Sunday, 6 September 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 08

 


கடைசியாக...


 நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?


எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் அவைகளை முடித்துக்கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? - இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.

மேகலாவில் பங்குதாரனாக இருந்து "நாம்" என்ற படத்தை வெளியிட்ட பிறகு வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழுப்பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்ற ஆசையுடன் எம்.ஜி.ஆர். புரொடக்க்ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன். (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து) அதற்குக் கலைஞர் திரு.மு.கருணநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து "விடிவெள்ளி'' என்று பெயரும், இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக்கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே எம்.ஜி.ஆர் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.

அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை . ஒரு மீன் ஓட உறுமீன் வருமளவும்" என்றபடி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக்கொள்ள வாயப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக்கொள்ள முடியும்.....

எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை!

"இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்துக்கொண்டு வாழ வகையறியாதவன்" இது ஒரு வகை...

"டைரக்டராமே டைரக்டர்... என்ன திமிர்!" - இதுவும் ஒரு வகை ,


“ லாட்ரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப் போகிறோம்" - இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்த போது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)

"இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்..... தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

"எதை எதையோ எடுக்கிறான்; திரும்பத் திரும்ப எடுக்கிறான்; பாவம் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்" - எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

"சீர்திருத்தமா சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது.

(தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை ).

"இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.

"தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்'' - இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப்பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களே, அல்லது என்னை "அப்பாவி' என்றெண்ணித்தான் சிரித்தார்களோ.... எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். பாடம் வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக... இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது?

தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டு கூட வெட்டவில்லையாமே! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே... மிக நன்றாக வசூல் ஆகிறதாமே.... நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே! எங்கும் பாராட்டு விழாவாமே!

அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே!....

இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும், துக்கத்திற்கும் காரணம்!

இதற்கு நான் என்ன செய்ய முடியும்.....

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்ற தென்றால் இதற்கு யார் காரணம், இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்றபதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவருக்கும் சொந்தமானதல்ல.....

கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப் படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது.

 அவர்கள் எதனை எதிர்பார்த்தார்கள்? அவர்களுக்கு என்னதான் கிடைத்தது- இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி.... இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் உண்மையில் இந்த "வெற்றி யாருக்கு?"


 படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?....


 பட உரிமையாளரின் இரும்புப் பெட்டியை நிரப்ப.... நட்சத்திரங்கள் பணம் சேர்க்க.....

சிலர் புகழ்பெற... இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,


மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்தக்காட்ட,


மக்களை ஒன்றுபடுத்த,


நாட்டுப்பற்றை உண்டாக்க - அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!


இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.

இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு ......


"இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஒட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள்.

நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு. எழுதப்படிக்கத் தெரியாதவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு.....

இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும்பெரும் தேசத் தலைவர்கள் எல்லாம்.

 இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, "முதலாளி ஒழிய வேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, "ஏழை - முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ , ஏழைகளுக்கோ விமோசனமில்லை' என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்பக் கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஒட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் கிடைக்கும்.

 அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக்கணக்காகப் பணம் சேர்த்துக் சுகபோகம் அனுபவித்தக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.

இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள்.

அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு - குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த வகையில் "நாடோடி மன்னன்" அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்....(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது.

மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.

மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை "நாடோடி மன்னன்' மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் - எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம்.

 மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் பூரண ஆசிக்கும் தகுதி பெற்றதென்றால் மக்களின் குரல் நாடோடி மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி - நமது இனத்தின் வெற்றி - இன்பத் திராவிடத்தின் வெற்றி... என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத்துணிந்து கூறுகிறேன்.


 வணக்கம்.


வாழ்க திராவிடம்!


நன்றி!


                                                                        -    நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்


“என்னை வாழவைத்த சிங்கம்” - புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன்

 

 

 "எனக்கு சில ஆசைகள் இருக்கின்றன. நான் ஏழு வயதில் நாடகக் கம்பெனியில் நுழைந்ததிலிருந்து கலைத்துறையுடன் ஒன்றாகக் கலந்து செயற்பட்டு வருகிறவன். பேசாத ஊமைப்படக் காலத்திலேயே நான் கலையார்வத்துடன், படங்களில் நடிக்கும் ஆசையும் கொண்டேன். அந்த ஆசையின் விளைவாகத் தான் நான் அருமுயற்சியுடன் இத்துறையில் இடைவிடாது ஈடுபட்டு வருகிறேன்.

"நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆயினும் நான் சொந்தக் கருத்துக்கு ஏற்றவாறு, நானே படமாக்கவேண்டும் என் விரும்பினேன். அந்த விருப்பத்தின் முதல் விளைவே 'நாடோடி மன்னன். அதில் நான் சமூகத்துக்குத் தேவையான பல கருத்துக்களையும், கொள்கைகளையும் சொல்லி, அரும் பாடுபட்டு அதை வெளியிட்டேன். அந்தப் படத்தில் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சியொன்றை எடுக்க வேண்டுமென்று கருதி, அதற்காக அழகான, பிடரி மயிருடன் கூடிய ஓர் ஆண்சிங்கத்தையும் ஒரு பெண் சிங்கத்தையும் விலைக்கு வாங்கி வளர்க்கத் தொடங்கினேன்

சிங்கத்துடன் சண்டையிடும் காட்சியை எடுக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் உண்டானதற்குக் காரணம் உண்டு. ஆங்கிலப் படத்தில் சிங்கச் சண்டையைப் பார்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன், ஓர் ஆங்கிலப் படத்தில் மூன்று சிங்கங்களுடன் கதாநாயகன் சண்டையிடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்தப் படத்தில் மூன்று சிங்கங்களும் சேர்ந்து, ஒரே நேரத்தில் கதாநாயகனைத் தாக்கியது இல்லை. மிருகங்கள் ஒரே நேரத்தில் பாய்வது தான் இயற்கையாகும். அப்படியிருந்தும் அந்தப் படத்தில் ஏன் அப்படிக் காட்டவில்லை என்று புரியவில்லை”.

"இதிலிருந்து எனக்குத் தோன்றிய ஆசை, தத்ரூபமாகச் சிங்கச் சண்டைக் காட்சியைப் படத்தில் எடுத்துச் சேர்க்க வேண்டும் என்பது. அதனால் சிங்கங்களை விலைக்கு வாங்கி வளர்த்தேன். 

ஆனால், 'நாடோடி மன்னன்' அந்தச் சிங்கச் சண்டைக் காட்சியை எடுக்க முடியாமல் நேர்ந்துவிட்டதற்குக் காரணம், ஆண் சிங்கம் திடீரென்று செத்துவிட்டதேயாகும். பெண் சிங்கத்தைக் காட்சிசாலைக்குக் கொடுத்து விட்டேன்,

''நாடோடி மன்னன்" படத்தில் சிங்கச் சண்டை இல்லாமல் வேறுவகையான உச்சக் கட்டக் காட்சியை அமைத்தேன். அது மகத்தான வெற்றியை அளித்துவிட்டது. அதனால் 'சிங்கம் செத்து என்னை வாழ வைத்தது' என்றே நான் சொல்ல விரும்புகிறேன். தற்போதோ சிங்கம் சாகாமல் உயிரோடு இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறது.

 ''அடிமைப் பெண்' படத்தில் சிங்கச் சண்டைக் காட்சி அமையவும் என்னுடைய நெடுநாளைய ஆசை ஈடேறவும் வழி செய்த இந்தச் சிங்கம் உண்மையிலேயே வாழவைத்த சிங்கம் தான்.

"அடிமைப் பெண்" படத்தில் சிங்கச் சண்டைக் காட்சியைப் படமாக்க நான் திட்டமிட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, மிருகப் பாதுகாப்பு சங்கத்தார் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். "சிங்கத்தைக் காட்சிச் சாலைக்கு உடனே அனுப்பி விடுங்கள்'' என்று அச்சங்கத் தலைவர் உத்தரவு போட்டிருந்தார்.

'நல்லவேளையாகச் சிங்கம் சாகவில்லை. பல நாட்கள் கஷ்டப்பட்டு, இக்காட்சியைப் படமாக்கினோம். சுருக்கமாகச் சொல்வதானால் நான் என்னையே பணயமாக வைத்துத் துணிவுடன் இக்காரியத்தில் இறங்கினேன் என்பது மிகவும் பொருந்தும்.- (பத்திரிகையாளர்களிடம் எம்.ஜி.ஆர் வெளியிட்ட கருத்துகளின் ஒரு பகுதி)


“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 07

 


அடுத்து வாட்போர்ப் பயிற்சி என்பது சினிமாவிலே ஒரு புதிய பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயராகும்.

வாட்பயிற்சி என்றால் வாளை எப்படி எடுப்பது, எப்படிக் கால்களைப் பயன்படுத்தி முன்னால் போவது, பின்னால் வருவது; பக்கவாட்டில் நகருவது. இடது சாரி வலது சாரியாக வாளை எப்படிச் சுழற்றுவது, எப்படி வீசுவது, மனிதனுடைய கழுத்து, மார்பு, கை, இடுப்பு, கால் முதலியவைகளையும் கணுக்கால், முழங்கை , தோள், கண், காது, விரல் போன்றவைகளையும் எப்படி வெட்டுவது, குத்துவது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் அநேகமாகவாட் பயிற்சி என்று கூறவேண்டும். 

சினிமாவிலே சொல்லிக் கொடுப்பது அப்படியல்ல. ஒருவன் வருகிறான்; அவன் வாளை வீசுகிறான். அதை மற்றவன் தடுக்கிறான். இது அவ்வப்போது எடுக்கப்படும் காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்படுவதாகும்.

பலர் நினைப்பதுபோல் துவக்கத்திலிருந்து முறையாக வாட் போர்ப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுவது கிடையாது.

உடல் வலிவும், துணிவும் உள்ளவர்கள் சில நாட்கள் பழகியதும், நாலைந்து வெட்டுக்கள், இரண்டு மூன்று குத்துகள், மூன்று நான்கு வீச்சுக்கள் இப்படித் தெரிந்து கொண்டு படத்தில் சண்டை ஈட முடியும்...

