Tuesday, 1 September 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 03

 
திரு.ராமு அவர்களின் திறமையை இன்று போற்றாதார் இல்லை ....
தமிழகத்தில் திறமை மிக்க ஒளிப்பதிவாளர் இருக்கிறார் என்று பெருமைப்படுகிறார்கள்.
எனக்கு ஒரு பெரும் குறை இருந்தது. நமக்கு மிக அருகாமையில் நம்மோடு சேர்ந்து வாழும் திறமை மிக்க பலரை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் அந்தக் குறை.
அப்படிக் கவனிக்கப்படும் நிலையில் ஏதாவது செயலாற்றி ஆனாலும் உடனடியாக அவருடைய திறமையையும் வெளிநாட்டு நிபுணர்களின் திறமையையும் ஒப்பிட்டுப் பார்த்து, எடை போட்டு நிறுத்திப் பார்ப்பது போல், "வெளிநாட்டு நிபுணர்களின் திறமை எங்கே ?
இவருடைய திறமை எங்கே !...
புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்கிறது என்று கேலி பேசுவார்களே தவிர ....... அவர்களுக்குள்ள வாய்ப்பும் வசதியும் இவருக்கு இல்லாதிருந்தும் எவ்வளவு சிறப்பாகக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார் என்று உண்மை நிலையை உணர்ந்து பாராட்டுவதே கிடையாது.
பாராட்டப் படவேண்டியவர் தான் என்று தெரிந்தாலும் பாராட்டமாட்டார்கள்.
அவரைப் பாராட்டினால், தான்,அவரைவிடத் திறமையில் குறைந்தவரென்றும், தனக்குத் தெரியாததை அந்த மனிதர் செய்து காண்பித்து விட்டதாகவும் ஏற்று கொண்டதாகிவிடுமே என்ற கீழ்ப்பட்ட எண்ணம் தான் அவர்களை இவ்வாறு இருக்கச் செய்கிறது.
ஆனால் திரு. இராமு அவர்கள் விஷயத்தில் மட்டும் எப்படியோ எல்லோரும் ஒரு மனதோடு பாராட்டினார்கள்; புகழ்ந்தார்கள். ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் இது நல்ல அறிகுறியாகும்... ஆனால் இதோடு நிறுத்தி விடக்கூடாது. நமது அரசியலார் இப்படிப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள ஒளிப்பதிவு முறைகளை நன்கு தெரிந்துகொண்டு வரவாய்ப்பு அளிக்க வேண்டும். கலைத்துறையில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களை அரசியலார் நாட்டின் கலைச்செல்வமாக எண்ணி அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இதைத் திரு. இராமு அவர்களுக்காக மட்டும் சொல்லவில்லை. இவரைப்போல் திறமை மிக்கவர்கள், ஆனால் வாய்ப்புப் பெறாதவர்கள் நமது தமிழகத்தில் பலருண்டு, அவர்களுடைய ஆர்வத்தையும் உழைப்பையும் திறமையையும், தமிழகத்தின் கலைப் பகுதிக்குப் பெருமை தேடித் தருவதற்காக அரசியலார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பட உரிமையாளர்களையோ, இயக்குநர்களையோ பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இவர்களைப் போன்ற மற்ற கலைஞர்களையும் பாராட்ட வேண்டும்; பரிசுகள் வழங்க வேண்டும்.
சில காட்சிகள் நான் விரும்பியபடி படமெடுக்கும் வசதிகள் இல்லாமலிருந்தன. ஆனால் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு அக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்து, பிறர் திகைக்கும் வகையில் நிறைவேற்றித் தந்தவர் திரு. இராமு.
ஒவ்வொரு காட்சியையும் இங்கு எடுத்துக் கூற நான் விரும்பவில்லை . ஏனெனில் படம் முழுவதும் திரு.இராமு இருக்கிறார் என்று சொன்னால் போதுமென்று நினைக்கிறேன்.
வண்ணக் காட்சிகளை இதற்கு முன் இவர் படமெடுத்தது கிடையாது. நான் வண்ணக் காட்சி எடுக்கப்போவதாகக் கூறிய போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால் பயம். தனக்கு முன்னோடியாக இருப்பவரிடம், அவர் வண்ணக் காட்சி படமெடுக்கும் போது தன்னிடம் கூறுமாறு பலமுறை தெரிவித்தும், அவர் எந்தத் தகவலும் திரு. இராமுவுக்குத் தரவில்லையாம்; ஆனால் அவரோ திரு. இராமுவுக்கு மதிப்புக்குரிய நண்பர்.
திரு. இராமு என்னிடம் சொன்னார்: "வண்ணக் காட்சியைப் படமெடுக்க வேறு யாரையாவது ஒளிப்பதிவாளராக ஏற்பாடு செய்யுங்கள்; நானும் சேர்ந்து பணியாற்றுகிறேன்" என்று....
"உங்களால் எடுக்கப்பட்டு நன்றாக இருந்தால் வண்ணக் காட்சி படத்தில் இருக்கட்டும். இல்லயாயின் வண்ணக் காட்சியே வேண்டாம். வண்ணக் காட்சியை எப்படிப் படமாக்குவது என்பதற்குப் பரிசோதனைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார்" என்றேன்.
பரிசோதனைக்காக ஒரு நாள் கால்ஷீட்போட்டு, எனது நாடக மன்ற நடிகை ஒருவரை வேடமிடச் செய்து படமெடுக்கப்பட்டது.
படமும் பம்பாய்க்குப் போய், பிரதி எடுத்து அங்கிருந்து திரும்பி வந்த குறிப்பில், மிக நன்றாக இருக்கிறது. இப்படியே எடுத்தால் போதும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தைப் பார்த்தோம்; மகிழ்ந்தோம்; திரு. இராமுவின் மகிழ்ச்சியை அளவிட்டுச் சொல்ல முடியாது.
அப்போது தான் அவர் சொன்னார்; தான் ஒரு நண்பரைக் கேட்டதாயும், அவர் ஏமாற்றிவிட்டதாயும், அதன் பிறகுதான் என்னிடம் வேறு ஒளிப்பதிவாளரை வண்ணக் காட்சியைப் படமாக்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் சொன்னார்...

இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்கள்...!

ஆனால் அந்த நண்பர்களே கண்டு பொறமை கொள்ளும் நிலைக்குத் திரு.இராமு தன்னுடைய உழைப்பால் உயர்ந்துவிட்டார்..... அப்படி அவர் பாராட்டப்படும் நிலைக்கு உயர்ந்துவிட்டார் நாடோடி மன்னன் என்பது அவருடைய ஒளிப்பதிவுத் திறமைக்கு ஒரு சான்று தானே.
ஒளியை எண்ணும்போதே ஒலியின் நினைவும் உடனே வந்து விடுகிறது. நாடோடி மன்னன் படத்தில், ஒலியமைப்புச் செய்த திரு.மேனன் வாகினி ஸ்டுடியோவில் நிரந்தரமாகப் பணியாற்றுகிற பல ஒலிப்பதிவாளர்களில் ஒருவர்.
ஒலிப் பதிவு செய்பவர்களில் பலர் நாடோடி மன்னன் படத்தின் துவக்கத்தில் பணியாற்றினார்கள்.
எல்லோரும் திறமை மிக்கவர்கள் தான். ஆனால் ஒரு நடிகனோ நடிகையோ உணர்ச்சியோடு நடிக்க வேண்டிய கட்டம் படமாக்கப்படும் போது அது சில நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டி வரும். முதல் நாள் வசனங்களை எப்படிப் பேசினார், எந்த பாவத்தோடு பேசினார், எவ்வளவு உரக்கப் பேசினார் என்பதை அறிந்தவர்தான் மறுநாளும் ஒழுங்காக அந்தக் கட்டத்தினுடைய உணர்ச்சி குன்றாமல் ஒலிப்பதிவு செய்ய முடியும். அதைவிட்டு முதல் நாள் பதிவு செய்தவர் வேறு, மறுநாள் பதிவு செய்பவர் வேறு என்றிருந்தால் மறுநாள் பதிவு செய்கிறவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அந்தக் கட்டத்தின் முழுத் தன்மையும் தோன்ற ஒலிப்பதிவு செய்ய முடியாது.
இதைப் போன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது. ஒரு காட்சியைப் பார்த்தபோது தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறவருடைய குரல் ஆரம்பத்தில் ஒரு மாதிரியும், இடையில் வேறுபட்டும், கடைசியில் இன்னொரு வகையிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் பிறகு படமுழுவதற்கும் ஒரே ஒலிப்பதிவாளர் வேண்டும் என்று வற்புறுத்தினேன். திரு.மேனன் அன்று முதல் படம் முக்கால் பங்கு வளர்ந்த பிறகு அவர் என்னிடம் "மறு பதிவு (ரீரிக்கார்டிங்) செய்யப்போவது யார்?" என்று கேட்டார்.
"நீங்கள் தான் செய்ய வேண்டும்" என்றேன்.
அவரால் நம்ப முடியவில்லை ! சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் கேட்டார், "யார் மறுபதிவு செய்யப்போவது? நானா? என்று.
"ஏன் சந்தேகம்?" என்று திருப்பிக் கேட்டேன்.
இதுவரை பலர் என்னிடம் இப்படிச் சொன்னதுண்டு. "ஆனால் இங்கு வேலை முடிந்ததும் அவ்வளவுதான். புகழ் படைத்த யாரையாவது வைத்து மறு ஒலிப்பதிவைச் செய்து கொள்வார்கள். என்று சொன்னார்கள்.
"வாகினியில் மறுபதிப்பு செய்வதாயின் நீங்கள்தான். என்று உறுதி கூறினேன். அப்பொழுதுதான் ஒரு படத்தில் வேலை செய்து, உறுதிமொழியும் கொடுக்கப்பட்டு, கடைசியில் வேறொருவரை வைத்து மறுபதிவு செய்து கொண்டார்களாம். இதனையும் சொல்லி, "அவர்கள் மூன்று நான்கு லட்சத்தில் படமெடுத்தவர்கள். அவர்களே என்னைக்கொண்டு பதிவு செய்யப்பயந்தார்கள் என்றால் பதினெட்டு லட்சம் செலவு செய்து படமெடுக்கும் தாங்கள் எப்படிப் பரிசோதனைக்குத் துணிய முடியும். என்ற சந்தேகத்தில் கேட்டதாகச் சொன்னார். மறு பதிவு செய்யும் வேலை நெருங்கியது.
