Tuesday, 7 April 2020

எம்.ஜி.ஆரும் நானும் சிறைச்சாலையில் || எஸ்.எஸ்.ராஜேந்திரன் ||
1958 ஜனவரியில், தந்தை பெரியார் மற்றும் தமிழகத் தலைவர்களை விமர்சித்துப் பிரதமர் நேரு அவர்கள் நான்சென்ஸ்என்று சொன்னகைக் கண்டித்து, தமிழகம் வரும்போது நேருவுக்கு நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டிட வேண்டுமென அண்ணா அவர்கள் கழகத்தின் முடிவை அறிவித்தார்.
நேரு வரும் விமானம், சென்னையில் இறங்கும் போது நேருவின் கண்களுக்கு எங்கு நோக்கினும் கருப்புக் கொடியாகத் தெரிய வேண்டும். கழகத் தோழர்கள் அத்தனை பேரும் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போதெல்லாம் கழகத்துக்கு அவ்வளவாக நிதி  வசதி கிடையாது. இதுபோன்ற நிலைமைகள் ஏற்படும்போது அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும்தான் அதற்கான முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்., எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய சினிமாக் கம்பெனிகளுக்குச் சொந்தமாகத் தையல் இயந்திரங்கள் இருந்தன. ஆகவே இரவு பகலாகக் கறுப்புக் கொடிகள் தயாரிப்பது போன்ற மற்றப் பணிகளும் தொடர்ந்தன. அப்போது முன் கூட்டியே அண்ணா அவர்களும் முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் எங்களையும் கண்காணித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணி அளவில், நகரப் போலீஸ் துணை கமிஷனர் எனக்கு போன் செய்தார். ‘இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள். என்றார். நான் எனது வீட்டில் முப்பது போலீஸாருக்கு காலை உணவு தயாரிக்கச் சொன்னேன். இரவெல்லாம் சுற்றிப் பசியோடு வரும் அவர்களுக்காகக் காலை உணவு தயாரானது. நானும் தயாரானேன். உண்டு முடித்தபின் என்னை அழைத்துக் கொண்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றது போலீஸ்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக அண்ணன் எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்று தெரிய வந்தது. நான் போலீஸ்  அதிகாரியிடம் என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதை போலீஸ் ஸ்டேஷனுக்கே அனுப்பிவிடுங்களேன்என்றேன். அதற்கு அவர், 'நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தே வெளியில் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெளியில் நிற்கிற பெருங்கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை . இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமையே மோசமாகிவிடும் என்று சொன்னபோது அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை.
அன்று இரவு எங்கள் இருவரையும் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் காலை என்னைப் போலீஸ் வேனில் மத்திய சிறைக்க அழைத்துச் சென்றனர். அங்கே முதல் மாடியில் முதல் வகுப்புக்கான அறையில் கொண்டு விட்டார்கள். அங்கு எனக்கு முன்பாக எம்.ஜி.ஆர். இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பெயர்தான் முதல் வகுப்பே தவிர, மிகச் சிறிய அந்த அறையில் படுப்பதற்குத் திண்ணைபோல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அழுக்கடைந்த மூட்டைப் பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் ஒரு மெத்தை. அதைப் பயன்படுத்தவே முடியாத நிலையில் கீழே தூக்கிப் போட்டோம். எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணைகளாகப் பயன்பட்டன. வெறும் தரையிலேயே படுத்துக் கொண்டோம்.
அடுத்த நாள் பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் இருந்த சிகப்பு அரிசிச் சாதத்தை, சிரமப்பட்டுச் சாப்பிட்டபடியே எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவர் எவ்விதச் சலனமுமின்றிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “இது மாதிரிச் சாப்பாடு எல்லாம் என் சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன். அதனால் எனக்குப் புதிதல்ல" என்றார்.
அங்கு ஒரு மண் பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொள்ள வேண்டும். அந்தப் பானைக்கு அருகில் இரு மண் சட்டிகள் இருந்தன. அவை எதற்கு என்றேன். அவை 'இரவில், நம் கழிப்பிட வசதிக்காக' என்றார். 'எப்படியண்ணே இதையெல்லாம் நாம் பயன்படுத்துவது' எனச் சங்கடத்துடன் கேட்டேன். வேறு வழி? இது மாதிரி, ஒரே அறையில், ஐந்துபேர், ஆறுபேர் கைதிகளாக இருந்து வருகிறார்களே? அவர்களது நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்' எனச் சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.