உதாரணமாகச் சங்கீதத்தைப் பற்றிக் கூறலாம். படங்களில் பாடுகிறவர்களுக்கு இனிமையான குரலும் சிறு அனுபவமும் இருந்தால் அவருக்கு ஏற்ப, பாட்டை இசை அமைத்துப்பாடச் செய்து விடலாம். அவரும் நல்ல பாடகராகலாம், புகழும் பெறலாம். ஆனால் தனியாகச் சங்கீத மேடைகளில் நல்ல பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்து பாடுவதென்பது சிரமம். சங்கீத முறைப்படி பாடுவது முடியாத காரியமும்கூட.

சங்கீத முறைப்படி பாடம் பயின்று சினிமாவில் பாடுகிறவர்களும் உண்டு. இதுபோல் தான் சண்டைக்காட்சிகளிலும், அவ்வப்போது கற்றுக்கொண்டு நடிப்பவர்களும் ஓரளவுக்குத் தொழிலைக் கற்றிருந்து படத்திற்கு வேண்டியவைகளையும் அறிந்து நடிப்பவர்களும் உண்டு.

இந்த "செட்-அப்” என்று சொல்லப்படும் அமைப்பைத் தயார் செய்பவர்கள் தான் சண்டைப் பயிற்சியாளர்கள் என அறிவிக்கப் படுகிறவர்கள். தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் அப்படிப் பட்டவர்கள் சிலருண்டு. அவர்களில் திரு.ஆர்.என்.நம்பியாரும் ஒருவர்.

ஆர்.என்.நம்பியாரைப் பொறுத்த வரையில் அவருடைய வாட்போர்த் திறமையை ருசிமிக்க அவியல் என்று சொல்லலாம். ஆங்கில முறையும், தமிழ்முறையும் கலந்ததாகும் அது.

சில கலப்புகள் நன்றாக இருப்பதுபோல் இவருடைய கலப்புச் சண்டை அமைப்புகளும் மக்களுக்குப் பிடித்தமாகவே இருக்கின்றன.

 நாடோடி மன்னனில் இவரால் அமைக்கப்பட்டவை ஒரு சில சண்டைக்காட்சிகளே. உணவு விடுதியில் நடக்கும் சண்டை, நாடோடி குச்சியால் சண்டையிடுவது, நாடோடியும் மன்னனும் சேர்ந்து மற்றவருடன் போரிடுவது, கயிற்றுப்பாலத்தின் மீது, கடலில் ஒரு பகுதி முதலிய சண்டைக் காட்சிகளாகும்.

அவருடைய அடக்கமும், காட்சிகளின் நிலைமையைப் புரிந்து கொண்டு செயலாற்றும் நுண்ணறிவும் பாராட்டுதற்குரியனவாகும். அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி வெற்றி பெற்றதற்கறிகுறியாகச் சண்டைக் காட்சிகளை மக்கள் ரசிப்பதலிருந்தே உறுதி செய்யப்பட்டுகிறதே, போதாதா?

இத்தனையையும் சொல்லியாகி விட்டதே  கதை இலாகாவைப் பற்றி ஒன்று சொல்லவில்லையே என்று எண்ணிவிட வேண்டும்.

கதை இலாகாவில் இருப்பவர்கள் மூவர். ஒருவர் திரு.ஆர் எம்.வீரப்பன் (இவர்தான் எம்.ஜி.யார் பிக்சர்ஸின் மானேஜிங் டைரக்டர்), மற்றவர் வித்துவான் வே. இலக்குமணன் (இவர் சிலம்புக் குகை போன்ற படங்களுக்குக் கதை வசனம் இயற்றுகிறவர்), இன் னொருவர் எஸ்.கே.டி.சாமி (எனது அந்தரங்கக் காரியதரிசியாகவும், எம்.ஜி.யார் பிக்சர்ஸின் பங்குதாராகவும் இருப்பவர்).

இம்மூவரில் திரு.எஸ்.கே.டி. சாமி உணர்ச்சி வயப்பட்டவர். சில சமயம் யாருக்கும் புரியாத பல கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து விடுவார். படம் முழுதும் எடுக்கப்பட்டு, போட்டுக் காண்பித்து, எதை நீக்குவது என்பதைப் பற்றிப் பேசும் போது எனக்கு வேடிக்கையும், விசித்திரமும், திகைப்பும் தோன்றும்படியான பல அனுபவங்கள் கிடைத்தன.

படமாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை மாற்றும்படி சொல்வதில் எஸ்.கே.டி.சாமி அவர்கள் பல மாற்றங்களைச் சொல்வார். சிறிது துணிவுக் குறைந்தவனாக நான் இருந்திருந்தால் குழப்பமடைந்திருப்பேன். ஆனால் அவர் சொல்லிய விஷயங்களால் மேலும் துணிவு அதிகமாயிற்று.

வித்துவான் வே. இலக்குமணன் அவர்கள் என்னுடைய உழைப்பையும், படும் கஷ்டத்தையும் கண்டு அனுதாபப்படுகிறவர்.

எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் எதை நீக்குவது என்ற பிரச்சினை வந்தால், நீக்கப்பட வேண்டுமென்று கூறப்படும் காட்சியைப் படமாக்க நான்பட்ட சிரமத்தைப் பற்றிப் பேசி, அவ்வளவு கஷ்டப்பட்டு, பெரும் செலவு செய்து படமாக்கியதை வெட்டவேண்டுமா?' என்பார். ஆனால் வேறு பல நல்ல மாற்றங்களைச் சொல்வார்.

இன்னொருவரான திரூ. எம்.வீரப்பன் ஒரு வார்த்தை கூட அதிகமாகத் தானாகப் பேசாதவர்.

"காடு வெளைஞ்சென்ன மச்சான்” என்ற பாட்டு பாடத்திலிருப்பதற்கு முதற் காரணம் ஆர்.எம்.வீரப்பன் அவர்களே. 

படக்கதையிலிருந்து சில காட்சிகளை அறவே நீக்கி விடவேண்டுமென்று ஒரே பிடிவாதமாகப் போராடியவர் வீரப்பன் அவர்களே. அடக்கம், ஆனால் தன் மனதில் தோன்றுவதை வெளியிடும் போது அச்சமே கொள்ளாதவர்......

இப்படிப்பட்ட இம்மூவரும் இரவு பகல் கதையைப் பற்றிச் சிந்தித்துத் தங்களுக்குள் வாதிட்டுச் செய்த நல்ல முடிவின் பலன்தான், கதை, அதிகமான கண்டத்திற்கு இலக்காகாமல் தப்பியது. கதை இலாகா என்ற பெயரில் நல்லதொரு பணியைச் செய்து, தங்கள் விருப்பப்படி கதையை வெற்றி பெறச்செய்த இம்மூவரின் நிலைமை மகிழ்ச்சிச் சிகரத்தின் உச்சியிலிருக்கிறவர்களாக்கப் பட்டிருப்பதுதான் என்றால், இரவு பகலாகச் சிந்தித்துச் சிந்தித்து உழன்று கொண்டிருந்த இந்த நண்பர்களுக்கு இன்னும் வேறென்ன வேண்டும்... என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

டைரக்டர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் "நாடோடி மன்னன்" வெற்றி பெற வேண்டுமென ஆசைப்பட்டவர்களின் முதல் வரிசையிலே நிற்பவர்களில் முதன்மையானவர். அவருக்கு என் மீது நல்ல பற்று உண்டு. ஆரம்பத்தில் அவரை எனக்கு மேற்பார்வையாளராக இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்து ஒரு காட்சிக்கு வந்தார். பிறகு அவர் என்னிடம் “நீயே சரிவரச் செய்கிறாய், என்னை எதற்காகக் கஷ்டப்படுத்த வேண்டும். வெளியே உனக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்கிறேன், "சொல்" என்று கூறிவிட்டார். அவருடைய சொற்படி நானே முழுப்பொறுப்பும் ஏற்றேன்.வேறொருவராக இருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருக்கவேமாட்டார்.
ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பெயரும், புகழும் கிடைப்பதை ஏன் விட்டு விடவேண்டுமென்று விரும்புவார்கள் - ஆனால் கே. சுப்பிரமணியம் அவர்கள் பெருந்தன்மையோடு விலகிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெளியே எனக்காகப்பட்ட கஷ்டம் எழுதுவதற்கு முடியாத அளவு போற்றுதற் குரியதாகும்.
நாடோடி மன்னனில், வெளிப்புறக்காட்சிகள், சிறப்பாக அமைவதற்குக் கேரளாவில் உள்ள ‘மூணாறு’ போன்ற இயற்கை வனப்பு மிக்க இடங்களைப் படமெடுக்க ஏற்பாடு செய்து உதவியவர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் தான்.
படத்தைச் சீக்கிரம் வெளியிட்டுவிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேகமாக வருவார்.... "இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி? இந்தத் தேதியில் வெளியிடுவோமா?'... என்பார்... பார்ப்போம் என்பேன்... நம்பி ஏமாறுவார் : பிறுகும் வந்து " என்னப்பா இன்னும் இரண்டு மூன்று காட்சிகளிருக்குமா?' என்பார் வெளியிடும் தேதியைக் கேட்பார் - பார்ப்போம் என்பேன்; மறுபடியும் ஏமாற்றம். ஆனால் அவர் சளைக்கமாட்டார். மீண்டும் கேட்பார் புத்தி சொல்லிய படி....... " இவ்வளவு ரூபாய்கள் செலவழிந்துவிட்டன; இனியும் தாமதித்தால் சரியல்ல...... இந்தத் தேதியில் வெளியிடலாமா?' என்று...
அநேகமாகப் பார்ப்போம் என்பேன்... இதற்குப் பிறகு ஒளியமைப்பாளர் ராமுவுக்காவது நான் சொல்லியிருப்பேனென்று அவரிடம் "இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி?' என்று கேட்டார் பொறுமை இழந்து.....
பாவம், ராமு என்ன செய்வார் ! 
நான் சொல்லியிருந்தாலல்லவா?.....
தனக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார் ராமு.
கடைசியாக ராமுவிடம் சொன்னார்: "யார் என்ன சொன்னாலும் சரி, ராமச்சந்திரன் என்ன நினைக்கிறானோ அதைத்தான் செய்வான்" என்று.
வண்ணப்படம் சரியான நேரத்தில் கிடைப்பதற்காக அவர் பம்பாய்க்குப் போய்வந்ததை எண்ணினால், பிறருக்காக எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் இவரைப்போன்ற நல்லவர்களையும் காணமுடிகிறதே (இந்த சுயநலமும், சூழ்ச்சி மனப் போக்கும், பொறமைக்குணமுமே அதிகம் படைத்த இந்தச் சிறு வட்டாரத்திற்குள்) என்று அதிசயப்படாமலிருக்க முடியாது.
நடோடி மன்னன் வெளிவருவதற்கு முன்பாகப் படத்தைப் பார்த்துப் புகழ்ந்து வெற்றி முரசு கொட்டிய ஒரே ஒரு நபர் திரு.கே. சுப்பிரமணியம் அவர்கள் தான். அவர் சொன்ன வார்த்தை - இலட்சக் கணக்கான மக்கள் இன்று சொல்லும் வெற்றி என்ற அந்த வார்த்தை திரு. கே. சுப்ரமணியம் அவர்களுக்கு உரியது என்கிறதல்லவா?...... 


சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம். என்ன தான் பணம் இருப்பினும், உழைப்பவர்கள் - திறமை மிக்கவர்கள் இருப்பினும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டாமா? பட்மெடுப்பவர்களுக்கு ஸ்டுடியோ வசதி மிகமிக முக்கியமானது.
விஜயா - வாகினி ஸ்டுடியோக்களின் அதிபர் திரு. நாகிரெட்டி அவர்கள் "நாடோடி மன்னனுக்குத் தந்த உதவி பாராட்டுக்குரியதாகும். ஸ்டுடியோ அதிபர்களால் மட்டும்தான் ஒரு வகைப்படங்களை எடுக்க முடியும் என்ற எண்ணத்தை - அச்சத்தைப் போக்கி, துணிவுள்ள எவரும் எடுக்கமுடியும் என்ற நம்பிக்கையை "நாடோடி மன்னன்" தோற்றுவிப்பதற்குக் காரணம் திரு.நாகிரெட்டி அவர்கள் தான். விசேட பலன் எதையும் எதிர்பாராமல் - பெற்றுக் கொள்ளாமல் உதவி செய்து ஒத்துழைத்த திரு. நாகிரெட்டி அவர்களுக்கு "நாடோடி மன்னன்" தந்த வெற்றி மகத்தானது. "நாடோடி மன்னன்' பட அதிபர்களுக்கு மகிழ்ச்சியையும், துணிவையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்குத் திரு.நாகிரெட்டி அவர்களின் அரிய ஒத்துழைப்பு காரணமாகும். அவருடைய ஸ்டுடியோவான வாகினியில் தயாரிக்கப்பட்ட நாடோடி மன்னனில் இருப்பதாக மக்களால் கூறப்படும் சிறப்புகட்கு காட்சி சோடனை முதல் விளக்கு அமைப்புகள் வரை முழுவதற்குமாகத் திரு. நாகிரெட்டி அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார். நாடோடி மன்னனில் உள்ள அம்சங்களைப் பாராட்டும் போது அவற்றுள் பெரும்பாலானவைகட்குத் தரப்படும் பாராட்டு முழுவதையும் திரு.நாகிரெட்டி அவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்.
படமெடுக்கும் சொந்த ஸ்டுடியோக்காரர்கள் வேறு படமெடுக்கும் உரிமையாளர்களுக்கு - தொழிலாளர்களுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ற வாதத்தைத் தூளாக்கி வெற்றி வாகை சூட்டிக் கொண்டுவிட்டார்.

படத்தின் கடைசிப்பகுதியில் கட்டிடங்கள் தண்ணீரில் அமிழ்வது, கயிற்றுப்பாலம் அறுதல், ஆட்கள் மேலேயிருந்து நீர் வீழ்ச்சியில் விழுதல் போன்ற காட்சிகளைப் படமாக்க ஜெமினி அதிபர் திரு.வாசன் அவர்கள் தந்த காமிரா (ஒளிப்பதிவு இயந்திரம்) மிகவும் பயன்பட்டது. 
அவர் இதை முதன் முதலாக வெளியே அனுப்பியதாகக் கூறப்பட்டது. அப்படியே இல்லாதிருப்பினும்கூட, குறிப்பிட்ட ஒரு முக்கியமான காட்சி படம் எடுக்கப்படுகிறது என அறிந்தும் அனுப்பி வைத்த அவருடைய நல்லெண்ணத்திற்கு நாடோடி மன்னனில் காண்பிக்கப்பட்ட காட்சி எடுத்துக்காட்டாகும். அவரது நல்லெணத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி இது என்று யாரும் துணிந்து கூறமுடியும்.
வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்க, காமிரா கொடுத்தவர்கள் அருணா பிலிம்ஸார். இவர்களுடைய உதவியாளர்கள் கல்லிலும் முள்ளிலும் நீர்வீழ்ச்சியின் அருகிலும் உயர்ந்த மலை முகட்டிலும் அடித்தளத்திலும் இவ்வாறு படமெடுக்க உதவினர். "நாடோடி மன்னனில்" வெளிப்புறக்காட்சி பாராட்டப்படும் முறையிலே இருக்கிறதென்றால் அதிலே பெரும் பகுதிப்பாராட்டைத் தங்களுடைய தாக்கிக்கொள்ள உரிமை பெற்றிருக்கும் அருணா பிலிம்ஸாருக்கு இதைவிட வெற்றி வேறுவேண்டுமா?.
இனி, விமரிசனம் செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூற இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசையும், கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும் இருக்கும். சில சமயம் ஒருவருடைய நம்பிக்கை இன்னொருவருடைய - நம்பிக்கையுடன் மோதுவதுமுண்டு. ஆனால் அதை மனதில் கொண்டு நல்லதைப் பாராட்டவோ, புகழவோ, வர வேற்கவோ கூடாது என்று எண்ணினால் பண்பாடு செத்துவிடும் - வாழாது - வளராது.
"நாடோடி மன்னன்'' விமரிசனத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான - ஒன்றிரண்டு "ஏடுகளைத் தவிர மற்ற எல்லாப் பத்திரிகைகளும், பத்திரிகையின் போக்கு எப்படி இருக்க வேண்டுமென்று விளக்கிக்கூறுவது போன்று குறைகளை எடுத்துக் காட்டி, குணத்தைப் போற்றிய செயலைப் பாராட்டித்தான் தீர வேண்டும்.
பத்திரிகை ஆசிரியர்களும், அவரைச் சார்ந்தவர்களும் குறைகளைத் கண்டிக்கும் தந்தையைப்போலவும், அன்பு காட்டி அரவணைக்கும் அன்னையைப்போலவும் இருக்க வேண்டும். பத்திரிகாசியர்களும், கலைஞர்களும் நல்லதை ஆக்குபவர்களாக இருக்கவேண்டுமே தவிர அழிப்பவர்களாக இருக்கக்கூடாது.
ஆனால் ஒன்றிரண்டு ஏடுகள் இந்த நியதிக்கு மாறாக நல்லதை அழிக்கும் பணியிலேயே ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், எந்தக் கொள்கையைப் பிரசாரம் செய்தாலும், கலை நல்லதற்காகப் பண்பு கெடாமல் ஒழுக்கத்திற்கும் மக்கள் வாழ்வுக்கும் பயன்படுத்தப்படுகிறதா என்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து விமரிசனம் செய்த ஆசிரியர்களின் பெருநோக்கு பத்திரிகை உலகிற்கே பத்திரிகை தர்மத்திற்கே மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்று துணிந்து கூறமுடியும்.
நல்ல நியதியை மேலும் உறுதிப்படுத்தியதற்காக அந்த மரி யாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன்.                                                                                                                             தொடரும்..... 

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 06ஆண் நடிகர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது படத்தில் தோன்றும் வரிசைப்படியே துவங்குகிறேன்.

 திரு.பி.எஸ்.வீரப்பா அவர்கள் குருநாதராகவும், தீவின் தலைவராகவும் நடிக்கிறார்... யாருக்கும் தலைவணங்காத வராகவும், தன் அறிவு முதிர்ச்சியில் அசையா நம்பிக்கை கொண்டவராகவும், தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எந்தச் சூழ்ச்சியையும் செய்யத் தயாராக இருப்பவராகவும், தன்னைத்தவிர மற்றெல்லோரையும் முட்டாளாகக் கருதுபவராகவும், கர்வம், சுயநலம், கொலைத்தன்மை முதலிய கொடுங்குணங்களுக்கிருப்பிடமாகவும் உள்ள அரசகுருவின் பாத்திரத்தை ஏற்று, உடை, ஒப்பனை முதலியவைகளில் வழக்கத்திற்கு நேர் எதிரான மாறுதலுடன் புதுமுறையில் தோன்றி, மக்களைத் திகைக்கும்படி செய்துவிட்டார் என்று சொல்வதைவிட வேறு பொருதமான வார்த்தை எனக்குத் தெரியவில்லை.

சாதாரணமாக அவரை எதிர்பார்ப்பார்கள் அமைச்சர், தளபதி, தம்பி, அண்ணன், அரசப்பிரதிநிதி மாதிரியான வேடங்களில்.

பல படங்களிலே பயங்கரமாக அவரைச் சிரிக்கச் சொல்வ துண்டு; அவரும் சிரிப்பதுண்டு. இந்தப்படத்தில் நான் அவரை அது போல் சிரிக்கவும் சொல்லவில்லை ; அவர் சிரிக்கவுமில்லை .

கர்வத்தின் சாயல் பூரணமாகப் படிந்த நடை, பெருமிதத்தில் வெளிவரும் பேச்சுக்கள், ஆத்திரம் வந்தாலும் கைப்பிரம்பைத் தன் தொடையிலே உருட்டியபடி அதை மறைக்கும் சாகஸம் இவை போன்ற பலதரப்பட்ட சிறந்த நடிப்புத்திறனால் குருநாதரின் வேடத்திற்கே ஒரு புதிய பொலிவை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். படம் முழுவதும் அவர் காண்பித்திருக்கும் அக்கறை வெளிப்படுகிறது.

