Sunday, 12 April 2020

நினைத்தோம் - முடித்தோம் ! - அரசகட்டளை பட தயாரிப்பாளர் எம்.சி.ராமமூர்த்திஅரசகட்டளை' பற்றி கட்டுரை கேட்டார், சமநீதியின் ஆசிரியர். என்ன எழுதுவது? சிந்தித்தேன். நடந்துபோன நிகழ்ச்சிகள்தான் நினைவுத் திரையில் தோன்றின.


சமூகச் சித்திரங்களே தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நேரமிது. அதே நேரத்தில், என் சிறிய தந்தையார் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து வெற்றி முரசு கொட்டிய மர்மயோகி, மலைக்கள்ளன், அலிபாபா, நாடோடிமன்னன். ஆகிய படங்கள் என் நினைவுக்கு வந்தன.
மன்னன் உடையில் வீரச் செயல் புரியும் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே வரவேற்புண்டு என்று தோன்றியது. இப்படி ஒரு படம் இப்போது வந்தால்..?
ஒரு நாள் என் சிறிய தந்தையாருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.
"ஏய், நீ ஒரு படம் எடு; கதையை முடிவு செய்!" என்றார்.
"நானா?" என்றேன். வியப்பு - திகைப்பு  - அச்சம்!
"உண்மைதான்!" என்றார். அஞ்சிய எனக்கு அவர் தந்தது துணிவு: ஊட்டியது ஊக்கம்!
அந்த அன்புக் கட்டளையிலே பிறந்தது தான் இந்த 'அரச கட்டளை'!
என் தந்தையாரே டைரக்டரானார்! வேலை துவங்கியது. இடையிலே எத்தனை எத்தனை தடைகள் -இடர்ப்பாடுகள் - தொல்லைகள் துன்பங்கள்!
அதன் காரணமாக நான் மனச்சோர்வுற்று வருந்தும் நேரத்தில் எல்லாம், என் தந்தையார், சிறிய தந்தையார், இருவரிடமிருந்தும் எனக்குக் கிடைத்த அறிவுரைகள் ஏராளம்! ஏராளம்!
படத்தை முடிக்க மட்டுமல்ல; என் வாழ்க்கையை நடத்த அந்தப் பெரும் பயணத்திலே வந்து போகும் இடர்ப்பாடு களைக் கடக்க -விரட்ட- வெற்றிகாண அந்த அறிவுரைகள் எனக்கு என்றும்பயன்படும்.உனக்கு விரக்தி ஏற்படக்கூடாது. அதுவும் இந்த வயதில் நிச்சயமாகக் கவலையே கூடாது. இன்றுதான் புதிதாகப் பிறந்தோம் என்று எண்ணிக்கொள். தொடர்ந்து கடமையைச் செய். 'மோப்பக் குழையும் அனிச்ச'மாக எப்போதுமே இருக்காதே!" இவை என் தந்தையார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரைகள் ஆகும்.
"சினத்தை அடக்கு! அறிவையும் உடலையும் நன்கு பேணி பாதுகாத்துக்கொள்! எவ்வளவு வேலை இருந்தாலும், உடற் பயிற்சியை மறந்து விடாதே! நிறையப்படி எழுது சிந்தனை செய்!" இவை சிறிய தந்தையார் எனக்களித்த பாடத்தின் ஒரு பகுதி.
நான் வணங்கி வழிபடும் பாட்டியும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த அறிவுரைகளை அன்புக் கட்டளைகளாக எற்று, அந்த வழியிலேயே நடக்கத் தொடங்கிவிட்டேன் நான்.
தவறு செய்யும் நேரத்தில், அதைச் சுட்டிக் காட்டி, திருத்தும் அமைதியான முறை அவருக்கே உரியது.
எனவே இவர்கள் இருவருமே எனது இரு கண்கள்! எனது எண்ணங்களுக்கும்,செயல்களுக்கும் உறுதுணையாயிருந்து வழிகாட்டி நடத்திச் செல்லும் ஒளிவிளக்குகள்!
இந்த மலையளவு துணையுடன் நான் ஈடுபட்ட இந்தப் பெரிய காரியம் நலமுற முடிய உறுதுணையாக இருந்த தொழல் நுணுக்கக் கலைஞர்களின் பேருதவியை என்றும் மறக்க முடியாது-அவர்கள் அனைவரூக்கும்  என் மரியாதை கலந்த நன்றிகள் - வணக்கங்கள்!
இந்த இரு கண்களின் துணைகொண்டு நான் இன்னும் பல பயணங்களிலே ஈடு படுவேன்; எவர் வரினும் அஞ்சேன்; நீல லேன்; தொடர்ந்து பணியாற்றுவேன்.
என்று  உறுதி கூறுகிறேன்.

அரசகட்டளை சிறப்பு மலர்
சமநீதி பத்திரிக்கை  

No comments:

Post a Comment