முதல் நாள் போலீஸ் நிலையத்தில் இருந்த போதே அங்கிருந்த காவலர்களிடம் சிறை விதி முறைகள், வசதிகள் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகக் கூறினார். அந்த முன்னெச்சரிக்கையும் எதையும் எதிர்கொள்ளும் உணர்வும்தான் அவரது பலம் எனச் சொல்ல வேண்டும்.

நாங்கள் சிறைக்குள் இருப்பது தெரிந்து பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் குவித்துவிட்டனர். அவைகளைக் கட்சித் தொண்டர்களுக்கும், மற்றச் சிறை கைதிகளுக்கும் பகிர்ந்து கொடுத்தோம். இப்படி எங்களை நிறையப் பேர் வந்து பார்வையிட்டுச் செல்வதைக் கண்ட சிறையிலிருந்த ஆயுள் கைதிகள், யார் இவர்கள்? ன மற்றக் கைதிகளை விசாரித்திருக்கின்றனர்.
கலைவாணர் என்.எஸ்.கே., தியாகராஜ பாகவதர், இருவரும் சிறைச் சாலையில் அடைபட்டிருந்த காலத்தில் வந்து சேர்ந்தவர்கள், அந்த ஆயுள் கைதிகள் எனவே அவர்களுக்கு எம்.ஜி.ஆரையும், ன்னையும் தெரியவில்லை. எங்களைப் பற்றி மற்றவர்கள் சொன்னபோது நல்ல அழகா வெப்பா இருக்காங்களே என விமர்சனம் செய்தனராம்.

அப்போது அண்ணன் எம்.ஜி.ஆர். சொன்னார், "நாம் இப்போது சிறையில் இருக்கும் நிலைமையை, நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதுவரை சினிமாவில் சிறைக்கூடங்களை வசதியான இடமாகக் காட்டி வந்துள்ளோம். இனி, நமது படங்களில் இங்குள்ளபடியே காட்டிட வேண்டும். அப்போதுதான் சிறையின் அவலங்கள், மக்களுக்குப் புரியும்'' என்றார்.
வீடு, வீடு விட்டால் ஸ்டூடியோ, மேக்கப், படப்பிடிப்பு, மற்ற வேலைகள்! ஆகவே இந்த மாற்றம், ஒரு வகையில் எங்களுக்கும் பிடித்திருந்தது. பிரதமர் நேரு சென்னை வந்தபோது, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது எனக் கேள்விப்பட்டோம்.
ஒருநாள் இரவு பத்து மணி அளவில் அண்ணாவையும் மற்றும் பலரையும் விடுதலை செய்துவிட்டனர். அடுத்த நாள் காலை 10 மணி அளவில், என்னையும், எம்.ஜி.ஆரையும் விடுதலை செய்தனர். இதை அறிந்த அண்ணா அவர்கள்  நண்பர்களுடன் சிறை வாசலில் காத்திருந்து எங்களை அழைத்துச் சென்று அப்போது ராயப்பேட்டையிலிருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போய், அவரைச் சக்ரபாணியிடம் ஒப்படைத்துவிட்டு, என்னை அழைத்து வந்து என் தாயாரிடத்தில் ஒப்படைத்து, அன்று பகல் உணவை எங்கள் குடும்பத்தாரோடு சாப்பிட்டுவிட்டுப் போனார். அண்ணா, அண்ணாதான்.


நான் வந்த பாதை - எஸ்.எஸ்.ராஜேந்திரன்

புத்தகம்No comments:

Post a Comment