 வில்லனாக நடிக்கும் இவர் தன்னுடைய கலைப்பிரயாணத்தில் புதிய தொரு பாதையில் வெற்றி நடை போடுகிறார் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

திரு.எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் எனது மூத்த சகோதரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அநேகமாக இவர், பிறரைக் கெடுக்கும் பாகத்தையே தாங்கி நடித்திருக்கிறார். கார்மேகம் என்ற பாகத்திலோ திருந்தி நன்மையும் செய்பவராக மாறுகிறார். ஆகவே இவருக்கு இந்த வேடம் ஒரு புதுமை என்பதோடு, தன் தலையைத் தடவியபடி எதிரிகளின் தலையையும் தடவி விட முடிந்த இவருக்கு இதைவிட இப்போது பெரிய வெற்றி வேறெதுவும் இருக்க முடியாது.

திரு.எம்.என்.நம்பியார அவர்கள்  இதுவரையில் என்னுடன் நடித்த படங்களில் அவருக்குப் பொருத்தமாக அமைந்தது "நாடோடி மன்னனி"ல் தான் என்று எண்ணுகிறேன். 

அவருடைய பாத்திரமே அவருக்காகத் தோற்றுவிக்கப் பட்டதோ என ஐயுறும் அளவுக்கு அவ்வளவு இயற்கையாகப் பொருந்திவிட்டது. 

அவருடைய கட்டான உடலுக்கும், இளமைக்கும், முறுக்கான பேச்சுக்கும், துணிவான வாட்போரிடும் திறமைக்கும் வாய்ப்பளிக்கப் பிங்கலன் என்ற வேடம் உதவியிருக்கிறது.

ஒரு இடத்தில் அவர் பேசும் பேச்சே அதை விளக்கிறது. "வாட்ட சாட்டமான உடல்; வாளெடுத்துப்போர் புரியும் வலிமை: ஆரணங்குகளை மயக்குகின்ற அழகு" - இந்தப் பேச்சின் முழுக்கருத்துக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறார் நம்பியார்.

அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இளமைத் துடிப்பையும், வேகத்தையும் காண்கிறோம். சண்டை ஏற்படும் நேரத்திலும் கோழைத்தனமில்லாமல் தன்

- போர்த்திறமையில் நம்பிக்கை கொண்ட வீரனாகவே காட்சியளிக்கிறார். பிங்கலனின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டுமெனக் கற்பனை செய்யப்பட்டதோ அதை உண்மை உருவமாக்கிக் காண்பித்து விட்டார் நம்பியார் என்பது ஒன்றே போதுமே அவருடைய வெற்றிக்கு அடையாளமாக.

திரு.டி.கே. பாலச்சந்திரன் ஆர்வமிக்கவர்; குழப்பமோ, கலக்கமோ, களங்கமோ இல்லாத வாலிபர்; திறமையும், அனுபவமும் அக்கறையும் நிறைய உள்ளவர்.

நான் வளர்த்த சிங்கங்கள் உயிரோடி இருந்திருந்தால் கதைப் போக்கே வேறுவிதமாக இருந்திருக்கும். இவர் தாங்கியிருக்கும் பாத்திரத்திற்கும் இன்னும் அதிக வாய்ப்பு இருந்திருக்கும். 

அவர் பேச்சிலே அந்தப் பாத்திரத்தினுடைய இலட்சியத் துடிப்பையும், அவர் நடையிலே வாலிப மிடுக்கையும், பார்வையிலே தன் எண்ணத்தை வெளியிடும் கலைநுட்பத்தையும் காட்டித் தான் வெறும் நடிகன் மட்டுமல்ல, இலட்சியப்பாதையிலே முன்னேறிக் கொண்டிருக்கும் நல்ல கலைஞன் என்பதைச் சொல்லாமல் சொல்லிருப்பதுவே அவருடைய வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும்.

வீரபாகு வேடத்தை நடித்த திரு.கே.ஆர்.இராம்சிங் நடிப்பிலும் பேச்சிலும் தனக்கெனத் தணிப்பாணியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அவருடைய குரலைக் கேட்டாலே பலவீனர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.

நாடகமேடையிலே நன்கு நடித்துத் திரை உலகிலும் விளம்பரமடைந்த இவருடைய திறமைக்குத் தகுந்த வேடம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆயினும் வேலை குறைவாயிருந்தும் மக்கள், "வீரபாகு வேடம் போட்டவர்.... அப்பப்பா....... என்று பேசும்படி செய்துவிட்ட இவருக்கு இதுவும் ஒரு வெற்றியென்று தான் சொல்ல வேண்டும்.


அமைச்சராக நடித்த நந்தா ராம் பயில்வான் (ஆமாம் பூபதி நந்தா ராம் அவர்கள் தான்) அவருடைய திறமைக்குத் தகுந்த புகழை இன்னும் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

ஆங்கிலப் பாணியில் நடிக்க வேண்டுமா, காட்டுமிராண்டியாக நடிக்க வேண்டுமா, நாகரிக  சூழ்ச்சிமிக்க மனிதனாக நடிக்க வேண்டுமா, எந்த மாதிரியான பாகத்தில் வேண்டுமானாலும் திரு. நந்தாராம் அவர்களால் நடிக்க முடியும். 

நாடோடி மன்னனில் அமைச்சராக நடிக்கும் இவர், "அமைச்சர் ஓரளவுக்கு வயது முதிர்ந்தவர், அனுபவப்பட்டவர், பொறுப்புமிக்கவர். 

என்பதையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் தனது நடிப்பால்.


நிமிர்ந்த நெஞ்சுடன் இவர் நடப்பதை நன்கு கவனித்தவர்கள் பாரதியார், "நிமிர்ந்து நட" என்று சொல்லியதற்கு இவர் இலக்கணமாக இருக்கிறரோ என்று எண்ணத் தோன்றும்.

நாடோடி மன்னனில் முக்கியத் திருப்பத்திற்குக் காரணமாக இருக்கும் அமைச்சருடைய வேடத்தைச் சரிவர நிறை வேற்றியதால் தானே அந்தக் காட்சிகள் நினைவிலிருக்கின்றன. ஆகவே அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றிய இவருக்கு இதுவும் ஒரு வெற்றி தான் என்று சொல்வது பொருத்தம்தான்.

தளபதி ஒரு ஆத்திரக்காரர்; தன் மனத்தில் அடக்கி வைத்துக் கொள்ளும் அனுபவமில்லாதவர்; யாரையும் சந்தேகிப்பார்; நம்பி விடுவார். இத்தகைய குணத்தைப் பெற்ற தளபதி பாத்திரத்தை அதற்குப் பொருந்தும் விதத்தில் நடித்திருக்கிறார் திரு. டி.வி. சிவானந்தம். இவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பல காலம் ஒன்றாய் வாழ்ந்தவர்; மதுரையில் வசித்துப் பல ஆண்டுகள் தனிப்பட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். இவர் சில ஆண்டுகட்கு முன் படங்களில் நடித்திருந்தாலும், நாடோடி மன்னனில் தன்னை மக்களின் நினைவில் இருக்கும்படி செய்து கொண்டது இவருக்குக் கிடைத்த வெற்றியென்று ஏன் சொல்லக் கூடாது?  

துணை நடிக நடிகையர் நாடோடி மன்னனில் நடித்தது போல் அக்கறையாகவும், பொறுப்போடும் வேறு படங்களில் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள நடிப்புத் திறமை, பேச்சுத்திறமை, அத்தனையையும் வெளிக்காட்டப் போட்டி போட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

காவல் வீரர் முதல் கேணியிலே தண்ணீர் இறைக்கும் பெண் வரை போட்டியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர் என்பதை வெளியிடும்போதே யாரும் சொல்லாமல் வெற்றி இவர்களுக்கே என்று வெளிப்படுகிறதே.

கும்பன், நிகும்பன் - இவர்கள் இந்தப் படத்தின் கடைசிப் பகுதியில்கூட ஒரு திருப்பத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று அஞ்சும்படி செய்கிறார்கள்.

கும்பன் பாகமேற்ற திரு.என்.எஸ்.நடராசன் பல ஆண்டுகளாகச் சினிமா உலகத்தில் பணியாற்றி வருபவர்.

 இது வரை அவரை யாருமே சரிவரப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நாடோடி மன்னன் அவருடைய திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு... இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறது இவருடைய பாத்திரத்தைக் கண்டதும், எஜமானுக்கு நம்பிக்கையுள்ள ஊழியனாகவும், கொள்ளை கொலைக்கஞ்சாப் பாதகனாகவும், முரடனாகவும் உள்ள ஒருவனைப் பல கதைகளில் சந்தித்திருப்போம் படித்தபோது....

அத்தனை கதைகளில் உள்ள பாத்திரங்களையும் ஒன்றாக்கி உருக்கொடுத்தால் எப்படியிருப்பானோ அதுபோல் என்.எஸ்.நடராசன் அவர்கள் காட்சி அளிக்கிறார்.

 அதனால் தான் இவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தை (நடராசன் அவர்களையல்ல) எங்கோ சந்தித்திருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. 

மக்களுக்கு வெறுப்பளிக்கும் பாத்திரத்தை ஏற்று, மக்கள் அருவருப்படைந்தாலும் அதே நேரத்தில் " அந்த ஆள் சரியான ஆள்டா" என்று பேசும்படி செய்த நடராசன் அவர்களுக்கு அவர் வாழ்க்கையில் இது முதல் தரமாகக் கிடைத்த வெற்றியாகும்.

இன்னொருவன் தானே சிந்திக்கத் தெரியாதவன்; தனித்து இயங்காதவன். எஜமான் சொல்வதைச் செய்வான்; ஆனால் அதற்கும் துணை வேண்டுபவன். வலிவுண்டு; அறிவில்லை. திறமையுண்டு; சிந்திக்கத் தெரியாது. ஏன் செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாது. இப்படிப்பட்டவன்தான் நிகும்பன். இந்தப் பாத்திரத்தைத் திரு.குண்டுமணி ஏற்று நடித்திருக்கிறார்.

