Tuesday, 1 September 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 05

 


இப்போது இன்னொரு முக்கியமான பகுதிக்கு வருகிறேன்....


நடிக நடிகையர்கள் பற்றி எழுதப் போகிறேன் என்பதை நீங்களே அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் யாரையாவது முதலில் குறிப்பிட்டு எழுதினால் மற்றவர்கள் முதலில் குறிப்பிட்டவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றோ, திறமை குறைந்தவர்கள் என்றோ கருதக்கூடாது....
முதலில் நடிகையர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். படத்தில் வந்த வரிசைக் கிரமத்திலே எழுத விரும்புகிறேன். திருமதி பி.பானுமதி அவர்கள்தான் படத்தில் முதலாவதாக வருகிறவர்கள்.
அவர்கள் நடிப்பைப் பற்றியும் ஒத்துழைப்பைப் பற்றியும் எழுதுவதற்கு முன் மூன்று ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென்று கருதகிறேன்.
சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸாரின் "அலிபாபா படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்த நேரம் "நாடோடி மன்னன்' விளம்பரம் (ஜெண்டாவின் கைதி என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு பரணி பிக்சர்சாரின் விளம்பரமும் வெளி வந்தது. அவர்களுடைய விளம்பரம் வெளிவந்த அன்று, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது திருமதி. பானுமதி அவர்கள் சொன்னார்கள் :
"நாங்கள் எடுக்கும் கதையையே நீங்களும் எடுக்கப் போகிறீர்களாமே! நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன” என்று.
நான் சொன்னேன் :
"நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி அதற்காக இக்கதையைத் தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்ஷன் (இயக்குநர்) பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப் போகிறேன்" என்று. இது பற்றி மேலும் பேச்சு நடந்தது - முடிவாகச் சொன்னேன், "நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள "மன்னனாக மாற்றப்படும் காட்சி'யை மட்டும் தான் வைத்துக்கொள்ளப் போகிறேன் மற்றவை எல்லாமே வேறாகத்தானிருக்கும்; உங்களுக்கும் கதையை மாற்ற முடியாதிருக்குமானால் நீங்களும் எடுங்கள் - நமக்குள் போட்டா போட்டியே வராது. உங்கள் கதை "ஜெண்டாவின் கைதி"யின் நேர்ப்பதிப்பு - எனது கதை வேறு" என்று சொன்னேன்.
உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அந்த நிலை தான்.
சில நாட்களுக்குப் பிறகு சொன்னார்கள் :
"நாங்கள் அந்தக் கதை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகமில்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்" என்று நன்றி தெரிவித்தேன் உண்மையான உள்ளத்துடன்.
நாடோடி மன்னனில் தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.
எந்த நலத்தையும் எதிர்பாராமல் அவர்கள் விட்டு கொடுத்தார்கள் என்பது தான் உண்மை .
தன்னிடமிருக்கும் கதையைத் தருவதாகவும், திரு. ஏ.கே. வேலன் அவர்கள் தான் கதை வசனம் எழுதியிருப்பதாகவும், அதைப் பயன் படுத்திக் கொள்ளலாமென்றும் சொன்ன பெருந்தன்மையை எவ்வளவுதான் போற்றினாலும் போதாது....
நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன்.
இதே குணத்தைப் படைத்தவர் திருமதி.பானுமதி அவர்கள். இருவரும் விட்டுக் கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். எம்.ஜி.ஆர். தானே டைரக்ட் செய்து, தான் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா? பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா படம் வெளிவரும்போது?.... என்றெல்லாம் சந்தேகப் பட்டவர்கள் (அதை விட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலை குனியும்படி ஒத்துழைத்ததோடுமல்ல, தான் ஏற்ற "மதனா" என்ற பாத்திரத்தை. வேறு எவரும் இவர் போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களைச் சொல்லும்படி செய்துவிட்டார். இவ்வாறு புகழப்படுவதைவிட ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்.
