஒரு சண்டைக் காட்சியில் நானும் அவரும் கலந்து கொண்டோம். தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு, அதை அவரிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் வஞ்சகக் கூட்டத்தின் தலைவன் நான். ராஜபுத்ர பாணியில் இதற்கான சண்டையை அமைத்திருந்தோம்.

இந்தப் படங்களுடன் எம்.ஜி.ஆரின் செல்வக்கும் புகழும் வளர ஆரம்பித்தன. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது.
'மந்திரி குமாரி'யில் நடித்தார். 'சர்வாதிகாரி'யிலும் நடிக்க ஒப்பந்தமானார்.
"இதிலே வரும் சண்டைக் காட்சிக்கு தேவர்தான் பொருத் தமாக இருப்பார்'' என்று சொல்லி விட்டார் அவர்.
கண்காணாத இடத்திலும் என்னைப் பற்றி நினைவு வைத்துக் கொண்டிருந்து, சிபாரிசு செய்ததை நினைத்த போது அவரது அன்பின் ஆழத்தை உணர்ந்த என் உள்ளம் நெகிழ்ந்தது!
ஜூபிடரின் பிரம்மாண்டமான திட்டமாக எழுந்த படம், 'மர்மயோகி'. எம்.ஜி.ஆர். அதில் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைக் கேட்டதும் நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன்!
ஆனால் அவரோ நேரே என்னிடம் வந்து. ' நான் கதா நாயகனாக நடிக்கப் போகிறேன் என்ற செய்தியை விட, உங்களுக்கும் (தேவர்) இதில் முக்கிய வேஷம் தருகிறேன் என்று டைரக்டர் ராம்னாத் உறுதி அளித்ததைக் கேட்டபோது தான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்!" என்றார்.
எம்.ஜி.ஆரின் மனம் விசால மானது; அவரது குணம் அலாதி யானது!
'மர்மயோகி'க்காக சேகர் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் டுக்களைப் பார்த்து வியந்து நின்று விட்டோம்! அதை விட டைரக்டர் ராம்நாத்தின் தங்கமான குணத்தைக் கண்டு வியப்பின் உச்சிக்கே போய் விட்டோம். நிறை குடம் என்பதற்கு முழு உதாரணமாகத் திகழ்ந்தார் அவர்!
டைரக்டர் ராம்னாத்தின் முயற்சியால் எனது தம்பி எம்.. திருமுகம், மர்மயோகி' படத்திற்கு எடிட்டராக மாறினான். அதன் பின்னர் அவனுக்கும் சில படங்கள் கிடைத்தன.
எம்.ஜி.ஆர். சென்னையில் நிரந்தரமாகத் தங்கி பல படங் களில் நடிக்க ஆரம்பித்தார்.
கோவை வாசியாக நான் மட்டுமே நின்றேன். இந்நிலையில மேலே என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருநதேன்.
மருதமலைக்கு நானும் எம்.ஜி.ஆரும், சேர்ந்து போகும் போதும் மற்றும் பல சந்தர்ப்பங்களிலும் நாங்கள் மனம் விட்டுப் பேசிக் கொண்டது எனது நினைவுக்கு வந்தது.
"நம்மில் யார் நல்ல நிலைமைக்கு வந்தாலும், மற்றவரை மறக்கக் கூடாது''
இந்த வாசகம் என் கருத்தில் வந்து நின்றது.
எம். ஜி. ஆர். அப்போது நல்ல செல்வாக்கான நிலையில் இருந்தார். அவர் என்னை மறந்து விட்டிருப்பாரோ?
சீசீ! அப்படி நினைப்பதே தவறு. என்று நானே என்னைக் கடிந்து கொண்டேன்.
நீண்ட நேரம், பல நாட்கள் தனிமையில் அமர்ந்து யோசித் தேன்.
சொந்தப் படத்தை ஆரம்பிக்கலாம்; தம்பியை டைரக்டராக்க லாம்; நமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
எம்.ஜி.ஆர். சம்மதித்தால் அவரையே கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஒரு நாள் முற்பகல் நேரம். லாயிட்ஸ் சாலையிலுள்ள வீட்டின் வெளி வராந்தாவில் எம்.ஜி.ஆர். படுத்துக் கொண்டு, தன்னைக் காண வந்திருந்த நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், ''வாங்க வாங்க'' என்று வாய் நிறைய அழைத்தார்.
எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொன்னேன். மேலே எதுவும்
பேசாதீங்க. படத்தை ஆரம்பியுங்க. நான் நடிக்கிறேன் என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.
அவரது இதயக் கதவு திறந்தது; என் வாழ்க்கையிலும் ஒரு புதிய வழி பிறந்தது.
என்னைப் போலவே, எத்தனையோ பேர்களை அவர் கை தூக்கி விட்டிருக்கிறார்.
தாய்க்குப் பின் தாரம் படம் தான் அது படம் வெளியே வந்த தும், அதற்குப் பிரமாதமான ஆதரவு கிட்டியது.
'தாய்க்குப் பின் தாரம்' படத்திற்குப் பிறகு வரிசையாக அவருக்குப் பல படங்கள் வந்து குவிந்தன.
இடையிலே சில படங்களை நான் தயாரித்து வெளியிட்டேன். என் படங்களில் அவர் நடிக்க வில்லையே தவிர, அவரது மான சீகமான ஆசியும் ஆதரவும் வழக்கம் போல் இருந்து கொண்டு தான் இருந்தன. அதைச் செயலி லும் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு அடுத்து வந்தது.
 தாய் சொல்லைத் தட்டாதே' படத்தை ஆரம்பித்தேன். அதில் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்காக அவரைப் போய்ப் பார்த்தேன்.
'தாய்க்குப் பின் தாரம்' படத்திற்காக நான் போன போது என்ன சொன்னாரோ அதையே தான் இப்போதும் சொன்னார்.
மூன்றே மாதங்களில் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருப்பதைச் சொன்னேன்.
ஜூலை மாதம் 12 ம் தேதி அதற்குப் பூஜை போட்டோம். 12-13 இரண்டு தேதிகளிலும் அவரும், சரோஜாதேவியும் வந்து நடித்தார்கள். ' எம்.ஜி. ஆரைப் போட்டால் படங்கள் சீக்கிரம் முடியாது; தொல்லைகள் தரும் நடிகர் அவர்' என்ற வீண் பிரசாரம் பலமாக பரவிக்கொண்டிருந்த சமயம் அது.
இரண்டு நாட்கள் படப்பிடிப்பை நடத்தி விட்டு நான் இருப்பதைப் பர்த்தசிலர் என் படத்தைப் பற்றிக் கேட்டபோது, செப்டம்பரில் வந்து எம்.ஜி.ஆர். முடித்துத் தருவதாகச் சொல்லியிருப்பதைச் சொன்னேன். அவர்கள் என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தார்கள். சிலர் நான ஏமாந்து விடப் போகிறேன் என்று எச்சரிக்கை செய்தார்கள்.
ஆகஸ்ட் முப்பத்தோரு நாட்களும் உருண்டோடின செப்டம் பர் மாதம் காலை 7 மணிக் கெல்லாம் என் செட்டில் 'மேக் அப்' புடன் நின்றார் எம்.ஜி.ஆர்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை என்று சேர்ந்தாற் போல் அவர் என் படத்தில் வேலை செய்வதைப் பார்த்த இவர்கள், நீங்க சொன்னபடி படத்தை முடிச்சிடுவீங்க" என்றார்கள். இந்தச் சர்டிபிகேட்டைக் கேட்டும் நான் மகிழ்ந்து விடவில்லை! 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தைத் தொடர்ந்து எனது நான்கு படங்களில் நடித்திருக்கிறார் அவர். அவ்வளவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட படங்கள்.
படத்தின் ஆரம்பதினத்தன்றே ரிலீஸ் தேதியையும் கொடுத்து விட்டு, எம்.ஜி.ஆரையும் நடிக்க வைத்து படததை முடித்து வெளியிட்டு விடுகிறாரே, அப்படி இந்த தேவரிடம் என்ன தான் வசியம் இருக்கும் என்று பலர் பேசிக் கொள்வதை நானே கேட்டிருக்கிறேன்.
என்னிடம் வசியம் எதுவும் கிடையாது வேலையை நான் ஒழுங்காகச் செய்கிறேன்.
கதையை முதலிலேயே ஒழுங்கு படுத்திக் கொள்கிறேன். கதாபாத்திரங்களுக் கேற்ற உடைகளை ஒன்றுக்கு இரண்டாக தைத்து வைத்துக் கொள்கிறேன். பாட்டுக் களை முன் கூட்டியே பதிவு செய்து விடுகிறேன் நடிகர்களிடம் இன்னின்ன தேதியில் வேலை இருக்கும் என்பதை பல நாட்கள் முன்னதாகவே சொல்லி விடுகி றேன். ஒன்றுக்கு இரண்டு செட்டுக்களாகப் போடுகிறேன். ஒன்றில் வேலை தவக்கப்பட்டாலும் மற்றென்றில் படப்பிடிப்பை வைத்துக் கொள்கிறேன்; படத்தை முடிக்கிறேன்.
ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன்!
பல நாட்கள், அவர் படப்பிடிப்புக்கு நாட்களைக் கொடுத்து விட்டு. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வீணடித்து விட்டதை நான் அறிந்திருக்கிறேன். சரியான திட்டமின்றி வரும் இவர்கள் என்னை வீணே குறை கூறுகிறார்களே' என்று, இம்பாதிரியான சந்தர்ப்பங்களில் மனம் குமுறியிருக்கிறார் அவர். "பழி ஓரிடம் 'பாவம் ஓரிடம்' என்ற பழ மொழி யின் உண்மையை இம்மாதியான சந்தர்ப்பங்களில் தான் நான் அறிந்தேன்.
எனக்கு மட்டுமில்லை, நல்ல திட்டத்தோடு நாணயத்தோடு, யார் வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தை நிச்சயம் முடித்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இதிலே சின்னவர்கள், பெரியவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசமே அவர் பாராட்டுவதில்லை. தொழில் வேறு  நட்பு வேறு என்று சொல்லி வரும் அவர், நான் இரண்டையுமே ஏமாற்ற விரும்புவதில்லை ' என்று அடித்துச் சொல்வார். "எம்.ஜி.ஆர். கதை அமைப்பில் குறுக்கிடுவார்; படப்பிடிப்பில் வந்து வசனத்தை மாற்றச் சொல்லுவார். காட்சியைத் திருத்துவார்' என்றெல்லாம் ஒரு புகார் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்த அளவில், அவர் இம் மாதிரி எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்தது கிடையாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ! கதையை அவர் ஆரம்பத்தில் படிக்கிறார். தனக்கேற்றதாக இல்லை யென்று பட்டால், திருத்தி அமைக்கும்படிச் சொல்கிறார். அப்படிச் செய்ய இயலாவிட்டால் அந்தக் கதையில் நடிப்பதையே ஒதுக்கி விடுவார் அவர்.
கஷ்டம் என்று யார் வந்து அவரிடம் முறையிட்டாலும் உடனே அவர் அந்த ஆளை வேலும் கீழுமாகப் பார்ப்பார். அவர் சொல்வது. உண்மை என. தனக்குப்பட்டால் யார் தடுத்தும் உதவி செய்வதை அவர் நிறுத்த மாட்டார்!
எம். ஜி. ஆர். நாஸ்திகரல்ல என்று தான் நான் நினைத்து வருகிறேன். மருதமலையில் நான் வேண்டிக் கொண்டபடி போட்ட மின் விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் பேசிய எம். ஜி. ஆர். தன் கொள்கை பற்றி விளக்கம் கொடுத்தார்.
தெய்வம் இல்லை என்று நாங்கள் சொன்னதில்லை. அதேபோல் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று நாங்கள் யாரையும் தடுத்ததுமில்லை. கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையே கண்டிக்கிறோம். நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுள் என்றும் நாங்கள் கருதுகிறோம் '' என்றார்.
சமீபத்தில், சென்னையில் தியாகராய நகரில் நான் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்தேன்.
கிரகப்பிரவேசத்தன்று காலை பூஜை நடந்து கொண்டிருந்தது.  சர்க்கரைப் பொங்கல், பானையில் பொங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். திடுதிடுப்பென்று உள்ளே வந்து நின்றார்.
'வாங்க வாங்க! பால் பொங்குது. நல்ல நேரத்திலே தான் உங்க காலை வச்சிருக்கீங்க' என்று என் தாயார், வாய் நிரம்ப அழைத்தார். எம்.ஜி.ஆர். அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டார். பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்.
நான் அழைக்காமலேயே, விஷயத்தைத் தெரிந்து. என் வீட்டிற்கும் வந்து, என்னை வாழ்த்தி விட்டுப் போன அந்த மனித தெய்வத்தின் தன்மையை நான் என்னென்பது? அதனால் தான் முருகனுக்கு அடுத்தபடியாக நான் எம்.ஜி. ஆரைப் போற்றி வருகிறேன்!

- பேசும் படம் 1963