திரு. குண்டுமணியும் பல ஆண்டுகளாகச் சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர். சண்டைக் காட்சிகளில் ஒழுங்காகவும், திறமையாகவும் பணியாற்றுபவர். மரியாதையும் அன்புள்ளமும் கொண்டவர். இவருடைய குணத்திற்கு நேர்மாறான வேடம்; ஆனால் உருவத்திற்கு மிகமிகப் பொருத்தமான வேடம்! இதை இவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் தானும் தோற்று, தன்னை நம்பியர்களையும் தோல்விக்கு இழுத்துச் சென்றிருக்கும். 

இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதிலிருந்தே இவர் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றுவிட்டார் என்பது புரியுமே...…

சண்டைக்காட்சிகளிலே ஈடுபட்டவர்களைத் தனித் தனியாய்க் குறிப்பிட முடியவில்லை. ஆனால் சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கின்றனவென்றால் அதற்கு இவர்கள் தான் காரணம். நன்றாக இருக்கிறது என்று தோல்வி அடைந்ததையா கூறுவார்கள்! ஆகவே இவர்களுக்கு இவர்களுடைய பணியில், உழைப்பில் வெற்றி கிடைத்து விட்டது என்று கூசாமல் கூறலாம்.

சகாயம் ! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பது தான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல.

கதையின் குறிப்பிடத்தக்க, பாத்திரமாக இருக்கும் "நாடோடி"க்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக்கொடுப்பவர் சாகயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில் - அதே நேரத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக்கண்டாலும் திகைப்பு ; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம்; காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படிக் குழப்பமான குணம் படைத்த பாத்திரம் தான் "சகாயம்" இதனை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

 சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள், பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளைப் புதிய விதமாகச் செய்ய வேண்டும் (நடிக்க வேண்டும்) என்று தான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள்.

ஆனால், சந்திரபாபு அவர்கள் நடிக்கும்போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாபு அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள் நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச்சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்.

 அதற்காகத் தனக்கு எந்த ஆபத்துவரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப்பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத் தன் விருப்பத்தைத் தடுப்பது பிடித்தமில்லாததாயிருப்பினும், மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர்.

மேலேயிருந்து குதிப்பேன் என்பார்..…


எனக்கு நன்கு தெரியும், அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சில சமயம் புதுவிதமாகக் குதிப்பதாகச் சொல்லி, திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்துவிடுவார். மரக்கிளை ஒடிந்துவிழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக்காட்சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு, மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். 

ஆயினும் எனக்குப் பயம்தான்...

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாதே என்று கலங்கியப்படியே இருக்க வேண்டும்.

ஒரு நாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்கவேண்டிய கட்டம்.

குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிதுநேரம் அதை ஒட்டி ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஒட்டச் செய்து படமெடுத்து முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகிவிட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார்; முரட்டுத்தனம் செய்து அடங்கியிருந்த குதிரை மீது ஏறப்போனர். நான் தடுத்தேன், அந்தக் குதிரை சரியல்ல என்று. சிறிதுநேரம் இங்கேயே சுற்றுகிறேன் என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லாகனைப் பிடித்த படி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. சிலர் ஓடி வந்து, "பாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்துவிட்டார்" என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை ..... 

எப்படியோ பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு. 

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல; தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்க் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்குக் குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன் : 

"சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், என்றால், அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத் திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார்.. அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை எத்தனையோ! 

அவைகளை எல்லாம் - ஒரே நாளில் நினைத்ததும் பெற முடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் - ஒரே வினாடியில் இழந்துவிடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்" என்றேன்.

"மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் தான் கொடுக்கிறோம்; அறிவைக்கூட அல்ல" என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்....

"கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல" என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர்விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது.

"எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?' என்று அவரால் கேட்க முடியும் - கேட்கக்கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை... இதில் மட்டும் என்று எண்ணிவிடாதீர்கள்; தொழிலிலும் கூட....

உதாரணத்திற்கு அவர் சொன்ன சொல்லையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.

"இதுவரையில் நீங்கள் சொன்னபடியே நடித்து வந்தேன். படமோ முடியப்போகிறது. இன்று ஒரு நாளாவது என் இஷ்டப்படி செய்ய விடுங்களேன்....... என்றார். 

இப்படி ஒற்றுமை உள்ளத்துடன் பணியாற்றி அவர் நாடோடி மன்னன் படத்தில் வேறு எவரும் செய்ய முடியாத - செய்ய விரும்பாதவைகளையெல்லாம் செய்து இருக்கிறார்!

கோழிக்குஞ்சு வாய்க்குள்ளிருந்து வரவேண்டும் - அதை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு, காட்சியில்வாயைத் திறந்து குஞ்சு வெளிவரச்செய்ய வேண்டும். குஞ்சு தன் கூரிய நகங்களால் தொண்டையைப் பிறாண்டிவிடுவது எளிதில் நடக்கக்கூடி காரியம். இதை அறிந்தும் அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கலைப்படாமல் அந்த காட்சியிலே நடித்தார். 

சரியாக அமைந்திராவிட்டால் என்ன செய்வதென்று மீண்டும் ஒருமுறை எடுக்கும்படி வற்புறுத்தி எடுக்கச் சொன்னார். நான் சரியாகவே இருக்கிறது, போதும் என்று சொன்னே; மேலும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தால்.

இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் எடுத்துக் கொள்ளுகிறவர்கள் சிலர் தானிருக்கிறார்கள்.

புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை அக்கறை காட்டுவது என்பது இயற்கை. புகழ்பெற்ற பின்னும், நல்ல விளம்பரம் கிடைத்த பின்னும் இவ்வாறு தொழிலில் அக்கறை காண்பிப்பது மிகக் குறைவே.....

ஆகவேதான் திரு. பாபு அவர்களைப் பற்றி இத்தனை எழுத வேண்டி வருகிறது.


கலையை ரசிக்கும் தன்மையும் அதிகம் பெற்றிருப்பவர் திரு.பாபு யாராயிருந்தாலும் சரி, அவரிடம் கலைத்திறமையைக் கண்டு விட்டால் பாபுவால் பேசாமலிருக்க முடியாது. அந்தக் கலைஞரைப் பாராட்டிப் புகழந்து மகிழ்ச்சியடைவதிலே அவருக்கிணை அவரே தான். அவருடைய முழுத்திறமையையும் கலை உலகம் இன்னும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இயற்கைக்குப் பொருத்தமற்ற, ஆனால் மக்களை மூடநம்பிக்கையுள்ளவர்களாக ஆக்கிவிடாத நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முட்டைகளைத் தின்று, குஞ்சு வெளிவரும் காட்சியிலிருந்து சாப்பாட்டிற்கு மனுஷனுக்குக் கொள்ளு கூட இல்லே... குதிரைக்கு முட்டை கொடுக்கறீர்களே என்று வேடிக்கையாக, அனால் பெரிய தலைவர்கள் முதல் உலக நடப்பு ஒன்றுமே அறியாத பாமர மக்கள் வரை சிந்திக்கச் செய்யும் அவருடைய இயற்கை நடிப்பு அவருடைய நுண்ணிய கலைத்திறமையை எடுத்தக் காட்டு வதாகும்.... நாடோடி மன்னன் - நகைச்சுவைப் பகுதியிலே அவர் கையாண்டிருக்கும் முறை அவருக்கெனத் தனியாக அவர் உருவாக்கியிருக்கும் அமைப்புக்குப் பெரியதொரு வெற்றியென்று யாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

                                                                                                                                        தொடரும்..... 

Friday, 4 September 2020

45 - நாட்கள் / 40,000 அடிகள் || ஆயிரத்தில் ஒருவன் ||

                                
                     

     


இரண்டு  வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் பம்பாய் செல்லும் வைகவுண்ட் விமானத்தில் வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியும், 'சித்ரா' கிருஷ்ணசாமியும் சென்று கொண்டிருந்தார்கள்.

பேச்சு வாக்கில், தான் எடுக்கப் போகும் சூரஜ் ஹிந்திப் படத்தின் கதையைப்பற்றி கிருஷ்ணமூர்த்தி சித்ராவிடம் குறிப்பிட்டார். 'என்னிடம் இரண்டு கதைகள் சொல்லப்பட்டன. எனக்கு இது ரொம்பவும் பிடித்திருந்தது. எனவே இதையே எடுக்கப் போகி றேன்'' என்று சூரஜ் கதையைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ண மூர்த்தி .

 ''அந்த மற்றொரு கதை என்ன?'' என்று கேட்டார் சித்ரா. "அதைச் சொல்லட்டுமா?'' என்று சொல்லி அந்தக் கதையைச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

பம்பாய் வந்தது. இருவரும் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக் கப் போய் விட்டார்கள்.

 

இரண்டு வருஷங்கள் சென்றன.

'கர்ணன்', 'முரடன் முத்து' படங்களை வெளியிட்ட பின், பத்மினி பிக்சர்ஸார், சண்டைகள் நிறைந்த படமொன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டார்கள்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு பம்பாய் செல்லும் வழியில் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி சொன்ன கதை 'சித்ரா', கிருஷ்ணசாமிக்கு, உடனே நினைவுக்கு வந்தது. பி.ஆர்.பந்தலுவிடம் இதைச் சொல்லவே, அவர் கிருஷ்ண மூர்த்தியை பார்த்துவிட்டு, வரச் சொன்னார்.

கிருஷ்ணமூர்த்தியிடம் வந்தார் சித்ரா. அந்தக் கதையைக் கேட் டார்.

கே.ஜே.மகாதேவனுடைய கதை அது'' என்று சொல்லி, மகாதேவனிடம் சொல்லி, கதையை வாங்கிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

 

அதுதான்ஆயிரத்தில் ஒரு வன்'' கதை.
கதையைக் கேட்ட 'எல்லாருமே இதில் வரும் கதாநாயகன் வேஷத் திற்கு எம்.ஜி.ஆர். தான் பொருத்தமாக இருப்பார் என்று ஒரு , மன தாகச் சொன்னார்கள்

பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்புகளில் இதுவரை எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரி டம் வந்து கேட்டார்கள்.

அவரும் ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு வேலைகளும் மளமள வென்று ஆரம்பமாகி, நடை பெற ஆரம்பித்தன.