திருமதி எம்.என். இராசம் அவர்கள் தான் அடுத்தபடியாகப் படத்தில் தோன்றுபவர். எவ்வளவு நடிப்புத் திறமை உடையவர்களையும் சோதனை செய்து விடும் பாத்திரம் தான் இவருக்குக் கொடுக்கப்பட்டது.
நல்ல குணமும் பண்பாடும் படைத்தவள் மனோகரி. இளமையின் உணர்ச்சி வேகத்தில் துவளுகிறவள் மனோகரி. ஆனால் அதற்காகத் தன் கற்பையோ, நேர்மையையோ ஒரு சிறிதும் இழக்க விரும்பாதவள் மனோகரி. தனது அன்புக்கணவன் வேறெருத்தியோடு பழகுவதாயும், தன்னை அலட்சியப்படுத்துவதாயும் நினைப்பவள். தன்னுடைய வாழ்வுக்கு ஊறு தேடும் ஒருவர் மீது யாருக்கும் எளிதில் ஆத்திரம் ஏற்படுவதுதான் மனித இயல்பு. சிறப்பாகப் பெண்கள், கணவன் வேறொரு பெண்ணைப் புகழ்ந்து பேசுவதைக் கூடப் பொறுக்கமாட்டார்கள். ஆனால் மனோகரி தனக்கு எதிராக இருக்கும் மதனாவுக்குக்கூட எந்தத் துன்பமும் நேரக்கூடாது என்று எண்ணும் பொறுமை சாலி. தன் கணவன் தவறு செய்வதைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்லை. அவருக்கு அதனால் ஆபத்து நேரக்கூடாதே என்று நினைக்கும் அன்புள்ளவள். வசியம் போன்றவைகள் கேலிக்கு இடமானவைகள்; அறிவுக்குப் பொருத்தமற்றவை என்ற நல்ல அறிவும் திடமும் பெற்றவள்.
மேலும் தான் அதுவரை கணவன் என நம்பியிருந்தவன் வேறு யாரோ என்று குழம்பினாலும், அவனுடைய நல்லெண்ணத்தை உணர்ந்து அவனைத் தன் அண்ணனாக ஏற்று மன்னிப் புக் கோரும் நற்பண்புடையவள்.
சூழ்ச்சி, பொறமை, அடுத்துக் கெடுத்தல், பண்பற்ற செயலிலே
ஈடுபடுதல் போன்றவைகளைக்குணமாகக் கொண்ட பாத்திரங்களில் தான் திருமதி எம்.என்.இராசம் அவர்கள் பெரும்பாலும் இதற்கு முன் நடித்திருந்தார்கள்.
மனோகரி பாத்திரமோ - நேர் எதிர்மாறானது.
எம்.என்.இராசம் அவர்களை இந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிந்ததும் பலருக்கு அச்சம் ஏற்பட்டது. மனோகரி வேடமே சரியாக அமையாது என்று எண்ணினார்கள். யோசனைகளை எனக்கு யாரும் சொல்லலாம்; எப்படியும் சொல்லலாம். முடிவு என்னிடமேதான் வைத்துக் கொண்டிருந்தேன் நாடோடி மன்னனைப் பொறுத்தவரை.
"நான் செய்த முடிவை மாற்ற முடியாத காரணத்தால் படம் தோல்வி அடையக்கூடாதே" என்று பலவாறு குழம்பினார்கள் எனது நன்மையை விரும்பிய நண்பர்கள்.
ஆனால் என்னுடைய முடிவே சரியான முடிவு என்பதையும், தான் எந்த பாகத்தையும் ஏற்று நடிக்கத் திறமை பெற்றவர்கள் என்பதையும் எம்.என்.இராசம் அவர்கள் நிருபித்துவிட்டார். புதுவிதமான பாத்திரத்தை ஏற்று நடித்துத் தனது கலை வாழ்வில் புதிய வெற்றியைத் தேடிக் கொண்டார் என்று ஏன் சொல்லக்கூடாது?
