Thursday, 23 April 2020

"பதவி போராட்டம் " - எம்.ஜி.ஆர்


நான் மதுரை ஒரிஜினல்  பாய்ஸ் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.

வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர் எப்படிப்பட்ட ரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்து கொள்ளாத - தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்து கொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ண வேண்டாம்.) உலக  அனுபவம் சிறிதும் பெறாத  நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.

அந்தப் பருவத்தில் அது வரை எனக்குக் கிடைத்திருந்த அநுபவயெல்லாம் நாடகத்திலே நடிக்கிறோம்; பணம் கிடைக்கிறது. கிடைக்கிற பணமோ வாழ்க்கைக்குப் போதாது. அதிகப் பணம் தேவை. அந்த அதிக சம்பளம்  பணத்திற்காக அதிகச் சம்பளம் வாங்குவதற்கு வேறு கம்பெனிக்குப் போக வேண்டுமென்றால் அதற்கு வேண்டிய குதிகள் இல்லை. ஏதோ கிடைத்ததைக் கொண்டு, இதுவாவது கிடைக்கிறதே என்று வாழ்க்கையைத்  தள்ளிக்கொண்டு போகவேண்டியதுதான்என்று சுற்றிச்சுற்றி இந்தப் பிரச்சினையிலேயே உழன்று கொண்டிருந்ததுதான்.
இப்போது சில சமயம் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லையே என்ற கவலை, அப்போது,நிறைய நேரமிருதிறது வேலையில்லையே  என்ற கவலை.

இத்தகைய நிலையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக்கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல எங்கள் செவிகளில் விழுந்தது.
படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களிடம்  இருக்கிற நாடகங்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது, விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியதற்குக்  காரணம்.

ஆமாம், நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால், தினமும் நாடகம் நடக்கும். மாதா மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்காவிட்டால் எப்படித்தான் வாழ்வு..? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரிய வேண்டுமே!

வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம், அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் ,எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்.

இல்லைஎன்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறதுஎன்று சொல்வதற்கும் அச்சம்!    

அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி சதிலீலாவதிஎன்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப்போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால், அந்த வேடத்தை உனக்குத் தர ஏற்பாடுசெய்கிறேன்என்றார்.

கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.


'சதிலீலாவதி' யின் கதையும் பதிபக்திபோன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர்.சதிலீலாவதியின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.

அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.


எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.

எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.

பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான மகிழ்ச்சி விம்மல்என்று பெயரோ?

அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் அட்ஜஸ்ட்பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம்

நான் தமயனாரிடம் கேட் டேன்,“ஏன் அண்ணே ! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே" என்று .
துக்கு முன்னாலே நான் எங்கேடா பாத்தேன்?" என்று சொன்ன அண்ணன். 
"ஆமாம், உனக்கு ஏன் திடிர்  சந்தேகம்?' என்ற கேட்டார்.

ஏன் அண்ணே , நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறு தான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே ? அதனால் தான் சந்தேகம். நூறு ரூபாய் முண்ணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான் கூடப் போட்டுக்காம, கயத்தைக் கட்டிக்கிட்டிருக்காரு?” என்றேன்;
நானும் கவனிச்சேண்டா இந்தக் கயறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டி இல்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக, எல்லாம் சரியாப் போட்டுக் கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்வி கேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?'' என்றார் அண்ணன்.
அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப் பட்டது.

வீட்டுக்குப் போய்த் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார்கள். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார்.

தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள்.

நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?'' என்று சொல்லி விட் டார்கள்.
அந்த நோட்டை அப்படியே எடுத்து, தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, "நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்" என்றார்கள்.

அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை.
வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை.

நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன்.உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று, எல்லோரையும் பார்க்கவேண்டுமென்று ஆசை
என் சக நண்பர்களிடம் போய் இந்த முன் பணம் சமாசாரத்தைச் சொல்லவேண்டுமென்று பேராவல்.

எப்படித்தான் தாயார் என் மனக் குறிப்பைத் தெரிந்து கொண்டார்களோ, அறியேன்.

சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்ட போது அழைத்தார்கள்; சென்றேன், “நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது
நாடகக் கம்பெனி முறையெல்யெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!'' என்றார்கள்.

எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ, அவ்வள வுக்கவ்வளவு தாழ்ந்து குறுகி, சோர்த்து , ஒரு மூலையில் போய்  உட்கார்ந்தேன்.
ஒரு நாள் நாடகத்தின் போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைத்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!

அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
நான் சொல்லவும் முடியாமல் மனதிலே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று அசை.

தாயாரின் கட்டளை!
அதை நினத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது.
ஒருநாள், எங்கள் நாடகத்தின் போது, காலஞ்சென் ஜட்ஜ் எம். வி. மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு  வந்தார்.

எங்கள் நாடகக் கம்பெனியிலேயே, நாங்கள் சேர்வவதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர்.
ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரண மாக 'ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர்' என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டது.
அவரிடம் காளி என்.ரத்தினம் அவர்கள், “ஏன் மணி, எங்கே வந்திருக்கே? என்று கேட்டார்.
சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க 'பதிபக்தி' மாதிரிதான்; சதி லீலாவதி. அந்தப் படத்திலே. நடிக்க வந்திருக்கேன்என்றார்:
எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்த மாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என் திகில்.
 ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள், டி.ஆர்.பி.ராவ் அவர்கள், அவரைக் கேட்டார், “ நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?'' என்று .
துப்பறியும் வேடம் என்றார் அவர்.
அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது.  “சரி, இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவதுஎன்று முடிவெடுத்தேன்.
ஜட்ஜ் எம். வி. மணி அவர்கள் இந்தச் சேதியைச் சொன்ன பிறகு, சிறிது நேரத்திற்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது, என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந் தார்கள் எனக்கு !

- தொடரும்

சமநீதி பத்திரிகை
29-07-66 

Tuesday, 21 April 2020

புரட்சி நடிகர் நடித்த படங்களில் நடிகர்கள், நடிகைகள் பிடித்த படங்களைப் பற்றி


ஜெயலலிதா ---------------- மாட்டுக்கார வேலன்

சிவாஜி கணேசன் --------------    அடிமை பெண்

எஸ்.வி.ரங்கராவ்  -----------------  நாம் நாடு

ராஜ் கபூர் ------------- அடிமை பெண்

தர்மேந்திரா  ------------     காவல் காரன்

ராஜேஷ் கண்ணா ------------    ஒளி விளக்கு

அசோகன்  ------------------- அடிமை பெண்

குமாரி சச்சு     -----------------  அன்பே வா

குமாரி  மஞ்சுளா ----------- பாசம்

சரோஜா தேவி ------------பெற்றால்தான் பிள்ளை

நாகேஷ்  ------------   எங்க வீட்டு பிள்ளை

ராதிகா  -------------  ஜெனோவா

தேங்காய் சீனிவாசன்  --------------- நாடோடி மன்னன்

ரவிச்சந்திரன் -----------  அடிமை பெண்

A.V.M.ராஜன் ---------------  குடியிருந்த  கோவில்

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் -------- குடியிருந்த  கோவில்

ஆர் .எஸ் .மனோகர் ----------------------  அடிமை பெண்

சௌகார் ஜானகி ---------------    ஒளி விளக்கு


செய்தி:    சங்கே முழுங்கு  - சிறப்பு  மலர் 
வெளியிடு : இதயவேந்தன் எம்.ஜி.ஆர்  கலைக்குழு
-1972-