கதையின் பெரும் பகுதி காட்சிகள் கார்வாரை அடுத்துள்ள கடற்கரையில் படமாக்கப்பட்டன.

தமிழ் நாட்டிலுள்ள கடற்கரைகளை விட்டு விட்டு, எண்ணூறு மைலுக்கப்பாலுள்ள கார்வார் கடற்கரையை ஏன் பத்மினி பிக் சர்சார் தேர்ந்தெடுத்தார்கள்?

இதற்கு கதையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம்.

'ஆயிரத்தில் ஒருவன்' கதை இரண்டு தீவுகளில் நடை பெறுகிறது. ஒரு தீவு கொள்ளைக்காரர்களுடையது; மற்றொரு தீவு அடிமைகள் நிறைந்தது.

கரையிலிருந்து பார்த்தாலேயே இந்தத் தீவுகள் தெரியவேண்டும். தவிர, கடற்கரை ஓரமாக பாய் மரக் கப்பல்கள் வந்து நிற்க வேண்டும். அதற்கேற்ப ஆழம் பொருந்தியதாக கடற்கரை அமைந்திருக்க வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக கடற்கரை யில் அடர்ந்த காடுகளும் சோலைகளும் இருக்க வேண்டும்.

கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டினத்திற்கு சமீபமாக, மேற்குக்கரை ஓரம் மங்களூர், கோவா மற்றும் பல இடங்களைச் சுற்றிப் பார்த்த பின், கார்வார் கடற்கரையே இதற்கு ஏற்ற தெனத் தீர்மானித்தார்கள். இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க சுமார் ஐயாயிரம் மைல்கள் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.

கார்வார் கடற்கரை மூலம்தான் நம் நாட்டில் உற்பத்தியாகும் இரும்பு தாதுப்பொருள்கள் ஏற்று மதியாகின்றன. இவற்றை ஏற்றிச் செல்லும் பெரிய பாய்மரக் கப்பல்கள் அங்கே இருக்கின்றன. தவிர, மேற்குக் கடற்கரை ஓரம் உள்ள முக்கிய பட்டினங்களுக்கும் பம் பாய்க்கும் சாமான்களை ஏற்றிச் செல்ல பல படகுகளும் அடிக்கடி செல்கின்றன.

பத்மினி பிக்சர்சார் இம்மாதிரியான இரண்டு பெரிய படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள். அவர்கள் கதைக்கு ஏற்ப இந்த இரண்டு படகுகளும் சிறிது மாற்றி அமைக்கப்பட்டன. ஒன்று நாகரீகமான கப்பல்; மேலே தங்கும் அறை உண்டு; மற்றொன்று அடிமைகளுடையது.
படப்பிடிப்புக்காக வந்திருந்த எம். ஜி. ஆர்., நம்பியார் ஆகியோர் கார்வாருக்கு இருபத்திரண்டு மைல் தள்ளியிருந்த பெல ஹிரி விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஸ்டண்டு பார்டியினர் கார்வார் முனிசிபல் ஹாலில் தங்கியிருந்தார்கள்; மற்றவர்கள் அங்கிருந்த ஓட்டலில் தங்கினார்கள்.

விடியற்காலை நான்கு மணிக்கே படப்பிடிப்புக்கு தயாராவார்கள். கடலில்,கரைக்கு நூறு அடி தள்ளி பாய்மரக்கப்பல் இருக்கும். கரையிலிருந்து கப்பலுக்குப் போய்வர சிறு படகுகளை அமர்த்திக் கொண்டனர். தவிர படகுகளை இணைத்து தெப்பங்களையும் செய்து கொண்டார்கள். இதன் மேல் சுமார் நூறு பேர்கள் ஒரே சம யம் வர முடியும். இதன் மூலம் தான் காமிரா, மற்றும் ஜெனரேட்டர் முதலியவற்றை ஏற்றிச் செல்ல முடிந்தது.
கரையில் ஒரு கோஷ்டி இருக்கும்; கப்பலில் ஓரு கோஷ்டி இருக்கும். கப்பலிலிருந்து டைரக்டர் பந்துலு சொல்வது கரையிலுள்ள வர்களுக்குக் கேட்காது; இங்கிருந்து சொல்வது அவருக்குப் புரி யாது. இதற்காக நீராவிப்படகு ஒன்றை கடற்கரைக்கும், கப்பலுக் கும் இடையே அடிக்கடி ஓட்டினார்கள். கப்பலுக்குச் சென்று பந்துலு சொல்லும் குறிப்புகளை வாங்கிக் கொண்டு இங்கே வரும் அந்தப் படகு. கரையிலுள்ளவர்கள் அதன் படி தயாராவதற்குள், ஒரு பெரும் காற்று வந்து, அந்தப் பெரிய கப்பலை அப்படியே மறுபுறம் திருப்பி விடும். மறுபடியும் அடியிலிருந்து எல்லாம் ஆரம்பமாக வேண்டும்!

கடற்கரையை யொட்டி உயரமான மலைப்பிளவுகள் உண்டு. பிற் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம் ஒரு மலையின் நிழல் மற்றொன்றின் மீது விழுந்து விடும். நிழலில் எப்படிப் படமாக்க முடியும்?

இதனால்தான் இரண்டு வாரங்களில் படமாக்கி விட்டு வந்து விடலாம் என்று நினைத்துப் போன பத்மினி பிக்சர்சாருக்கு, இந்த அனுபவங்களுக்குப் பின்னர் தான், அப்படி நினைத்தது எவ்வளவு தவறானது என்ற உண்மையும் தெரிந்தது.

படப்பிடிப்பு முடிந்து, அவரவர் தங்கள் ‘மேக் அப்’பைக் கலைத்து விட்டு, அவர்கள் இருப்பிடம் போய்ச் சேர இரவு ஏழுமணியாகும். ஆக இம்மாதிரி, விடியற் காலை முதல் இரவு ஏழு மணி வரை அவர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது !

எம்.ஜி.ஆர். படத்தின் நாயகன். அவரை அடிமைப்படுத்திச் சென்று விடுகிறார்கள். அங்கு அவர் தப்பிக்க ஜெயலலிதா உதவுகிறார். பின்னர் அவர் கொள்ளையர்கள் வாழும் தீவில் வந்து விடுகிறார்.இங்கே வரும் அவர், கொள்ளையனாக மாறினாலும், நியாயத்திற்காகவும் நேர்மைக்காகவும் போராடி, கடைசியில் ஜெயலலிதாவை எதிர்பாராத வகையில் சந்திக்கிறார்.

இதன் இடையே பல சண்டைகள் வருகின்றன. நம்பியார், எம்.ஜி. ஆர். இருவரும் பயங்கரமாகப் போரிடும் காட்சிகளும்,ராமதாஸ், எம்.ஜி.ஆர், நம்பியார், மற்றும் ஜெயலலிதா, நாகேஷ், மாதவி வரும் பல முக்கியமான காட்சிகளும் இங்கு எடுக்கப் பட்டன.

ஒரு முறை கத்திச் சண்டையின் போது, அதில் கலந்து கொண்ட ஸ்டண்ட் பார்டியைச் சேர்ந்தவர் தவறி கடலில் கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு காயம் ஏற்படவே, உடனே அங்கி ருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தவிர, மற்றபடி விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.
எம். ஜி. ஆர். படப்பிடிப்பு முடிந்ததும் இருபது மைல் தள்ளி உள்ள விடுதிக்குப் போய் விடுவார். பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப் பட்டு வந்து, ஆஸ்பத்திரியிலிருக்கும் அடிப்பட்டவரை விசாரிப் பார்; தனது பார்டியைச் சேர்ந்தவர்களை வந்து பார்ப்பார் - வசதி கள் சரியாக இருக்கின்றனவா என்று. ஆக படப்பிடிப்பு முடிந்து, விடுதிக்குச் சென்று, சற்றும் சோர்வோ களைப்போ இல்லாமல் தன்னுடன் வந்தவர்களின் நலன்களைப் பற்றி கவனிப்பதில் அவர் காட்டும் ஈடுபாட்டைக் கண்டு பலர் வியந்து போய் விட்டார்கள்!

அவருடன் வந்திருந்த ஸ்டண்ட் பார்டியினரும் மிகவும் ஒழுங்காக, கட்டுப்பாடுடன் இருந்தார்கள். இந்தப் பார்டியிலேயே, வேறொரு கோஷ்டியைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் குடித்து விட்டார் என்பதறிந்த எம். ஜி. ஆர். ''உடனே அந்தக் கோஷ்டியைத் திருப்பி அனுப்பி விடவேண்டும்'' என்று சொல்லி விட்டார். “ஒருவர் செய்த தவறுக்காக, அவருடன் வந்தவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்'' என்று எடுத்துச் சொன்ன போது, சமாதானமடைந்த அவர், தவறு செய்த வரை மட்டும் உடனே திருப்பி அனுப்பிவிடச் சொல்லி விட்டார்!

 

ஒழுக்கத்தின் எல்லையில் இருந்தது அவரது கோஷ்டி!

தவிர, ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது தனது சென்னை காரியாலயங்களுடன் செய்த போன்களுக்கான செலவு, தனது பெட்டி படுக்கைகளை எடுத்து வந்த வகையில் . ஏற்பட்ட - கூலிச் செலவு இவற்றையெல்லாம் கூட, நிர்பந்தமாக, வலிய முன்வந்து "இது என் சொந்த செலவு; நான் தான் தருவேன்'' என்று சொல்லி தந்து விட்டார்! கார்வாரில் ஏராளமான 'தமிழ் மக்கள் கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். படப்பிடிப்புக்குத் தேவையான துணை நடிகர்களை அவர்களிடையிருந்தே எடுத்துக் கொள்ள முடிந்தது.

