Wednesday, 1 April 2020

புரட்சி நடிகரின் குண நலன்கள் - துணிச்சல் - தாய் உள்ளம் - கடமை - பாசம் || வி. இராமமூர்த்தி , பி.ஏ.||புரட்சி நடிகரின் குண நலன்கள்
வி. இராமமூர்த்தி , பி..


ஒரு சினிமாப் பத்திரிகையாளன் என்கிற முறையில் புரட்சித் தலைவரைப் படப்பிடிப்பில் சந்தித்தபோது , பேசிப் பழகிய போது . நேரில் கண்ட சில உண்மைகளை இங்கே சிறு கட்டுரை வடிவில் தந்திருக்கிறேன்.

துணிச்சல் :
மங்களூரில் மீனவ நண்பன் படப்பிடிப்பு. அப்போது அ.தி.மு.. கட்சியை புரட்சித் தலைவர் தொடங்கியிருந்த நேரம் என்று நினைக்கிறேன். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நாட்டில் அவசர நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தார். அவரது மகன் சஞ்சய் காந்தியின் செல்வாக்கும், ஆதிக்கமும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன.
சென்னையிலிருந்து புரட்சித் தலைவருடன் ஐந்து பத்திரிகையாளர்கள் மங்களூருக்குச் சென்றிருந்தோம். அப்போது இடைவேளையில் அவருடன் நாங்கள், நாட்டின் பலவிதமான பிரச்னைகளைப் பற்றி விவாதிப்போம்.
நான் ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன். “சஞ்சய் காந்தி அவர்கள் தற்போது ஐந்து அம்ச திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டு வருகிறார். அந்த ஐந்து அம்சத் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?'' - இது என் கேள்வி.
புரட்சித் தலைவர் உடனே பதில் சொன்னார். ''நாட்டுக்கு பயனுள்ள திட்டம் எதுவாயினும் வரவேற்கலாம். ஆனால் 5 அம்சத் திட்டம் 20 அம்சத் திட்டம் என்று தனித்தனியே பிரித்து தனித்தனியாகக் கூறப்படுவதை நான் விரும்பவில்லை.
நல்ல திட்டம் எதுவாயினும் அது பிரதமரின் பெயரிலேயே அறிவிக் கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்டவர்கள் தரும் திட்டமாக இருக்கக் கூடாது. உதாரணமாக, நான் ஒரு பொறுப்பில் இருந்து செயல்படும்போது எனது மனைவி அவளது விருப்பப்படி அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பது முறையாகாது. அதுபோல 5 அம்சத் திட்டம் என்பது நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படுகிறது என்றால் வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால் பிரதமரின் திட்டமாகத்தான், அதாவது அரசின் திட்டமாகத்தான் அது அமைய வேண்டுமே தவிர, தனிப்பட்டவர்களின் திட்டமாக இருக்கக் கூடாது.''
புரட்சித் தலைவரின் இந்தக் கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளி வந்தன. சில இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அதைப் பற்றிக் கவலைப் படவில்லை . கடைசியில் அவரது வாதத்திலிருந்த நியாயத்தை சஞ்சய் காந்தியே ஒப்புக்கொண்டார்.
பிரதமர் இந்திரா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் , குறிப்பாக அவசர நிலை பிரகடனத்திலிருந்தபோது - சஞ்சய் காந்தியின் கை ஓங்கி யிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். வெளியிட்டக் கருத்துக்கள் அவரது துணிச்சலை வெளிப்படுத்தின.

தாய் உள்ளம்:
ஊட்டியில் நவரத்தினம் படப்பிடிப்பு, பயங்கரமான குளிர். ஊட்டியிலேயே அதிக உயரமுள்ள தொட்டபெட்டாவில் படப்பிடிப்பு. ஏறத்தாழ எண்பது பேர் படப்பிடிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். மக்கள் திலகம் ஒப்பனையுடன் லொகேஷனுக்கு வந்தார். 'அவுட்டோர் யூனிட உட்பட பணியாற்றுபவர்கள் அத்தனைபேரும் கடுங்குளிரில் நடுங்குவதைக் கவனித்தார். உடனே தனது உதவியாளரான (மறைந்த) சபாபதியை அழைத்து, அவரது காதில் ஏதோ சொன்னார்!
அரை மணி நேரத்தில் திரும்பி வந்த சபாபதியின் கையில் மிகப் பெரிய துணி மூட்டை காணப்பட்டது. மூட்டையை திறந்து பார்த்தால் எண்பது ஸ்வெட்டர்கள். அத்தனை பேருக்கும் அந்த ஸ்வெட்டர்களை அவரே கொண்டு கொடுத்து இதைப் போட்டுக் கொள்ளுங்கள் ! அப்புறம் வேலை செய்யலாம், என்று சொன்னார். கடுங்குளிரில் பணியாற்றுகிறவர்களுக்குத் தனது சொந்தச் செலவில் ஸ்வெட்டர்கள் வாங்கிக் கொடுத்தது அவரது தாய் உள்ளத்தைதான் வெளிப்படுத்தியது என்று ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தொட்டபெட்டாவில் சொன்ன காட்சி இன்னமும் என் கண்முன் நிற்கிறது.

