Monday, 13 April 2020

அரசகட்டளையில் " நான் ஒரு குறும்புக்காரி " ! - முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள்


'அரசகட்டளை' படம் பற்றி, ஆரம்ப நாட்களில் செய்தித் தாள்களிலே வந்த செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அவைகளில் எல்லாம் சரோஜா தேவியும், சந்திரகாந்தாவும் மட்டுமே நடிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும்; நானும் உங்களில் ஒருத்தியாக அந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்தவள் தான்.
நாளடைவில் அந்த செய்திகளில் சரோஜாதேவி, சந்திரகாந்தா ஆகியவர்களின் பெயர்களோடு என் பெயரும் சேர்க்கப்படும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
என்னுடைய இந்த நினைவு, நிறைவேறவும் செய்தது.
ஒருநாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.
"சத்தியராஜாவின் 'அரசகட்டளை' படத்தில் உனக்கும் ஒரு வேடம் வாங்கித் தருகிறேன்; நடிக்கிறாயா?"- என்று கேட்டார் அவர்.
 "சரி" என்று சொல்லிவிட்டேன் நான்.
எப்போதுமே நான் ஒரு அவசரக்காரி. அவர் கேட்டவுடன் 'சரி' சொல்லி சம்மதம் தெரிவித்துவிட்ட பிறகுதான் மெல்ல மெல்ல எனக்கு ஒரு அச்சம் தோன்றியது.
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணன், எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் டைரக்ட் செய்யும் படம் அரசகட்டளை.
படத்துறையிலே பண்பட்ட அனுபவம் வாய்ந்தவர் அவர்; சிறந்த குணச்சித்திர நடிகர்.
அப்படிப்பட்டவரை திருப்தி செய்யத் தக்க நடிப்பாற்றல் நமக்கு உண்டா என்ற சந்தேகமே தோன்றி விட்டது எனக்கு.
ஏதாவது ஒரு வேடத்தை ஏற்று, எதிலும் சேராமல் நடித்து அவருடைய அதிருப்திக்கு ஆளாவது சரியில்லை அல்லவா? ஆகவே -
"என்ன வேடம் எனக்கு?" என்று கேட்டேன் எம்.ஜி. ஆரிடம்.
குறும்புக்காரப் பெண்ணொருத்தி வேடம்" என்றார் அவர்.
அவ்வளவுதான்; தலைகால் புரிய வில்லை எனக்கு; அவ்வளவு மகிழ்சி; ஏனென்றால், சின்ன வயது முதலே குறும்புக்காரி என்று பெயரெடுத்தவள் நான்.
குறும்பும் குதூகலமும்தான வாழ்க்கை என்று நினைப்பவள்.
அதாவது, கடினமானது, கனமானது கஷ்டமானது என்று பலபேரால் சொல்லப்படும் வாழ்க்கையானது, லேசானதாக மாற, இன்ப மயமாக ஆக குறும்புத்தனத் தோடு கூடிய பரபரப்பும் சுறு சுறுப்புமே சிறந்த அஸ்திவாரம் என்று எண்ணியிருப்பபவள் நான்.
இப்படிப்பட்ட நான், எனக்குக் கிடைக்கும் வேடம், குறும்புக்காரப் பெண்ணின் வேடம்தான் என்றால் விட்டுவிடுவேனா என்ன!
அரசகட்டளை'யில் அந்த வேடத்திலே நடிக்க, நான் எனது பூரண சம்மதத்தைத் தெரிவித்தேன், திருப்திகரமாக நடித்துவிட முடியும் என்கிற தைரியத்தோடு.
சின்ன வயதுச் சிங்காரி அவள்!
சீராட்டிப் பாராட்டிச் செல்வாக்கோடு வைத்திருக்க தாய் தந்தையற்றவள் அனாதை!
வறுமை அவளது உடன் பிறப்பு!
அன்போடும் ஆசையோடும் பேசிப்பழக அத்தான் ஒருவன் அவளுக்கு உண்டு!
அவளைப் போலவேதான் அவனும்  செல்வச் செழிப்பில்லாத குடும்பத்திலே பிறந்தவன்!
அவளுக்கு ஆதரவாயிருந்த அந்த அத்தானுக்குத் திடீரென்று மணிமுடி சூட்டப்படுகிறது; மன்னனாகிவிட்ட அத்தானைக் கண்டு மலைத்துப் போய்விடுகிறாள் அவள்.
தனக்கு மட்டுமே சொந்தமான அத்தான், நாட்டுக்குச் சொந்தமாகி தன்னை விட்டு எங்கேயோ விலகிச்சென்று கொண்டிருப்பதாக எண்ணிப் புலம்புகிறாள், அவள்.
இந்த, 'அவள்' வேடம் தான், 'அரசகட்டளை'யிலே என் வேடமாகும்!படப்பிடிப்பு துவங்கிய காலத்தில் - என் முன்னே 'பெரியவர்' (சக்ரபாணி) வந்து நின்றாலே எனக்கு நடுக்கம் ஆரம்பித்துவிடும்; இதற்குக் காரணம் பயம்தான் என்று நான் சொல்லமாட்டேன் ஏதோ அப்படி ஒரு மரியாதை உணர்வு!
வசனத்தைச் சொல்லிக்கொடுப்பார்கள்; அப்படியே மலைத்துப்போய் நிற்பேன் நான்!
என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு இனிய முகத்துடன் பெரியவர் சொல்லுவார்.
இதுதாம்மா வசனம்; எங்கே...சொல்லு பார்க்கலாம். மறுபடியும் ஒருமுறை வசனம் சொல்லப்படும். துணிந்து சொல்லுவேன் நான்.
இவ்வாறாக, படப்பிடிப்பின் போதெல்லாம் என்னோடு இனிய முகத்துடன் பேசிப் பழகினார்கள் டைரக்டர் எம்.ஜி.சி. அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் களும்.
எம்.ஜி.ஆருடன் நான் நடிக்கவேண்டிய காட்சிகளில் எல்லாம், எம்.ஜி.ஆர். அவர்களே எனக்கு நடித்துக் காட்டி, என் நடிப்புக்கு மெருகூட்டியதை நான் மறக்கவே முடியாது.
இதனால் -----
சரளமாகப் பேசி நடித்து, அந்த குறும்புக்காரி வேடத்தை அவர்கள் எந்த அளவுக்கு எதிர்ப்பார்த்தார்களோ, அந்த அளவுக்குச் செய்திருக்கிறேன் நான்.  
இப்படி 'அரசகட்டளை'யில் நடித்த ஒவ்வொருவருமே  சத்தம் பங்கைச் சிறப்புடன் செய்து முடித்திருக்கிறோம்.
 சத்தியராஜாவின் 'அரச கட்டளை' ஒரு வெற்றிப் படமே என்று நிர்ணயிக்க இதுவே போதுமானது அல்லவா? மக்கள் திலகம் இதுவரை நடித்த படங்களுக் கெல்லாம் மகுடம் வைத்தாற்போல விளங்கப் போகிறது, அரச கட்டளை !அரசகட்டளை சிறப்பு மலர்
சமநீதி பத்திரிக்கை  

No comments:

Post a Comment