 கார்வாரிலிருந்து புறப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பாக எம். ஜி. ஆருக்கு கார்வார் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு வர வேற்பு அளித்தார்கள்.எம். ஜி. ஆர். அங்குள்ளவர்களின் பிரித்தாளும் கொள்கையைத் தெரிந்து கொண்டு, 'நம்மவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் உயர்வடையலாம்'' என்று அறிவுரை வழங்கினார். புறப்படுவதற்கு முன்பாக துணை நடிகர்களாக தன்னுடன் வந்து நடித்த கார்வார் தமிழ் கூலிகள் ஐம்பது பேருக்கு துணி மணிகளும் எம். ஜி. ஆர். வாங்கிக் கொடுத்தார். இவற்றை அவர்கள் சற்றும் எதிர் பார்க்காததால் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

எம். ஜி. ஆருடன் வெளிப்புறக் காட்சிக்காகப் புறப்படுவதற்கு முன்பாகவே இங்கிருந்த சிலர், ‘எம். ஜி. ஆர். நீண்ட நாட்கள் வெளிப்புறக் காட்சிக்காகத் தங்கமாட்டார். அவர் அப்படித்தான் சொல்வாரே தவிர, அங்கு போன பின், இதை ஸ்டூடியோவிலேயே எடுத்துக் கொள்ளலாம்; இதை சென்னையிலே படம் பிடிக்கலாம் என்று சொல்லி, தட்டிக் கழித்து , விரைவில் வந்து விடுவார் பாருங்ளேன்!'' என்று சித்ரா கிருஷ்ணசாமியிடம் சொன்னார்கள். இவர்கள் எல்லாருமே எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள்; எடுத்தவர்கள். இவர்கள் சொல்வதையும் அவரால் புறக்கணிக்க முடியவில்லை. ஆனால் கார்வாருக்குச் சென்றதும் தான் இவை அப்படியே முரணானவை என்பது தெரிந்தது.

இதுபற்றி எம்.ஜி.ஆரிடமே கேட்கப்பட்டது. அவர் அதற்குப் பதிலும் சொன்னார்.

வெளிப்புறக் காட்சி என்று படம் பிடிக்க வரும்போது, நம் ஸ்டூடியோவிலோ, அல்லது நமக்கு சமீபமாகவோ இல்லாத காட்சி களாக இருந்தால் பரவாயில்லை. ஆயிரம் மைல்கள் வந்துவிட்டு, இங்கிருக்கும் சோலையிலோ, அல்லது வெறும் கடற்கரையிலோ படமாக்குவதில் என்ன புதுமை இருக்கப்போகிறது? இதைச் சென்னையிலேயே படமாக்கலாமே ! உதாரணமாக கல்கத்தாவின் சூழ்நிலையில் கதை இருக்கிறது என்றால் கல்கத்தாவில் தான் படமாக்கவேண்டும்; கல்கத்தாவின் வீட்டில் நடப்பதாகச் சொல் லப்படும் கதையை, சென்னையிலேயே எடுக்கலாமே! இதைத் தான் நான் சொல்கிறேன்.

ஆனால் உங்கள் விஷயம் வேறு. இங்கே உள்ள கடற்கரையைப் போல வேறு கடற்கரை கிடையாது; இங்குள்ளது போன்ற படகுகளை வேறு எங்கும் கொண்டு போக முடியாது. எனவே கதைக்குப் பொருத்தமாக உள்ள இந்தச் சூழ்நிலையில் படமாக்கினால்தான் நன்றாக இருக்கும். இம்மாதிரியான ஒரு இடத்தை நீங்கள் தேர்ந்து எடுத்து விட்ட பின், நான் எப்படி மறுக்க முடியும்?'' என்றார் எம்.ஜி.ஆர்.

அவர் சொல்வதில் எவ்வளவு' உண்மைகள் இருக்கின்றன!பத்மினி பிக்சர்ஸ் திட்டப்படி எல்லாம் சிறப்பாக முடிந்தாலும், அவர்களால் ஒரு பாட்டை படம் பிடிக்க முடியவில்லை!

ஆக நாற்பத்தைந்து நாட்கள் கார்வாரில் தங்கியிருந்து சுமார் நாற்பதாயிரம்  அடிகள் வரை படம் எடுத்தார்கள். இது படத்தில் ஐந்து அல்லது ஆராயிரம் அடிகள்தான் வரும். ஆயினும் தமிழ்ப் படவுலகுக்கு முற்றிலும் புதுமையாக இருக்கப்போகும் இந்தக் காட்சிகளின் சிறப்பை எண்ணும் போது அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு ஏற்ற பலனே அடைந்திருப்பதாக நினைக்கிறார் கள்.

இந்தக் காட்சிகளுக்காக ஐந்து லக்ஷங்கள் செலவழித்ததைப் பற்றி பத்மினி பிக்சர்சார் பெரிதாக நினைக்கவில்லை.

தமிழ்ப்பட ரசிகர்களுக்கு புதுமை விருந்து அளிக்க வேண்டும் என்ற அவர்கள் லக்ஷியத்தையே பெரிதாக நினைக்கிறார்கள்.


                  -   பேசும் படம் மலர் 

(ஏப்ரல் மதம் )  1965

 

Tuesday, 1 September 2020

“யாருக்கு வெற்றி “ - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - பாகம் - 05

 


இப்போது இன்னொரு முக்கியமான பகுதிக்கு வருகிறேன்....