நான் மேனன் தான் வேண்டுமென்றேன். என்னுடன் பணியாற்றியவர்களில் பெரும் பாலானவர்கள் என்னிடம் துக்கம் விசாரிப்பது போல், "மேனனிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்?' என் று கேட்டார்கள்.
ஒரு முக்கியமான நண்பரிடம் சொன்னேன்: "நான் நாடோடி மன்னன் படம் எடுப்பதே ஒரு பரிசோதனை. என் விருப்பப் படி எல்லாம் செய்து அதற்கு என்ன பதில் மக்களிடமிருந்து கிடைக்கிறது என்ற சோதனையில் இறங்கியிருக்கிறேன். முன் அனுபவமில்லாத என்னை நீங்கள் இயக்குநராக ஏற்றுக் கொண்டது மல்லாமல், பரவாயில்லை என்றும் சொல்ல முடிந்ததென்றால் ஒலிப்பதிவு செய்வதில் முன் அனுபவமுள்ள ஒருவருக்கு அதில் பெரிய பொறுப்பை ஒப்படைப்பது தவறல்ல'' என்று .
இந்த பதில் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றறிந்தேன்.
"எடுத்துப் பார்ப்போம். நன்றாக இல்லையென்றால் வேறு ஆளை மாற்றிக் கொள்ளலாம். என்று சொன்ன பிறகு கொஞ்சம்” ஆறுதலுடன் போனார்.
மறு ஒலிப்பதிவு (ரீரிகார்டிங்) என்பது படத்திற்கு வெற்றியையோ, தோல்வியையோ கொடுப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்வதாகும்.
உணர்ச்சியோடு பேசுகிற பேச்சின் உச்சரிப்புகளையம் கருத்துக்களையும் மக்களுக்குப் புரியாதபடி மறு ஒலிப்பதிவில் செய்துவிட முடியும் ! அது போலவே சாதாரணமாக இருக்கும் கட்டங்களையும் ஒலிகளைச் சரிவரப் பதிவு செய்வதின் வழியாக உணர்ச்சி பொருந்திய கட்டமாகத் தோற்றுவிக்கவும் முடியும். அதுவரை நேரடியாகத் தானே ஏற்றுச் செய்யாத பெரும் பொறுப்பை வெற்றிகரமாகவே நிறைவேற்றித் தந்து, படத்தின் எல்லாக் கட்டங்களையும் சுவையுள்ளதாகச் செய்தவர் திரு.மேனன்.
மறுபதிப்புச் சமயம் பல இரவுகள் தூக்கம் என்பதே இல்லாமல் நான் வேலை செய்து வந்த காலத்தில் என்னுடன் தானும் இருந்து," படம் பிரமாதம்" என்று யாராவது சொல்வார்களானால் அதற்கு உதவி செய்த, அதுவரை தன்னை ஒன்றும் தெரியாதவன் என்று மூலையில் உட்கார வைத்தவர்கள் திகைக்கும் வண்ணம் செயலாற்றிய திரு.மேனனுக்கு வாழ்வில் ஒரு திருப்பமென்றும் வெற்றியென்றும் சொல்லலாமா, கூடாதா?
                                                                                                                                தொடரும் ......

                                                                                                                          

                                                                                                                        

No comments:

Post a Comment