படத்தில் .... மூன்றாவதாகத் தோன்றுகிறவர் ஜி. சகுந்தலா, மனோகரியின் நலனையே பெரிதாகக் கருதும் ஒரு தோழியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்; நகைச்சுவை நடிகருடன் பங்கு கொள்கிறார் தான் விரும்பியவன் தன் உயிர்த்தோழிக்குத் துரோகம் செய்கிறான் என்றறிந்ததும் அவனையே தன் தந்தையிடம் சொல்லித் தண்டிக்கச் சொல்லும் குணம் படைத்த நல்ல தோழியாகத் தோன்றி, படத்தில் அதிக வேலையில்லாவிடினும் மக்கள் மனதில் தன்னை நினைவிருத்திக் கொண்ட திலிருந்தே அவருடைய திறமைக்கு இது வெற்றியென்று நிச்சயமாகக் கூறலாமே!
அடுத்ததாக பி. சரோஜா தேவி அவர்கள் வருகிறார். இந்தப் பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும் இன்று விளம்பரமடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்துண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெரிதும் முயன்றேன். எனது முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையரைப்படமெடுத்தும் பார்த்தேன், சரியாயில்லை.
பிறகுதான் இவரை நடிக்கச் செய்து படமெடுத்தேன். இது ஒரு புதிய விசித்திர அனுபவம்தான்.
இவரைக் கொண்டு "பாடு பட்டாத் தன்னலே" என்ற பாட்டுக்கு நடனம் ஆடச்செய்து முன்பே படமும் எடுக்கப்பட்டு விட்டது. இளவரசி ரத்னா வேடத்தில் நடிக்கச் செய்ததனால் முன்பு எடுத்த காட்சியைச் சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து படமாக்க வேண்டி நேரிட்டது.
சரோஜா தேவி அவர்கள் இப்போது பேசுவதைவிடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற் போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக் காட்டவேண்டிய அவசியம் அதிகமில்லை. வெளி உலகத்தைப்பற்றியோ, நல்ல பண்பாட்டைப் பற்றியோ எதுவுமே அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது.
அந்தப் பாத்திரத்திற்குச் சரோஜாதேவி அவர்களும், சரோஜா தேவி அவர்களுக்கு அந்தப் பாத்திரமும் பொருந்திவிட்டன என்று சொல்லும் அளவிற்குச் சரோஜாதேவி அவர்கள் அந்தப்பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு நடித்துப் புகழைப் பெற்றுவிட்டார் என்று துணிந்து கூறமுடிகிறது.
"வண்ணுமில்லே சும்மா!" என்று சொல்லும் கொச்சையான - ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒன்றே போதுமே, அவர் இந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபிக்க...
நகைச்சுவை நடிகைகளில் முதலில் வருவது அங்கமுத்து அவர்கள். சகாயத்திடம் பேசும்போதும், பணத்தைக் கண்டதும் மரியாதை காட்டும்போதும், மகாராஜாவே தனது உணவு விடுதிக்கு வந்து விட்டதை அறிந்து தன்னை மறந்து பேசுவது, ஒடுவது போன்றவைகளைச் செய்யும் போதும் அவ்வளவு இயற்கையாக நடித்துக் காட்டக்கூடிய யாராவது உண்டென்றால் அதில் முதலில் நிற்பவர் அங்கமுத்து அவர்களாகத் தானிருப்பார்கள். ஒரிரண்டு காட்சி களிலேயே தனது நகைச்சுவை நடிப்பால் மக்களைச் சிரிக்கச் செய்து, தனது ஸ்தானம் நிலையானது என்பதை எளிதாக வெளிக் காட்டிய அவருக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பல வெற்றிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுவது தானே சரி.
திருமதி முத்து லட்சுமி அவர்களுடைய வேடம் ஒரு முக்கியக் கருத்தை வெளிப்படுத்தும் வேடம். தகுந்த கணவனைப்பெறப் பூசை செய்தால் போதும் என்ற தத்துவத்தை நம்பி ஒருவனைப் பெற்று விட்டவளும் கூட ஆனால் திருமணமோ இல்லை; அவனுடன் வாழவுமில்லை .