கடமை :
உடுப்பியில் இன்று போய் என்றும் வாழ்க '' படப்பிடிப்பு. நான்கு பத்திரிகையாளர்கள் படப்பிடிப்பைப் பார்க்கப் போயிருந்தோம். எங்களுடன் வந்திருந்த 'திரைஞானி' பத்திரிகையாளருக்கு உடுப்பி வந்தது முதல் உடல் நிலை சரியில்லை. ஹோட்டல் ரூமிலேயே தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார். நாங்கள் மட்டும் மால்பே கடற்கரைக்கு படப் பிடிப்பைப் பார்க்கச் சென்று விட்டோம்.
புரட்சித் தலைவர் என்னிடம், ''எப்போது சென்னையிலிருந்து புறப்பட்டீர்கள்?
பயணம் சௌகரியமாக இருந்ததா?'' என்று கேட்டார்.
ஒரு பத்திரிகையாளர் மட்டும் உடல் நலமின்மையால் ஹோட்ட லிலேயே இருக்கிறார் என்று சொன்னதும், உடனே தயாரிப்பாளரை அழைத்து, நமது படப்பிடிப்புக்கு வந்திருப்போரை சரியாக கவனிக்க வேண்டியது நமது கடமை. உடனடியாக அந்தப் பத்திரிகையாளரை ஒரு பெரிய டாக்டரிடம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள். எல்லா விதமான டெஸ்டுகளையும் எடுக்கச் சொல்லுங்கள், என்று சொன்னார்.
உடனே கார் பறந்தது. பத்திரிகையாளரை டாக்டர்கள் பரிசோதித்தனர். எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன. உடல் நலமின்மைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இன்னொரு அம்சம் எங்கள் எல்லோரையும் மெடிக்கல் செக்-அப்' செய்து கொள்ள சொல்லி எம்.ஜி.ஆர். உத்திர விட்டிருந்தார்.

பாசம் :
வீனஸ் பிக்சர்ஸின் ஊருக்கு உழைப்பவன் படப்பிடிப்பு பெங்களூர் விதியொன்றில் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. ஒரு வயோதிகத் தாய் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு எம்.ஜி.ஆரை ஆர்வமுடன் பார்க்க வந்தாள். ஒரு போலீஸ்காரர் அவளை அதட்டி ''அங்கு போகக் கூடாது'' என்று விரட்டிக் கொண்டி ருந்தார். அதைக் கவனித்த மக்கள் திலகம் தானே அத்த வயோதிக தாயிடம் சென்று ன்றி! ஆரோக்யவா? மக்களு யாக இதாரே?'' என்று கேட்டார். என்னங்க: சௌக்யமா? உங்களது குழந்தைகள் எப்படி இருக்காங்க? என்று அப்போது அந்த தாயிடம் கன்னடத்தில் பேசினார். அந்த தாயுள்ளம் மகிழ்ந்து நல்லா இருக்கணும் நீங்க என்று இரண்டு கைகளையும் தூக்கி அவரை ஆசீர்வதித்த காட்சியை என்னால் மறக்க முடியாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது அவரைப் பாராட்டும் வகையில் சாரதா ஸ்டுடியோவில் மறைந்த பெருந் தலைவர் காமராஜர் தலைமையில் மாலை 6 மணிக்கு ஒரு விழா நடந்தது. அன்று எம்.ஜி.ஆருக்கு இரவு ஒன்பது மணி வரை தேவர் பிலிம்ஸ் ஷூட்டிங் வாகினி ஸ்டுடியோவில் இருந்தது.
தேவர் பிலிம்ஸ் அதிபர் மறைந்த சின்னப்ப தேவரிடம். எம்.ஜி.ஆர். இன்று மாலை 6 மணிக்கு தம்பி சிவாஜிக்குப் பாராட்டு விழா நடக்கிறது. சக கலைஞருக்கு பாராட்டு விழா நடக்கும் போது அதில் நாம் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. ஒரு மணி நேரம், அல்லது இரண்டு மணி நேரம், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றால் ஷூட்டிங்கை நள்ளிரவு வரை நடத்துவோம். அதனால் ஏற்படும் செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி, அவரை ஒப்புக் கொள்ள வைத்ததுடன் சின்னப்பா தேவர், அசோகன் உட்பட அப்படத்தில் நடித்த அத்தனை பேரையும் அந்த விழாவுக்குக் கொண்டு வந்து விட்டார் எம்.ஜி.ஆர்.
என்னே அவர் பாசம்!Article From : Impact MGR & Films  

by   - Movie Appreciation Society (Regd)


Article Shared By : Prof .S.Selvakumar (Ardent Fan Of MGR )
No comments:

Post a Comment