நடிக நடிகையர்கள் பற்றி எழுதப் போகிறேன் என்பதை நீங்களே அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் யாரையாவது முதலில் குறிப்பிட்டு எழுதினால் மற்றவர்கள் முதலில் குறிப்பிட்டவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றோ, திறமை குறைந்தவர்கள் என்றோ கருதக்கூடாது....
முதலில் நடிகையர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். படத்தில் வந்த வரிசைக் கிரமத்திலே எழுத விரும்புகிறேன். திருமதி பி.பானுமதி அவர்கள்தான் படத்தில் முதலாவதாக வருகிறவர்கள்.
அவர்கள் நடிப்பைப் பற்றியும் ஒத்துழைப்பைப் பற்றியும் எழுதுவதற்கு முன் மூன்று ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென்று கருதகிறேன்.
சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸாரின் "அலிபாபா படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்த நேரம் "நாடோடி மன்னன்' விளம்பரம் (ஜெண்டாவின் கைதி என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு பரணி பிக்சர்சாரின் விளம்பரமும் வெளி வந்தது. அவர்களுடைய விளம்பரம் வெளிவந்த அன்று, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது திருமதி. பானுமதி அவர்கள் சொன்னார்கள் :
"நாங்கள் எடுக்கும் கதையையே நீங்களும் எடுக்கப் போகிறீர்களாமே! நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன” என்று.
நான் சொன்னேன் :
"நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி அதற்காக இக்கதையைத் தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்ஷன் (இயக்குநர்) பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப் போகிறேன்" என்று. இது பற்றி மேலும் பேச்சு நடந்தது - முடிவாகச் சொன்னேன், "நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள "மன்னனாக மாற்றப்படும் காட்சி'யை மட்டும் தான் வைத்துக்கொள்ளப் போகிறேன் மற்றவை எல்லாமே வேறாகத்தானிருக்கும்; உங்களுக்கும் கதையை மாற்ற முடியாதிருக்குமானால் நீங்களும் எடுங்கள் - நமக்குள் போட்டா போட்டியே வராது. உங்கள் கதை "ஜெண்டாவின் கைதி"யின் நேர்ப்பதிப்பு - எனது கதை வேறு" என்று சொன்னேன்.
உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அந்த நிலை தான்.
சில நாட்களுக்குப் பிறகு சொன்னார்கள் :
"நாங்கள் அந்தக் கதை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகமில்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்" என்று நன்றி தெரிவித்தேன் உண்மையான உள்ளத்துடன்.
நாடோடி மன்னனில் தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.
எந்த நலத்தையும் எதிர்பாராமல் அவர்கள் விட்டு கொடுத்தார்கள் என்பது தான் உண்மை .
தன்னிடமிருக்கும் கதையைத் தருவதாகவும், திரு. ஏ.கே. வேலன் அவர்கள் தான் கதை வசனம் எழுதியிருப்பதாகவும், அதைப் பயன் படுத்திக் கொள்ளலாமென்றும் சொன்ன பெருந்தன்மையை எவ்வளவுதான் போற்றினாலும் போதாது....
நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன்.
இதே குணத்தைப் படைத்தவர் திருமதி.பானுமதி அவர்கள். இருவரும் விட்டுக் கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். எம்.ஜி.ஆர். தானே டைரக்ட் செய்து, தான் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா? பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா படம் வெளிவரும்போது?.... என்றெல்லாம் சந்தேகப் பட்டவர்கள் (அதை விட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலை குனியும்படி ஒத்துழைத்ததோடுமல்ல, தான் ஏற்ற "மதனா" என்ற பாத்திரத்தை. வேறு எவரும் இவர் போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களைச் சொல்லும்படி செய்துவிட்டார். இவ்வாறு புகழப்படுவதைவிட ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்.
திருமதி எம்.என். இராசம் அவர்கள் தான் அடுத்தபடியாகப் படத்தில் தோன்றுபவர். எவ்வளவு நடிப்புத் திறமை உடையவர்களையும் சோதனை செய்து விடும் பாத்திரம் தான் இவருக்குக் கொடுக்கப்பட்டது.
நல்ல குணமும் பண்பாடும் படைத்தவள் மனோகரி. இளமையின் உணர்ச்சி வேகத்தில் துவளுகிறவள் மனோகரி. ஆனால் அதற்காகத் தன் கற்பையோ, நேர்மையையோ ஒரு சிறிதும் இழக்க விரும்பாதவள் மனோகரி. தனது அன்புக்கணவன் வேறெருத்தியோடு பழகுவதாயும், தன்னை அலட்சியப்படுத்துவதாயும் நினைப்பவள். தன்னுடைய வாழ்வுக்கு ஊறு தேடும் ஒருவர் மீது யாருக்கும் எளிதில் ஆத்திரம் ஏற்படுவதுதான் மனித இயல்பு. சிறப்பாகப் பெண்கள், கணவன் வேறொரு பெண்ணைப் புகழ்ந்து பேசுவதைக் கூடப் பொறுக்கமாட்டார்கள். ஆனால் மனோகரி தனக்கு எதிராக இருக்கும் மதனாவுக்குக்கூட எந்தத் துன்பமும் நேரக்கூடாது என்று எண்ணும் பொறுமை சாலி. தன் கணவன் தவறு செய்வதைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்லை. அவருக்கு அதனால் ஆபத்து நேரக்கூடாதே என்று நினைக்கும் அன்புள்ளவள். வசியம் போன்றவைகள் கேலிக்கு இடமானவைகள்; அறிவுக்குப் பொருத்தமற்றவை என்ற நல்ல அறிவும் திடமும் பெற்றவள்.
மேலும் தான் அதுவரை கணவன் என நம்பியிருந்தவன் வேறு யாரோ என்று குழம்பினாலும், அவனுடைய நல்லெண்ணத்தை உணர்ந்து அவனைத் தன் அண்ணனாக ஏற்று மன்னிப் புக் கோரும் நற்பண்புடையவள்.
சூழ்ச்சி, பொறமை, அடுத்துக் கெடுத்தல், பண்பற்ற செயலிலே
ஈடுபடுதல் போன்றவைகளைக்குணமாகக் கொண்ட பாத்திரங்களில் தான் திருமதி எம்.என்.இராசம் அவர்கள் பெரும்பாலும் இதற்கு முன் நடித்திருந்தார்கள்.
மனோகரி பாத்திரமோ - நேர் எதிர்மாறானது.
எம்.என்.இராசம் அவர்களை இந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிந்ததும் பலருக்கு அச்சம் ஏற்பட்டது. மனோகரி வேடமே சரியாக அமையாது என்று எண்ணினார்கள். யோசனைகளை எனக்கு யாரும் சொல்லலாம்; எப்படியும் சொல்லலாம். முடிவு என்னிடமேதான் வைத்துக் கொண்டிருந்தேன் நாடோடி மன்னனைப் பொறுத்தவரை.
"நான் செய்த முடிவை மாற்ற முடியாத காரணத்தால் படம் தோல்வி அடையக்கூடாதே" என்று பலவாறு குழம்பினார்கள் எனது நன்மையை விரும்பிய நண்பர்கள்.
ஆனால் என்னுடைய முடிவே சரியான முடிவு என்பதையும், தான் எந்த பாகத்தையும் ஏற்று நடிக்கத் திறமை பெற்றவர்கள் என்பதையும் எம்.என்.இராசம் அவர்கள் நிருபித்துவிட்டார். புதுவிதமான பாத்திரத்தை ஏற்று நடித்துத் தனது கலை வாழ்வில் புதிய வெற்றியைத் தேடிக் கொண்டார் என்று ஏன் சொல்லக்கூடாது?
படத்தில் .... மூன்றாவதாகத் தோன்றுகிறவர் ஜி. சகுந்தலா, மனோகரியின் நலனையே பெரிதாகக் கருதும் ஒரு தோழியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்; நகைச்சுவை நடிகருடன் பங்கு கொள்கிறார் தான் விரும்பியவன் தன் உயிர்த்தோழிக்குத் துரோகம் செய்கிறான் என்றறிந்ததும் அவனையே தன் தந்தையிடம் சொல்லித் தண்டிக்கச் சொல்லும் குணம் படைத்த நல்ல தோழியாகத் தோன்றி, படத்தில் அதிக வேலையில்லாவிடினும் மக்கள் மனதில் தன்னை நினைவிருத்திக் கொண்ட திலிருந்தே அவருடைய திறமைக்கு இது வெற்றியென்று நிச்சயமாகக் கூறலாமே!
அடுத்ததாக பி. சரோஜா தேவி அவர்கள் வருகிறார். இந்தப் பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும் இன்று விளம்பரமடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்துண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெரிதும் முயன்றேன். எனது முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையரைப்படமெடுத்தும் பார்த்தேன், சரியாயில்லை.
பிறகுதான் இவரை நடிக்கச் செய்து படமெடுத்தேன். இது ஒரு புதிய விசித்திர அனுபவம்தான்.
இவரைக் கொண்டு "பாடு பட்டாத் தன்னலே" என்ற பாட்டுக்கு நடனம் ஆடச்செய்து முன்பே படமும் எடுக்கப்பட்டு விட்டது. இளவரசி ரத்னா வேடத்தில் நடிக்கச் செய்ததனால் முன்பு எடுத்த காட்சியைச் சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து படமாக்க வேண்டி நேரிட்டது.
சரோஜா தேவி அவர்கள் இப்போது பேசுவதைவிடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற் போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக் காட்டவேண்டிய அவசியம் அதிகமில்லை. வெளி உலகத்தைப்பற்றியோ, நல்ல பண்பாட்டைப் பற்றியோ எதுவுமே அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது.
அந்தப் பாத்திரத்திற்குச் சரோஜாதேவி அவர்களும், சரோஜா தேவி அவர்களுக்கு அந்தப் பாத்திரமும் பொருந்திவிட்டன என்று சொல்லும் அளவிற்குச் சரோஜாதேவி அவர்கள் அந்தப்பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு நடித்துப் புகழைப் பெற்றுவிட்டார் என்று துணிந்து கூறமுடிகிறது.
"வண்ணுமில்லே சும்மா!" என்று சொல்லும் கொச்சையான - ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒன்றே போதுமே, அவர் இந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபிக்க...
நகைச்சுவை நடிகைகளில் முதலில் வருவது அங்கமுத்து அவர்கள். சகாயத்திடம் பேசும்போதும், பணத்தைக் கண்டதும் மரியாதை காட்டும்போதும், மகாராஜாவே தனது உணவு விடுதிக்கு வந்து விட்டதை அறிந்து தன்னை மறந்து பேசுவது, ஒடுவது போன்றவைகளைச் செய்யும் போதும் அவ்வளவு இயற்கையாக நடித்துக் காட்டக்கூடிய யாராவது உண்டென்றால் அதில் முதலில் நிற்பவர் அங்கமுத்து அவர்களாகத் தானிருப்பார்கள். ஒரிரண்டு காட்சி களிலேயே தனது நகைச்சுவை நடிப்பால் மக்களைச் சிரிக்கச் செய்து, தனது ஸ்தானம் நிலையானது என்பதை எளிதாக வெளிக் காட்டிய அவருக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பல வெற்றிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுவது தானே சரி.
திருமதி முத்து லட்சுமி அவர்களுடைய வேடம் ஒரு முக்கியக் கருத்தை வெளிப்படுத்தும் வேடம். தகுந்த கணவனைப்பெறப் பூசை செய்தால் போதும் என்ற தத்துவத்தை நம்பி ஒருவனைப் பெற்று விட்டவளும் கூட ஆனால் திருமணமோ இல்லை; அவனுடன் வாழவுமில்லை .
எங்கிருந்தோ வந்தான்; எங்கேயோ போய் விட்டான் . அதுதான் முத்து லட்சுமி அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் காதல் நிலை....
பாவம் ! அவளை அவளுடைய நம்பிக்கை ஏமாற் றிவிட்டது.
அதோடு மக்களுக்கும் ஒரு நல்ல கருத்தை அது போதிக்கிறது.
தகுந்த கணவனைப் பெறுவதற்குப் பூசை செய்தால் போதாது; பெண்ணுக்குதேவையான அன்பு, அறிவு, ஆற்றல் இவைகளிலிருந்தால் தகுந்த கணவன் கிடைப்பான் என்பதையும் சொல்லுகிறது.
இந்தப் பாகத்தை மிகப்பொருத்தமாக நடித்துப் படத்தின் திருப்பத்தில் மக்களை மகிழ்ச்சி நிறைந்த பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்றார் என்பதை யாரும் சொல்லலாம்.
பாடுபட்டாத் தன்னாலே என்ற பாடலுக்குத் தனி நடனம் ஆடிய சந்திரா அவர்கள், தான் எதிர் காலத்தில் நல்ல ஒரு நிலைக்கு வரக்கூடியவர் என்பதை மக்களின் நினைவிலிருக்குமாறு செய்து கொண்டுவிட்டார்.
நடனமாடியவர்களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. எத்தனையோ படங்களில் நடனமாடியவர்கள்! நடனமாடுவது இவர்களுக்குப் புதிது அல்ல. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் அக்கறையோடு ஆடுபவர்கள்தான். நானும் பல படங்களில் இவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் நாடோடி மன்னனில் இவர்கள் காட்டிய அக்கறை வேறுவிதமானது. ஒரு ஷாட் எடுக்க
இரண்டு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டி நேரும். அப்போதும் கூடச் சலிப்படையாமல் அழைத்ததும் வந்து புதுத் தென்போடு ஆடிய இவர்களின் அக்கறையை எப்படிப் பாராட்டுவது? இவர்களில் முன்னணி நட்சத்திரமாக வரக்கூடியவர்கள் பலருண்டு. வெகுவிரை வில் இவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்குமென்றும், சினிமா உலகம் அதை இழந்து விடாதென்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
அழகு நடிப்பு நடனமாடும் திறமை - பேச்சு வன்மை - சிலருக்கு நன்கு பாடவும் தெரியவும், - இதைவிட, கதாநாயகி வேடத்திற்கோ , வில்லியாக நடிப்பதற்கோ வேறு தகுதி என்ன வேண்டும். ஆண்களும், பெண்களும் இரவு இரண்டு மணிக்கு, வேறு படத்திலுள்ள வேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்து மேக்-அப், புதுவிதத் தலையலங்காரம் முதலியவற்றைச் செய்து, உடைகள் அணிந்து, செட்டிற்கு வந்து வேலை செய்தனர்.
இவர்களின் அன்புப் பணியினால் நாடோடி மன்னனின் உச்ச நிலைக் காட்சிகளுக்கு உயிர் ஊட்டப்பட்ட தென்றால் போதாதா?.......
இதைவிட இக்கலைஞர்களின் வெற்றிக்கு என்ன அத்தாட்சி வேண்டும்? திராவிட மொழிப்பாடலான நான்கு மொழிப் பாடல்களுக்கு நடனம் ஆடியவர்களிலும் பலர் இருக்கின்றனர், எதிர்கால நட்சத்திரங்களாகத் தகுதி பெறக்கூடியவர்கள்.
பயப்படாமல் துணிந்து முயற்சி செய்தால், புதுமுகங்கள் இல்லையே என்று கூறுகிறவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைக்கும் அளவுக்கு நல்ல நல்ல புதுமுகங்கள் கிடைப்பார்கள்.
இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததே போதும், இந் நடிகைகள் கலைத் திறமையை வெளிக் காண்பிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்கு.
                                                                                                                                                                                                                                                                        தொடரும்.....