எங்கிருந்தோ வந்தான்; எங்கேயோ போய் விட்டான் . அதுதான் முத்து லட்சுமி அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் காதல் நிலை....
பாவம் ! அவளை அவளுடைய நம்பிக்கை ஏமாற் றிவிட்டது.
அதோடு மக்களுக்கும் ஒரு நல்ல கருத்தை அது போதிக்கிறது.
தகுந்த கணவனைப் பெறுவதற்குப் பூசை செய்தால் போதாது; பெண்ணுக்குதேவையான அன்பு, அறிவு, ஆற்றல் இவைகளிலிருந்தால் தகுந்த கணவன் கிடைப்பான் என்பதையும் சொல்லுகிறது.
இந்தப் பாகத்தை மிகப்பொருத்தமாக நடித்துப் படத்தின் திருப்பத்தில் மக்களை மகிழ்ச்சி நிறைந்த பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்றார் என்பதை யாரும் சொல்லலாம்.
பாடுபட்டாத் தன்னாலே என்ற பாடலுக்குத் தனி நடனம் ஆடிய சந்திரா அவர்கள், தான் எதிர் காலத்தில் நல்ல ஒரு நிலைக்கு வரக்கூடியவர் என்பதை மக்களின் நினைவிலிருக்குமாறு செய்து கொண்டுவிட்டார்.
நடனமாடியவர்களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. எத்தனையோ படங்களில் நடனமாடியவர்கள்! நடனமாடுவது இவர்களுக்குப் புதிது அல்ல. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் அக்கறையோடு ஆடுபவர்கள்தான். நானும் பல படங்களில் இவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் நாடோடி மன்னனில் இவர்கள் காட்டிய அக்கறை வேறுவிதமானது. ஒரு ஷாட் எடுக்க
இரண்டு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டி நேரும். அப்போதும் கூடச் சலிப்படையாமல் அழைத்ததும் வந்து புதுத் தென்போடு ஆடிய இவர்களின் அக்கறையை எப்படிப் பாராட்டுவது? இவர்களில் முன்னணி நட்சத்திரமாக வரக்கூடியவர்கள் பலருண்டு. வெகுவிரை வில் இவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்குமென்றும், சினிமா உலகம் அதை இழந்து விடாதென்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
அழகு நடிப்பு நடனமாடும் திறமை - பேச்சு வன்மை - சிலருக்கு நன்கு பாடவும் தெரியவும், - இதைவிட, கதாநாயகி வேடத்திற்கோ , வில்லியாக நடிப்பதற்கோ வேறு தகுதி என்ன வேண்டும். ஆண்களும், பெண்களும் இரவு இரண்டு மணிக்கு, வேறு படத்திலுள்ள வேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்து மேக்-அப், புதுவிதத் தலையலங்காரம் முதலியவற்றைச் செய்து, உடைகள் அணிந்து, செட்டிற்கு வந்து வேலை செய்தனர்.
இவர்களின் அன்புப் பணியினால் நாடோடி மன்னனின் உச்ச நிலைக் காட்சிகளுக்கு உயிர் ஊட்டப்பட்ட தென்றால் போதாதா?.......
இதைவிட இக்கலைஞர்களின் வெற்றிக்கு என்ன அத்தாட்சி வேண்டும்? திராவிட மொழிப்பாடலான நான்கு மொழிப் பாடல்களுக்கு நடனம் ஆடியவர்களிலும் பலர் இருக்கின்றனர், எதிர்கால நட்சத்திரங்களாகத் தகுதி பெறக்கூடியவர்கள்.
பயப்படாமல் துணிந்து முயற்சி செய்தால், புதுமுகங்கள் இல்லையே என்று கூறுகிறவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைக்கும் அளவுக்கு நல்ல நல்ல புதுமுகங்கள் கிடைப்பார்கள்.
இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததே போதும், இந் நடிகைகள் கலைத் திறமையை வெளிக் காண்பிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்கு.
                                                                                                                                                                                                                                                                        தொடரும்..... 

No comments:

Post a Comment